கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>செயற்கை ரத்தம் உருவாக்கி சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் சாதனை

சாலை போன்ற விபத்து ஏற்படும் நேரங்களில் நிலவும் ரத்தப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் செயற்கை ரத்தத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள்.
இது குறி்த்த விபரம் வருமாறு: இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது. ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை மாற்றும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்றாண்டுகளாக இம் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.விஞ்ஞானிகளின் முயற்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியது.

இதனையடுத்து ஐ.ஐ.டி நிறுவனத்தின் டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான , குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர். இது குறித்து டாக்டர் சோமா கூறுகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் என தெரிவித்தார்.

செயற்கை ரத்தம் : செயற்கை ரத்தம் தயாரிப்பு சோதனை குறித்து விளக்கம் அளித்த டாக்டர் சோமா கூறியதாவது : ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும்; இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும்; தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும்; இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது; இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐஐடி.,யின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது; இதுவரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது; ஆனால் இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் நோய் தொற்று இல்லாததாகவும் இருக்கும்; அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

>>>பள்ளிகளில் தேர்வுகளுக்கான கட்டணத்தில் சலுகை கிடைக்குமா?

பள்ளிகளில் நடக்கும் பல்வேறு வகை தேர்வுகளுக்கான கட்டணத்தை, அரசு வழங்க முன்வர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசால் வழங்கப்படுகின்றன. காலணி, கல்வி கட்டணம் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதனால் பள்ளி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணமும் அரசால் செலுத்தப்படுகிறது.
இத்தனை சலுகைகளுடன், மேலும் ஒரே ஒரு சலுகையையும் அளித்து விட்டால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைவர். அது பல்வேறு வகை தேர்வு கட்டணம்தான். பள்ளிகளில் ஒரு ஆண்டில் காலாண்டு, அரையாண்டு, பருவத் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் உட்பட பல வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கென மாணவர்களிடம் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதற்கென உயர்நிலை அளவில் ஒரு தலைமை ஆசிரியரும், மேல்நிலையில் ஒரு தலைமை ஆசிரியரும் அமைப்பாளராக செயல்பட்டு, வினாத்தாள், தேர்வுத் தாளுக்கென கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதைக் கூட செலுத்த இயலாத நிலையில் கிராமப்புற, அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பலர் உள்ளனர். கல்விக்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் அரசு, இந்தச் சிறிய தொகையையும் ஏற்றால், பெற்றோர் மகிழ்ச்சியடைவர்.

>>>பள்ளி சீருடைகள் அளவு சரியில்லை: மாணவ, மாணவிகள் அவதி

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், அவசர கதியில் தைத்து வழங்கப்படுவதால், அளவு சரியில்லாமல் மாணவ, மாணவிகள் அவதியடைகின்றனர். இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், ஆண்டுக்கு, நான்கு ஜோடி, சீருடை வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும், கடந்த வாரம் சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பேன்ட், சர்ட் அளவு சரியில்லாமல் தைக்கப்பட்டிருந்தன.
சில சீருடைகள், கிழிந்தும் காணப்பட்டன. மேலும், சில மாணவர்களுக்கு, இறுக்கமாகவும், சில மாணவர்களுக்கு, "தொள தொள" எனவும் ஆடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: சீருடைகள், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரை கால் பேன்ட் வழங்கப்படுகிறது.
குளிர் பிரதேசமான நீலகிரியில், 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, முழுக் கால் சட்டை அணிந்து தான், பள்ளிக்கு வருகின்றனர். இதனால், அரசு வழங்கும் சீருடையை, மாணவர்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். பயன்படுத்த தகுதியற்ற நிலையில், சீருடைகள் வழங்கப்படுவதால், அரசு பணம் தான் விரயமாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

>>>பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் நடக்க இருக்கும், ஓபன் சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள, "தி சில்ரன்ஸ் கிளப்' சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான, ஓபன் சதுரங்க போட்டி, மயிலாப்பூர் திருவேங்கட முதலி அரங்கில் நடக்கிறது. வரும் பிப். 2, 3 தேதிகளில், போட்டி நடக்க உள்ளது.
தகுதியுள்ள மாணவ, மாணவியர், குழந்தைகள் மனமகிழ் மன்ற செயலரின், 99405 57388 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு, விவரங்களை அறியலாம்.

>>>ஜனவரி 12 [January 12]....

