கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சுண்டைக்காய்...

 
சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

>>>ஸ்டீவ் ஜாப்ஸ்...

 
மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள். கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க உலகத்தின் உதடுகள் எழுத்துக் கூட்டிய போது, அதன் சுவையை உணர்த்திய பெயரே ஆப்பிள்தான்!

கையாளச் சிரமமான காரியம் என்று கம்ப்யூட்டர் குறித்த கருதுகோளை உடைத்தது கூட, ஆப்பிள் செய்த அரிய சாதனைதான். வெற்றியின் உச்சத்தில் இருந்த ‘ஆப்பிள்’ விழுந்த கதைகூட, வெல்ல நினைப்பவர்களும் சொல்லும் பாடம்தான்.

ஆப்பிள் என்கிற அதிசயக் கனவு மலர அடித்தளமாய் விழுந்த விதைகளும், பிறகு வளர்ந்த நிலைகளும், வளர்ந்த நிலையில் எழுந்த விரிசல்களும், ஒரு நாடகத்தின் சுவாரஸ்யத்தோடு நடந்தேறின.

சான்பிரான்
ஸிஸ்கோவிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சிலிகான் பள்ளத்தாக்கின் சிறிய நகரமொன்றில், தன் பட்டப்படிப்பை முடித்தபிறகு 1975-இல் என்ன செய்வதென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த இளைஞர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்தியாவில் கொஞ்ச காலம் சுற்றித் திரிந்து விட்டுத் திரும்பியிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அட்டாரியில், வீடியோ கேம் புரோகிராமராகப் பகுதி நேரப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

கம்ப்யூட்டரை ஒரு பயனுள்ள பொழுது போக்காகக் கருதிக் கொண்டிருந்த இளைஞர்கள் இணைந்து ‘ஹோம்ப் ரூ கம்ப்யூட்டர் கிளப்’ என்கிற பெயரில்

ஒரு கம்ப்யூட்டரை தானே உருவாக்க முடியாத ஸ்டீவ் ஜாப்ஸ், அந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஸ்டீவ் வோஸானியா என்கிற இளைஞரின் துணை மேற்கொண்டார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி இருந்த வோஸானியா, கம்ப்யூட்டர் உருவாக்குவதில் கெட்டிக்காரராய் இருந்தார்.ஒரு சங்கம் வைத்திருந்தார்க்ள். அதில் சங்கமித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இரண்டு கைகளும் இணைந்தன. ஸ்டீவ் ஜாப் தன் வோஸ்க்ஸ் வேகன் காரை விற்றார். வோஸானியா என்கிற வோஸ், தனது கால்குலேட்டரை விற்றார்.

கலிபோர்னியாவில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார்ஷெட்டில் இவர்களின் கம்ப்யூட்டர் பயணம் ஆரம்பமானது. வோஸ் வடிவமைத்த ஐம்பது சர்க்யூட் போர்டுகளை விற்கத் தொடங்கினார்கள். ஒவ்வொன்றும் 500 டாலர்களுக்கு விலை போயிற்று.

பீட்டில்ஸ் இசைக் குழுவின் ரசிகராகிய ஸ்டீவ் ஜாப்ஸ், அவர்களின் ‘ஆப்பிள்’ இசைத் தொகுப்பின் நினைவாக, தன் நிறுவனத்திற்கு ஆப்பிள் என்று பெயர் வைத்தார். 1976 ஏப்ரல் 6-இல் ‘ஆப்பிள்’ உதயமானது.

அப்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வயது 21. வோஸ் வயதோ 26, வணிகத்தில் நல்ல அனுபவமுள்ள மூன்றாவது பங்கு தாரரை உள்ளே கொண்டுவர முடிவு செய்தார்கள். அப்போது அறிமுகமானவர்தான் மைக் மார்க்குலா.

இன்டெல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவை கவனித்துக்கொண்டிருந்தார் மார்க்குலா. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தார். அதன்மூலம் இலட்சக்கணக்கான டாலர்களுக்கு அதிபதியாகி விட்ட மார்க்குலாவிற்கு அப்போது வயது 33.

மார்க்குலா ஒரு நல்ல வணிகத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அமெரிக்க வங்கியிடம் கடனுதவி பெற்றுத் தந்ததோடு தானே 91,000 டாலர்களை முதலீடு செய்தார்.

வசீகரமான தோற்றத்தில் எளிய செயல் பாட்டு அம்சங்களுடன் வோஸ் வடிவமைத்த ஆப்பிள் ஐஐ பெரும் வெற்றி பெற்றது. 1980-க்குள் நான்கே ஆண்டுகளில் நிகரற்ற வளர்ச்சியைக் கண்டது ஆப்பிள்.

