கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மீன் வகைகள்....

ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.
அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.

ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது.
இ.பி.ஏ. என்ற வேதிப்பொருள் முளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத்திறனில் பாதிப்பு வருவதற்கு இ.பி.ஏ குறைபாடும் ஒரு காரணம்.

அதேபோல் இரு ரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புபடலமாக இருப்பதால் நரம்பு மண்டல உறுதிக்கும் அவை காரணமாக இருக்கிறது.
எனவே தேவையான அளவு மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நரம்பு மண்டலம் உறுதி பெறும்.

நரம்பு மண்டலம் பலப்பட்டால் உடலும் உறுதிபெறும் என்பது உண்மை. ஆய்வாளர் நார்மன் சலீம் கூறும் போது, கொழுப்பு கெட்டது என்ற எண்ணத்தை மாற்றக்கூடியது ஒமேகா-3. எல்லோரது உணவிலும் டி.எச்.ஏ சீராக கலந்திருப்பது உடல்நலத்துக்கு சிறந்தது

>>>ஆப்பிள்

 
பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.

ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். பழங்களை, குறிப்பாக ஆப்பிளை தேடிச்செல்லும் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றின் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகமாக இருப்பதன் மூலமும் இது உறுதியாகி உள்ளது.

இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் ஸென் யூ சென் கூறியதாவது:

ஆப்பிளில் உள்ள பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், உடலில் உள்ள நோய்க்கிருமிகளை பெருமளவில் அழிக்கிறது. இதனால் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்துடன் உடல் பருமன் குறைவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதை ஏராளமான ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வும் அதையே வலியுறுத்தி உள்ளது.

தக்காளி, ப்ராகலி, ப்ளூபெரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு உள்ளது. அவற்றில் பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் ஆயுளையும் அதிகரிக்கிறது. இது ஆப்பிளில் மிக அதிக அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடல் மற்றும் மூளைச் செல்களின் செயல்பாட்டையும் தூண்டுகிறது.

அன் ஆப்பிள் எ டே, கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது அனைவரும் அறிந்த மொழி. “நாளும் ஒரு ஆப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது.

கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.

ஆப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய ஆப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. ஆப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போனது. மேலும் இந்தக்கட்டிகள் தீங்கற்றவையாகவும் மாறிப்போயின. மனிதர்களிலும் விலங்குகளிலும் மார்பகப்புற்றுநோய்க்கு காரணமான adenocarcinoma எனப்படும் ஆபத்தான கட்டிகள் மரணத்தை விளைவிக்கக்கூடியவை. பேராசிரியர் லியு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 81 சதவீதமாக இருந்தது.

24 வாரங்களுக்கு நாளொன்றுக்கு ஓர் ஆப்பிள் பழத்தின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 57 சதவீதமாக குறைந்தது.

நாளொன்றுக்கு மூன்று ஆப்பிள் பழங்களின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 50 சதவீதமாகவும், நாளொன்றுக்கு ஆறு ஆப்பிள் பழங்களின் சாறு கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த பாதிப்பு 23 சதவீதமாகவும் குறைந்து போயிருந்தது.

ஆப்பிள்பழங்களில் காணப்படும் phytochemicals எனப்படும் வேதிப்பொருள்கள் மார்பகப் புற்றுநோய் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் NFkB என்ற பாதையை தடைசெய்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அன்றாட உணவில் பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் பால்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே பொருள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இருந்தாலும் அந்தக் கட்டுரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் லியு வின் புதிய ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது. பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ள phenolics or flavonoids எனப்படும் phytochemicals பெற்றிருக்கின்றன என்பதை படம் தெளிவாக்குகிறது.

>>>கனவுகளைத் துரத்துங்கள்! - ஜெஃப்ரி பெசொஸ்...

 
அமேசான்.காம் எனும் இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிறுவனத்தை உருவாக்கிய ஜெஃப்ரி பெசொஸ் பிறந்த தினம் ஜன.12.

அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி என்றாலும் அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்து இருந்தது. சின்ன வயதில் இருந்தே எதையாவது துறுதுறு என்று பண்ணிக்கொண்டிருக்கும் குணம் இவரிடம் இருந்தது.தொல்லைக்கொடுக்கும் சுட்டிகளை பயமுறுத்த எலெக்ட்ரானிக் அலாரம் தயாரித்தார்.

தாத்தாவின் கேரேஜில் எப்பொழுது பார்த்தாலும் ஆய்வுகள் செய்து கொண்டும், எதையாவது உருவாக்கி கொண்டும் இருந்த இவர் ஆசைப்பட்டது ஒரு விண்வெளி வீரனாக ஆகவேண்டும் என்றே. ஆனால், வேறு விஷயங்கள் அவருக்காக காத்திருந்தன. கல்லூரி போனதும் இயற்பியலில் இருந்து அவர் காதல் கணினி பக்கம் திரும்பியது. கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் பெற்று வெளியே வந்தார். மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார்.

