கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி சீருடைகள் அளவு சரியில்லை: மாணவ, மாணவிகள் அவதி

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், அவசர கதியில் தைத்து வழங்கப்படுவதால், அளவு சரியில்லாமல் மாணவ, மாணவிகள் அவதியடைகின்றனர். இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், ஆண்டுக்கு, நான்கு ஜோடி, சீருடை வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும், கடந்த வாரம் சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பேன்ட், சர்ட் அளவு சரியில்லாமல் தைக்கப்பட்டிருந்தன.
சில சீருடைகள், கிழிந்தும் காணப்பட்டன. மேலும், சில மாணவர்களுக்கு, இறுக்கமாகவும், சில மாணவர்களுக்கு, "தொள தொள" எனவும் ஆடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: சீருடைகள், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரை கால் பேன்ட் வழங்கப்படுகிறது.
குளிர் பிரதேசமான நீலகிரியில், 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, முழுக் கால் சட்டை அணிந்து தான், பள்ளிக்கு வருகின்றனர். இதனால், அரசு வழங்கும் சீருடையை, மாணவர்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். பயன்படுத்த தகுதியற்ற நிலையில், சீருடைகள் வழங்கப்படுவதால், அரசு பணம் தான் விரயமாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

>>>பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் நடக்க இருக்கும், ஓபன் சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள, "தி சில்ரன்ஸ் கிளப்' சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான, ஓபன் சதுரங்க போட்டி, மயிலாப்பூர் திருவேங்கட முதலி அரங்கில் நடக்கிறது. வரும் பிப். 2, 3 தேதிகளில், போட்டி நடக்க உள்ளது.
தகுதியுள்ள மாணவ, மாணவியர், குழந்தைகள் மனமகிழ் மன்ற செயலரின், 99405 57388 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு, விவரங்களை அறியலாம்.

>>>ஜனவரி 12 [January 12]....

நிகழ்வுகள்

  • 475 - பசிலிஸ்கஸ் பைசண்டைன் பேரரசனாக முடி சூடினான்.
  • 1528 - சுவீடனின் மன்னனாக முதலாம் குஸ்தாவ் முடி சூடினான்.
  • 1539 - புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
  • 1853 - தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
  • 1875 - சீனாவின் மன்னானாக குவாங்-சூ முடி சூடினான்.
  • 1908 - முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
  • 1915 - அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
  • 1918 - பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியது.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.
  • 1964 - சான்சிபாரின் புரட்சிவாதிகள் சன்சிபார் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
  • 1967 - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி: நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
  • 1970 - நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1976 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
  • 1992 - மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
  • 2004 - உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான ஆர்எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
  • 2005 - புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
  • 2006 - சவுதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
  • 2006 - 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலை சுட்டுக் காயப்படுத்திய மெஹ்மேட் அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  • 2007 - மாக்னாட் வாள்வெள்ளி சுற்றுப்பாதை வீச்சுக்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால்வெள்ளியானது.

பிறப்புகள்

  • 1863 - சுவாமி விவேகானந்தர் (இ. 1902)
  • 1899 - போல் ஹேர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
  • 1960 - டாமினீக் வில்கின்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
  • 1972 - பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

  • 1976 - அகதா கிறிஸ்டி, ஆங்கில எழுத்தாளர் (பி. 1890)
  • 1997 - சார்ல்ஸ் ஹக்கின்ஸ், நோபல் பரிசு பெற்ற கனடிய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் (பி. 1901)

சிறப்பு நாள்

  • தான்சானியா: சான்சிபார் புரட்சி நாள் (1964)
  • இந்தியா: தேசிய இளைஞர் நாள் (சுவாமி விவேகானந்தர் பிறப்பு)

>>>எட்மண்ட் ஹிலாரி...

 
எட்மண்ட் ஹிலாரி... நியூசிலாந்து நாட்டில் பிறந்த இவர் குட்டிப் பையனாக படிப்பில் சுமார்தான். கூச்ச சுபாவம் வேறு. பள்ளிக்கு போகும்பொழுது இரண்டு மணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு கூட்டிப்போனது. அந்தக் கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார். மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார்.

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார். உலகப் போரில் ஈடுபடபோய் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீண்டு வந்தார்.

எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது ஏறிவிட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபடும். அப்பொழுது அங்கு போய் சேர்ந்தார். உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார். நெருங்கிப் பழகிய இருவரும் முன்னேறினார்கள். கடுமையான சூழலில் பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953-ல் தொட்டார்கள்.

யார் முதலில் தொட்டார்கள் என இறுதி வரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே தொட்டதாக சொன்னார்கள். அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் தென் மற்றும் வட துருவங்களை தொட்டார். நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உதவினார். எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட பொழுது, "இயல்பான எளியவன் நான்! புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான். அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன். சிம்பிள்" என்றார்.