ஜாப்ஸின் கம்ப்யூட்டர் கனவுகளில் மேகின்டாஷ் முக்கியமானது. நவீன அம்சங்களும், விளையாட்டுத்தனமான வெளிப்பாடுகளும் கொண்ட மேக், கம்ப்யூட்டர் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தீர்மானத்தோடு உருவாகிக் கொண்டிருந்தது. மேக் உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்குக் கண்மூடித்தனமாக ஆதரவு தந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் ஐஐ குழுவினரைத் தாழ்த்தும் விதமாக ஜாப்ஸ் செயல்பட்டு வந்தது பலரின் மனங்களையும் புண்படுத்தியது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு வசீகர காந்தமாய் விளங்கியவர். தொழில்நுட்பத் தேர்ச்சி இல்லாதபோதும்கூட எல்லோரையும் ஈர்க்கும் சக்தி இருந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால், தன் அலுவலர்களை சரிவர நடத்தத் தெரியவில்லை அவருக்கு. ஓர் அலுவலரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொல்வது பிடிக்காவிட்டால் மேசையின் மேல் தன் காலைத் தூக்கி வைத்து, அவர் முகத்துக்கு நேரே நீட்டுவார் ஜாப்ஸ்.

மேகின்டோஷ் உருவாகும் முன்னரே, ஆப்பிள் ஐஐ குழுவினர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டனர். இதற்கிடையே ஒரு நிர்வாகியை நியமிக்க முடிவு செய்தனர். மைக்ஸ் காட் என்பவரை நியமித்த மார்க்குலா இரண்டே ஆண்டுகளில் அவரைப் பணியை விட்டு நீக்கினார்.

பிறகு வந்தவர்தான் ஜான் ஸ்கல்லி, பெப்ஸி நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக விளங்கியவர். ஜான் ஸ்கல்லி மீது ஜாப்ஸ் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து ஆப்பிள் வளர்ச்சியின் அசுர அத்தியாயங் களை உருவாக்கினார்கள்.

1984இல், மேகின்டோஷ் அறிமுகத்திற்காக அவர்கள் செய்த அதிரடி விளம்பரம் அமெரிக்காவை உலுக்கியது.

மேகின்டோஷ் எனப்படும் மேக், நவீன அம்சங்களை நிறையக் கொண்டிருந்தது. ஆனால் நவீன அம்சங்களே அதன் செயல்திறனுக்கு முட்டுக்கட்டை போட்டன.

இதற்கிடையே ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாப்ஸ் அனாவசியத் தலையீடுகளை செய்வதாகப் புகார்கள் எழுந்தன. ஜாப்ஸின் அதிகாரங்களைப் பறிக்க ஸ்கல்லி முடிவு செய்தார். விரிசல் வலுத்தது.

1985இல் மே மாதம் 24ம் தேதி நடந்த போர்டு மீட்டிங்கில் தன் இயக்குநர் குழு தன்னை ஆதரிக்க வில்லை என்று அறிந்து கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்த கால கட்டத்தில்தான், கம்ப்யூட்டர் துறை, தன் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஆளுமையும் வசீகரமும் ததும்பி வழிந்த ஸ்டீவ் ஜாப்ஸ், எதிரி நிறுவனம் ஒன்றில் தலையெடுக்கத் தொடங்கியிருந்த ஒரு சாதுவான இளைஞனை அலட்சியமாகப் பார்த்தார்.

விடலைப் பருவத்தில், கனத்த கண்ணாடிகளுடன், நடுவீதியில் சிக்கிய மான் போல் கூச்சமும் விலகல் மனோபாவமும் கொண்டு, அதேநேரம் தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனின் பெயர் – பில்கேட்ஸ்!!

அவரை வெகு துச்சமாக மதித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ், அப்போது ஆப்பிளின் வருடாந்திர விற்று வரவு 1.5 பில்லியன் டாலர்கள். மைக்ரோ சாஃப்ட்டுக்கோ வெறும் 98 மில்லியன் டாலர்கள்தான்.

ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறிய பிறகு ஜான் ஸ்கல்லி, நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்றார். தளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை “மளமள”வென்று வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார் அவர். ஸ்கல்லி ஒரு தேர்ந்த நிர்வாகி. ஆனால் தொழில்நுட்பப் பின்புலம் கிடையாது.

அதேநேரம், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆளுமைமிக்க தலைவராய் வளர்ந்த பில்கேட்ஸ், ஒரு தொழில்நுட்ப நிபுணராகவும் தலைசிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார்.