இளவயதில் மிகப்பெரிய நிதி நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவர் ஆனார். அதோடு நின்று இருக்கலாம்; வருடத்திற்கு 2300 சதவிகிதம் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது என்பதை பார்த்தார். அந்நேரம் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் சொல்ல வேலையை தூக்கி கிடாசிவிட்டு கிளம்பினார் மனிதர். இணையத்தில் புத்தகங்களை ஆர்டர் செய்தால் போதும், வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி என்பதுதான் கான்செப்ட். அதுவும் விலை குறைவாக தருவது தான் போனஸ்.

ஆரம்பிக்கிற பொழுது மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் ஆட்கள் இருந்தார்கள். அமோக வரவேற்ப்பு உண்டானது; சில வாடிக்கையாளர்கள் ஏன் நீங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்க கூடாது என கேட்க அதையும் ஆரம்பித்தார். டிவிடிகளும் சேர்ந்துகொண்டன. புத்தகங்களை விட எலெக்ட்ரானிக் சாதனங்கள் சக்கை போடு போட்டன. இப்பொழுது ஷு, நகைகள் கூட ஆன்லைனில் விற்கிறது அமேசான். அதோடு நின்று விடவில்லை, சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளி பயணத்திட்டத்தை ஆரம்பித்தார்.

அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்... 23 பில்லியன் டாலர்! எப்படி இது சாத்தியம் எனக் கேட்ட பொழுது, "பெரிதாக கனவுகள் எனக்கு; என் கனவுகளை துரத்திக்கொண்டே இருந்தேன்; இருப்பேன். மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது!"

>>>எட்மண்ட் பர்க்...

 
எட்மண்ட் பர்க்... அயர்லாந்தில் பிறந்த இவர் தன் மாற்று சிந்தனைகளால் கவனம் பெற்றார். பத்திரிக்கை துறையை நான்காவது தூண் என அழைத்தவர் இவரே. 1765 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவர் பேசிய முதல் பேச்சே எல்லாரையும் மெய்மறக்க செய்தது. அமெரிக்காவின் சுதந்திர போருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார்; அதே சமயம் பிரெஞ்சு புரட்சி ஐரோப்பா முழுக்க பரவி குழப்பத்தை உண்டாக்கும் என்றார் - அவ்வாறே நடந்தது.

இந்தியாவின் மீது தனிக்கரிசனம் அவருக்கு இருந்தது; வாரன் ஹாஸ்டிங்க்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்து எண்ணற்ற ஊழல்கள் செய்தார். நிர்வாகத்தில் மக்களை பற்றி கவலைப்படவில்லை. அவரை நாடாளுமன்றத்தில் ராஜா துரோக குற்றத்துக்காக நிற்க வைத்தார் பர்க். அப்பொழுது அவர், இந்தியாவின் கர்நாடகத்தில் வறண்ட பூமியை அம்மக்கள் நீர்த்தேக்கங்கள் கட்டி பசுமை பூமியாக்கினர்; அவர்களை முட்டாள் என நினைத்து அவற்றை சீரழிய விட்டு தினமும் பஞ்சத்தொடு இரவுணவு அருந்தப்போனார் ஹாஸ்டிங்க்ஸ் என பின்னி எடுத்தார்; ராஜா துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டது இந்த உரையை பதினாறு முறை திருத்தி எழுதி தயாரானார் அவர்.

மிகவும் அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட அவர், உலக வரலாற்றை நாற்பதாண்டு கால உழைப்பில் எழுதினார். ஒரு கொலை அவர் வீட்டருகில் நடந்தது. பார்த்த பலரும் பல விதமாக அதை விவரிக்க தன் உழைப்பை எல்லாம் தீயிட்டு கொளுத்திவிட்டு, "இயேசுவை புத்தரை பற்றி இவர்கள் பதிவு செய்தது உண்மை என நான் எப்படி நம்புவது? புத்தக அறிவு மட்டும் போதாது!" எனக் கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.

"நல்லவர்கள எதுவும் செய்யாமல் இருப்பதே தீமையை செழிக்க வைக்கும்" என்று சொன்ன தலைசிறந்த மனிதர் அவர்.

இன்று - ஜன.12: உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் தனிப்பெரும் இடம் பெற்றிருக்கும் எட்மண்ட் பர்க் பிறந்தநாள்.

>>>இந்திய விண் நாயகன்!

 
ஜன.13 : ராகேஷ் ஷர்மா எனும் விண்வெளிக்கு பயணம் போன முதல் இந்தியர் பிறந்த நநள்.