நிகழ்வுகள்

  • 475 - பசிலிஸ்கஸ் பைசண்டைன் பேரரசனாக முடி சூடினான்.
  • 1528 - சுவீடனின் மன்னனாக முதலாம் குஸ்தாவ் முடி சூடினான்.
  • 1539 - புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
  • 1853 - தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
  • 1875 - சீனாவின் மன்னானாக குவாங்-சூ முடி சூடினான்.
  • 1908 - முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
  • 1915 - அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
  • 1918 - பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியது.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.
  • 1964 - சான்சிபாரின் புரட்சிவாதிகள் சன்சிபார் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
  • 1967 - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி: நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
  • 1970 - நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1976 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
  • 1992 - மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
  • 2004 - உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான ஆர்எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
  • 2005 - புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
  • 2006 - சவுதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
  • 2006 - 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலை சுட்டுக் காயப்படுத்திய மெஹ்மேட் அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  • 2007 - மாக்னாட் வாள்வெள்ளி சுற்றுப்பாதை வீச்சுக்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால்வெள்ளியானது.

பிறப்புகள்

  • 1863 - சுவாமி விவேகானந்தர் (இ. 1902)
  • 1899 - போல் ஹேர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
  • 1960 - டாமினீக் வில்கின்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
  • 1972 - பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

  • 1976 - அகதா கிறிஸ்டி, ஆங்கில எழுத்தாளர் (பி. 1890)
  • 1997 - சார்ல்ஸ் ஹக்கின்ஸ், நோபல் பரிசு பெற்ற கனடிய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் (பி. 1901)

சிறப்பு நாள்

  • தான்சானியா: சான்சிபார் புரட்சி நாள் (1964)
  • இந்தியா: தேசிய இளைஞர் நாள் (சுவாமி விவேகானந்தர் பிறப்பு)

>>>எட்மண்ட் ஹிலாரி...

 
எட்மண்ட் ஹிலாரி... நியூசிலாந்து நாட்டில் பிறந்த இவர் குட்டிப் பையனாக படிப்பில் சுமார்தான். கூச்ச சுபாவம் வேறு. பள்ளிக்கு போகும்பொழுது இரண்டு மணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு கூட்டிப்போனது. அந்தக் கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார். மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார்.

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார். உலகப் போரில் ஈடுபடபோய் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீண்டு வந்தார்.

எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது ஏறிவிட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபடும். அப்பொழுது அங்கு போய் சேர்ந்தார். உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார். நெருங்கிப் பழகிய இருவரும் முன்னேறினார்கள். கடுமையான சூழலில் பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953-ல் தொட்டார்கள்.

யார் முதலில் தொட்டார்கள் என இறுதி வரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே தொட்டதாக சொன்னார்கள். அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் தென் மற்றும் வட துருவங்களை தொட்டார். நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உதவினார். எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட பொழுது, "இயல்பான எளியவன் நான்! புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான். அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன். சிம்பிள்" என்றார்.

(இன்று - ஜன.11: முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட எட்மண்ட் ஹிலாரி மறைவு தினம்.)

>>>ஆசிரியர்கள் பதவி உயர்வு விண்ணப்பங்கள் : பிப்., 8 க்குள் வழங்க கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப். 8 க்குள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல், தாவரவியல், விலங்கியல் 2005-06 வரை உள்ளவர்கள், வரலாறு ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 1997-98 வரை உள்ளவர்கள், வெவ்வேறு பட்டம் பெற்ற 2004-05 வரை உள்ளவர்கள், பொருளியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் 2008- 09, வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2005-06 வரை உள்ளவர்கள்,வணிகவியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 31.12.1992 வரை உள்ளவர்கள்,வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2009-10 வரை உள்ளவர்கள்,புவியியல் 2002-03 வரை உள்ளவர்கள், அரசியல் விஞ்ஞானம் 2002-03 வரை உள்ளவர்கள். உடற்கல்வி இயக்குனர் நிலை 1 - 2002-03 வரை உள்ளவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் மொழிப்பாடம் 31.12.1998 வரை உள்ளவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 31.12.12 வரை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் . முதுகலை ஆசிரியரிலிருந்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு, 31.12.12 ல் பத்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள், பதவி உயர்வு பட்டியலை 22.01.2013 க்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக ,முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2000 -2001 வரை உள்ளவர்கள்.
முதுகலையாசிரியரிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2009 வரை உள்ளவர்கள், 31.01.13க்குள் சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும். பட்டதாரியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, இடைநிலையாசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்கள் ,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தேதிகள், மாவட்டம் வாரியகாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம்:
பிப்., 4 : நாகர்கோவில், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம்.
பிப்.,5 : மதுரை, திண்டுக்கல், தேனி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை.
பிப்., 6 : கரூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, நீலகிரி, சேலம், திருப்பூர்.
பிப்., 7 : நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி.
பிப்., 8 : திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை.
இதற்கு முன்னதாக, முதன்மை கல்வி அதிகாரிகள் விண்ணப்பம் பெற்று ,குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...