மிக வேகமாக வளர்ந்து வந்த ஆப்பிளின் தலைவர், தொழில்நுட்பப் பின்புலம் இல்லாதவராய் இருந்தார். எனவே, தொலைநோக்கோடு எடுத்திருக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவை மறந்தார்.

இன்டர்நெட் – இதன் தாக்கம் எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கவில்லை ஆப்பிள். வோஸானியா எடுத்த சில தொழில்நுட்ப முடிவுகளும் தவறாகிப் போயின. நிறுவனத்தில் மீண்டும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின.

இம்முறை ஜான் ஸ்கல்லி பலியிடப்பட்டார். 1993-இல் ஜூன் மாதத்தில் பல் பிடுங்கப்பட்ட பாம்பானார் ஸ்கல்லி. அதன்பின் அவர் வெளியேற நேர்ந்தது.
ஸ்கல்லியை நகர்த்திவிட்டுத் தலைமை நாற்காலிக்கு வந்தவர் ஸ்பின்ட்வர். ஒரு காலத்தில் ஸ்கல்லியால் நியமிக்கப்பட்டவர். ஆனால், ஸ்பின்ட்வரும் 1996-இல் அகற்றப்பட்டார்.

இன்டர்நெட்டை ஏற்பதில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் பின் தங்கியது. இன்டர்நெட் கலாச்சாரத்தை மையப்படுத்தியே மைக்ரோசாப்ட் முன்னணிக்கு வந்திருந்தது.

அமெரிக்க முன்னணி இதழ்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. “ஒவ்வொரு சமூகமும் தத்துவத்தால் வளர்கிறது. தனிமனிதனால் அழிகிறது” என்றார் கவிஞர் வைர முத்து.

தனிமனித மோதல்களாலும் தொலை நோக்கை இழந்ததாலும் வெற்றியின் உச்சத்திலிருந்து விழுந்தது ஆப்பிள். என்றாலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு கணினி என்னும் வரத்தை வழங்கிய மூலமூர்த்திகளில் முக்கிய மானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2005 ஜுன் 12இல், அவர் ஆற்றிய உரையில், தன் வாழ்வு குறித்தும் வந்திருக்கும் நோய் குறித்தும் பகிரங்கமாகப் பேசினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

பதினேழு வயதிருக்கும்போது வாசகம் ஒன்றை வாசித்தேன். “இன்றுதான் உன் கடைசி நாள் என்பதுபோல் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்திடு” என்பதே அந்த வாசகம். வாழ்வின் முக்கிய முடிவுகள் எடுக்க இந்த வாசகம் எனக்குதவியது.

ஓராண்டுக்கு முன்பு எனக்குப் புற்றுநோய் என்பது உறுதியானது. அதை குணப்படுத்தவே முடியாதென்று மருத்துவர்கள் நினைத்தார்கள்.

மற்றுமொரு சோதனையில் வாழ்க்கை குறிப்பிட்ட காலம்வரைதான். வாழ்கிற நாட்களை வீணே கழிக்காதீர்கள். அடுத்தவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு உள்ளே ஒலிக்கிற குரலை புறக்கணிக்காதீர்கள். “உங்கள் குறிக் கோளுக்கே முதலிடம் கொடுங்கள்” என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2011 அக்டோபரில் காற்றில் கலந்த அவரின் இறுதி சுவாசம், பூமிப்பந்தின் போக்கை திசை மாற்றிய அமைதியுடன் நிறைவடைந்திருக்கும் என்பதுதான் நம் பிரார்த்தனையும் நம்பிக்கையும்..........!

>>>ஜனவரி 13 [January 13]....

நிகழ்வுகள்

  • 1610 - கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
  • 1658 - இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வார்ட் செக்ஸ்பி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
  • 1830 - லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
  • 1840 - லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1847 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
  • 1908 - பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1915 - இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
  • 1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
  • 1939 - அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1953 - யூகொஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோசிப் டீட்டோ தெரிவு செய்யப்பட்டார்.
  • 1964 - கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
  • 1972 - கானாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 1982 - வாஷிங்டன், டிசியில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1985 - எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1991 - சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.
  • 1992 - இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.
  • 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.

பிறப்புகள்

  • 1864 - வில்ஹெம் வியென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1928)
  • 1879 - மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தை தொடங்கிய அமெரிக்கர் (இ. 1961)
  • 1927 - சிட்னி பிரென்னர், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்
  • 1949 - ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.

இறப்புகள்

  • 1906 - அலெக்சாண்டர் பப்போவ், ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1859)
  • 1941 - ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (பி. 1882)

>>>சைபர் க்ரைம் (Cyber Crime)...