(இன்று - ஜன.11: முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட எட்மண்ட் ஹிலாரி மறைவு தினம்.)

>>>ஆசிரியர்கள் பதவி உயர்வு விண்ணப்பங்கள் : பிப்., 8 க்குள் வழங்க கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப். 8 க்குள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல், தாவரவியல், விலங்கியல் 2005-06 வரை உள்ளவர்கள், வரலாறு ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 1997-98 வரை உள்ளவர்கள், வெவ்வேறு பட்டம் பெற்ற 2004-05 வரை உள்ளவர்கள், பொருளியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் 2008- 09, வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2005-06 வரை உள்ளவர்கள்,வணிகவியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 31.12.1992 வரை உள்ளவர்கள்,வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2009-10 வரை உள்ளவர்கள்,புவியியல் 2002-03 வரை உள்ளவர்கள், அரசியல் விஞ்ஞானம் 2002-03 வரை உள்ளவர்கள். உடற்கல்வி இயக்குனர் நிலை 1 - 2002-03 வரை உள்ளவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் மொழிப்பாடம் 31.12.1998 வரை உள்ளவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 31.12.12 வரை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் . முதுகலை ஆசிரியரிலிருந்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு, 31.12.12 ல் பத்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள், பதவி உயர்வு பட்டியலை 22.01.2013 க்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக ,முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2000 -2001 வரை உள்ளவர்கள்.
முதுகலையாசிரியரிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2009 வரை உள்ளவர்கள், 31.01.13க்குள் சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும். பட்டதாரியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, இடைநிலையாசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்கள் ,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தேதிகள், மாவட்டம் வாரியகாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம்:
பிப்., 4 : நாகர்கோவில், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம்.
பிப்.,5 : மதுரை, திண்டுக்கல், தேனி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை.
பிப்., 6 : கரூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, நீலகிரி, சேலம், திருப்பூர்.
பிப்., 7 : நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி.
பிப்., 8 : திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை.
இதற்கு முன்னதாக, முதன்மை கல்வி அதிகாரிகள் விண்ணப்பம் பெற்று ,குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

>>>பி.எட்., சேர்க்கை தேதி ஜனவரி 19 வரை நீட்டிப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், நுழைவுத் தேர்வின்றி தமிழ் வழி பி.எட்., படிப்புக்கான சேர்க்கை, ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை படிப்பு முடித்தவர்கள், இந்தப் படிப்பில் சேரலாம்.
அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் பணியும், தற்போது பணியில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். முகவரி: தமிழ்ப் பல்கலை கல்வி மையம், 10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை-2, 36, மேல வடம் போக்கித் தெரு, மதுரை-625 001. மேலும் விவரங்களுக்கு 90433 43743 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை : அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்று, உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் 21வது பட்டமளிப்பு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: இளைஞர்களை அறிவுடன், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்களாக மாற்றுவதே உயர் கல்வியின் நோக்கம். உலக அளவில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டியது அரசின் கடமை. தமிழகத்தில் தற்போது உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 12 சதவீதம். இதை, 2025ம் ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு கலை மற்றும் அறிவியியல், பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்குவது, மாணவர்களுக்கான இலவச "லேப்டாப்'கள் வழங்குவது, கல்வி நிறுவனங்கள்- தொழிற்சாலைகள் இணைப்பை வலுப்படுத்துவது, அறிவியல் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது. உயர் கல்வியை சர்வதேச தரம் வாய்ந்ததாகவும், அறிவாற்றல் மிகுந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கவும் வகையிலும் இந்த அரசு செயல்படுகிறது. பட்டங்கள் பெறுவதை, சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதற்கான அத்தாட்சி சீட்டாக நினைத்து, எதிர்கால பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் மாணவர்களின் செயல்பாடு அமையவேண்டும், என்றார்.

மாநில உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் பேசுகையில், "தலைமைப்பண்பு, முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் தேவை. பொது வாழ்வில் பெண்களை தகுதியுள்ளவர்களாக மாற்றும் வகையில், பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை பல்கலைகள் வடிவமைக்க வேண்டும்,'' என்றார்.

துணைவேந்தர் மணிமேகலை பேசுகையில், "1984ல் துவங்கப்பட்ட இப்பல்கலை, மகளிர் கல்வி மேம்பாட்டில் முனைப்புடன் செயலாற்றுகிறது. இந்தாண்டு 230 பி.எச்டி., பட்டங்கள், முதுகலையில் 3126, இளங்கலையில் 6459 என மொத்தம் 11,715 பேர் பட்டங்கள் பெற்றுள்ளனர்,'' என்றார். உயர் கல்வி செயலாளர் அபூர்வ வர்மா, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பங்கேற்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...