சைபர் க்ரைம் – நவீன குற்றசெயல்!!
இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.
எவை எல்லாம் இணைய குற்றங்கள் (Cyber Crimes)
1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.
2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள்­ நடக்கும்பொழுது,­ கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.
3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்க­ள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறா­ர்கள்.
5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிரு­ந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீபகாலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்ற­து.
6.­ இருபது வயதுக்குட்பட்டவ­ர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவ­ரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடுபடத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]
7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chat­ting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர­். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
பாதுகாப்பு வழிகள்: 
1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.
2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.
3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள்பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.
4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.
5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள்.­ நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்க­ள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.
6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள­்.
7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.
8. அறிமுகம் இல்லாதவர்களுடன்­ முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.
10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போதுஉள்ள தொழில்நுட்பங்கள­் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
12.­ பணபரிமாற்றங்கள்­ செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http:://­ என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமேபணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.
13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.
சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்ப­டும் புகார்கள்: இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு,அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்,இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்]. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள், கடன் அட்டை எண் திருட்டு, வலைத்தள ஹேக்கிங்.
தமிழ்நாட்டில் புகார் கொடுக்க: 
சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
Tmt.Sonal V.Misra,IPS,
SCB, Cyber CellSIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai-32.
மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tn­pol(at)nic.in
சென்னை:
Tr.S.Aravind,DSP, 
CBCID, Cyber Crime CellSIDCO Electronics Complex, 
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32.
தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

>>>சுவாமி விவேகானந்தர்

இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
சுவாமி விவேகானந்தர்
Swami Vivekananda

சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர், 1893
இப்படத்தில் சுவாமிகள் வங்காளம், மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியது: “One infinite pure and holy—beyond thought beyond qualities I bow down to thee” - Swami Vivekananda
பிறப்பு சனவரி 12, 1863
கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியாவின் கொடி இந்தியா
இறப்பு சூலை 4 1902 (அகவை 39)
பேலூர், கல்கத்தா, இந்தியாவின் கொடி இந்தியா

வாழ்க்கை

பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் கருத்துக்கள்

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்[1].
  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா[2].
  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்[2].
  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்[2].
  • உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
  • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
  • நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
  • இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
  • இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
  • வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
  • சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
  • என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
  • நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

அவரது கவிதைகள்

கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாசு ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
                                   --விவேகானந்தர் 

நூல்கள்

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

கொசுறு:
நரேந்திர நாத் தத்தா என்பது அவனுடைய முழுப் பெயர். எல்லாரும் அவனை நரேந்திரா என்று அழைப்பார்கள். அவனுடைய அப்பா, விசுவநாத தத்தா, வழக்கறிஞர். அம்மா பெயர், புவனேஸ்வரி தேவி.

நரேந்திரனின் அம்மா மிகவும் கண்டிப்பானவர். 'ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்’ என்று சொல்வார். தன் மகனை ஒழுக்கத்தில் சிறந்தவனாக வளர்ப்பதில் கவனமாக இருந்தார். நமது புராணம் மற்றும் இதிகாசங்களில் உள்ள தத்துவக் கதைகளை நரேந்திரனுக்குச் சொல்வார். யோகாப் பயிற்சியையும் அவனுக்கு அம்மாதான் சொல்லிக்கொடுத்தார்.

சின்ன வயதிலேயே நரேந்திரன் அதிகாலையில் எழுந்துவிடுவான். ஆசிரியராகத் தன்னைக் கற்பனைசெய்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த அதிகாலை நேரத்தில் தன் முன்னால் ஒரு வகுப்பே இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்வான். அவனுடைய ஆசிரியர்போலவே சத்தமாகப் பேசி நடிப்பான். மாலையில் வீட்டுத் தோட்டத்தில் உடல்பயிற்சி செய்வான். மரங்கள் மேலே ஏறுவதும், கிளையைப் பிடித்துத் தொங்கியவாறு தண்டால் எடுப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றான். அங்கே பூசாரியாக இருந்தவர், ஓர் இயந்திரம்போல எந்த உணர்ச்சியும் இல்லாமல் மந்திரம் சொல்லி, அர்ச்சனைசெய்வதைக் கண்டான். நேராக அவர் அருகே சென்று, அந்த மந்திரங்களை ஏற்ற இறக்கத்தோடு சொல்லிக்காட்டினான். அப்போது நரேந்திரனுக்கு ஆறு வயதுதான்.

நரேந்திரனிடம் எந்த அளவுக்குக் குறும்புத்தனமும் விளையாட்டும் இருந்ததோ, அதே அளவுக்கு படிப்பின் மீது ஆர்வமும் இருந்தது. பாடப் புத்தகத்துக்கு வெளியேயும் அவனது தேடல் இருந்தது. அவனது அப்பாவிடம் இருந்த பல மேற்கத்தியத் தத்துவப் புத்தகங்களை ஓய்வு நேரத்தில் எடுத்துப் படிப்பான். பள்ளியில் இருந்து வந்ததும் சிந்தனையிலேயே இருப்பான்.

ஒரு நாள், நரேந்திரன் தன் அப்பாவிடம் விதண்டாவாதமாக ஏதேதோ கேள்விகளைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். அவன் கேட்ட பல கேள்விகளுக்கு அப்பாவுக்குப் பதில் தெரியவில்லை. அதனால் அவருக்குக் கோபம்வந்துவிட்டது. நரேந்திரனைக் கழிவறைக்கு உள்ளே தள்ளி, கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டார். அரை மணி நேரத்திற்குப் பிறகு, 'பாவம் பிள்ளை’ என நினைத்தவாறே கதவைத் திறக்க முயன்றார். ஆனால், நரேந்திரன் உள்ளே தாழிட்டு இருந்தான்.

பயந்துபோன அப்பாவும் அம்மாவும் கதவைத் தட்டினார்கள். ''என்னைத் தொந்தரவு செய்யாதீங்க. நான் அந்தக் கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கிறேன்.'' என்று உள்ளே இருந்து குரல் வந்தது. தான் தேடிய கேள்விக்குத் தனக்குள்ளேயே பதிலைத் தேடித் திருப்தி அடைந்த பிறகே நரேந்திரன் வெளியே வந்தான். அவனது செயலைக் கண்டு பெற்றோர் வியந்துபோனார்கள்.

கற்பதில் பிடிவாதம், கடும் பயிற்சி, யாருக்கும் எதற்கும் பயப்படாத மனோதிடம் இவைதான் நரேந்திரனைப் பிற்காலத்தில் உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தராக மாற்றியது.

>>>செயற்கை ரத்தம் உருவாக்கி சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் சாதனை

சாலை போன்ற விபத்து ஏற்படும் நேரங்களில் நிலவும் ரத்தப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் செயற்கை ரத்தத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள்.
இது குறி்த்த விபரம் வருமாறு: இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது. ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை மாற்றும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்றாண்டுகளாக இம் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.விஞ்ஞானிகளின் முயற்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியது.

இதனையடுத்து ஐ.ஐ.டி நிறுவனத்தின் டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான , குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர். இது குறித்து டாக்டர் சோமா கூறுகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் என தெரிவித்தார்.

செயற்கை ரத்தம் : செயற்கை ரத்தம் தயாரிப்பு சோதனை குறித்து விளக்கம் அளித்த டாக்டர் சோமா கூறியதாவது : ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும்; இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும்; தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும்; இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது; இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐஐடி.,யின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது; இதுவரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது; ஆனால் இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் நோய் தொற்று இல்லாததாகவும் இருக்கும்; அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

>>>பள்ளிகளில் தேர்வுகளுக்கான கட்டணத்தில் சலுகை கிடைக்குமா?

பள்ளிகளில் நடக்கும் பல்வேறு வகை தேர்வுகளுக்கான கட்டணத்தை, அரசு வழங்க முன்வர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசால் வழங்கப்படுகின்றன. காலணி, கல்வி கட்டணம் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதனால் பள்ளி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணமும் அரசால் செலுத்தப்படுகிறது.
இத்தனை சலுகைகளுடன், மேலும் ஒரே ஒரு சலுகையையும் அளித்து விட்டால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைவர். அது பல்வேறு வகை தேர்வு கட்டணம்தான். பள்ளிகளில் ஒரு ஆண்டில் காலாண்டு, அரையாண்டு, பருவத் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் உட்பட பல வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கென மாணவர்களிடம் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதற்கென உயர்நிலை அளவில் ஒரு தலைமை ஆசிரியரும், மேல்நிலையில் ஒரு தலைமை ஆசிரியரும் அமைப்பாளராக செயல்பட்டு, வினாத்தாள், தேர்வுத் தாளுக்கென கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதைக் கூட செலுத்த இயலாத நிலையில் கிராமப்புற, அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பலர் உள்ளனர். கல்விக்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் அரசு, இந்தச் சிறிய தொகையையும் ஏற்றால், பெற்றோர் மகிழ்ச்சியடைவர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...