பாட்டியாலாவில் பிறந்த இவர் தன்னுடைய பதினேழு வயதில் பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். இந்திய விமானப் படையில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றினார். குறிப்பாக, 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் மிக் ரக விமானங்களை மிகத்திறமையாக போர்களத்தில் இயக்கினார். 1982 இல் இந்தியா ரஷ்யாவின் சோயூஸ் 11 விண்கலத்தில் இரண்டு ரஷ்யர்களுடன் இந்தியர் ஒருவரை அனுப்பவது என முடிவெடுக்கப்பட்டதும் ராகேஷ் ஷர்மா அதற்கு தேர்வானார்.

பதினெட்டு மாதம் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஈர்ப்பு விசையே இல்லாத சூழலில் செயல்பட வேண்டும் என்பதால் காலை தொட்டவாறு தலை பலமணிநேரம் இருக்குமாறு எல்லாம் பெண்டு வாங்கினார்கள்; ஃபிட்டாக இருக்க பல உடற்பயிற்சிகள் சொல்லித்தரப்பட இவரோ யோகா மட்டும் செய்தார்.

விண்வெளிக்கு போனதும், "இந்தியா அங்கிருந்து பார்க்க எப்படி இருக்கிறது?" என இந்திரா காந்தி கேட்க, "சாரே ஜஹான் சே ஹச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா!" என்றார் (உலகில் உள்ளவற்றிலே மிக அழகானது என் இந்தியா!). அதை தொலைக்காட்சியில் பார்த்து இந்தியர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். அவரும் நாயகன் ஆனார். மீண்டும் தரையிறங்கும் பொழுது தீப்பிடித்து கொள்ள பாராசூட்டில் குதித்து தப்பித்தார்.

கல்பனா சாவ்லா கொலும்பியா ஓடத்தில் இறந்த பொழுது, நீங்கள் இன்னுமா விண்வெளிக்கு போக விரும்புகிறீர்கள் என கேட்டபொழுது, "பரந்த அந்த விண்வெளியின் மீதான என் காதல் அப்படியே உள்ளது; சாகசத்துக்காக காத்திருக்கிறேன் இன்னமும் - கண்டிப்பாக போவேன் நான்!" என்றார் - அதுதான் ராகேஷ் ஷர்மா.

ஹாப்பி பர்த்டே ஹீரோ!

>>>முதல் வானொலி ஒலிபரப்பு...

 
இன்றைக்கு நம்மில் பலரது காதுகளை ஏதோ ஒரு எஃப்.எம் நிறைத்துக் கொண்டு இருக்கிறது. முதன்முதலில் வானொலி ஒலிபரப்பு எப்படி இருந்திருக்கும்?

ரொம்பவே சுவாரசியமான சம்பவம் அது.

ஜன.13, 1910 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அந்த நிகழ்வு நடந்தது. ஆஸ்திரியாவில் நுஸ்பாமேர் எனும் பேராசிரியர் ஆறு வருடங்களுக்கு முன்னேயே அடுத்த அறைக்கு வானொலி ஒலிபரப்பை நிகழ்த்தி இருந்தாலும், பொதுமக்கள் கேட்கிற அளவுக்கு நடந்த முதல் வானொலி ஒலிபரப்பு இதுதான்.

இத்தாலிய இசைக்குழு ஒன்றின் இசையே முதலில் ஒலிபரப்பப்பட்டது. அப்பதிய மைக்குகள் ரொம்பவும் துல்லியமானவை அல்ல. அதனால், மேடையில் தூரத்தில் வைக்கப்பட்ட மைக்கில் விழுந்த இசை அரைகுறையாகவே கேட்டது. மேடைக்கு கீழே பாடிய பாடகர்களின் குரல் கொஞ்சம் சிறப்பாக கேட்டது. நியூயார்க் நகரில் இருந்து தூரத்தில் போன கப்பல்களில் இசையை மக்கள் கேட்டார்கள். டைம்ஸ் சதுக்கத்திலும் கேட்டு பூரித்தார்கள். ஒரு மைல் தூரத்துக்கு ஒபரா இசை கேட்டதாக செய்திதாள்களில் விளம்பரங்கள் வந்தன.

>>>ஆல்பர்ட் ஷுவைட்சர்...

 
ஆல்பர்ட் ஷுவைட்சர்... அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர். இவருக்கு மருத்துவர், பாதிரியார், இசை வல்லுநர், தத்துவ நிபுணர், சமூக சேவகர் என பல முகம் உண்டு. ஜெர்மனியில் பிறந்த இவர் அடிப்படையில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து தத்துவ வகுப்புகள் எடுத்து வந்தார்.

பல்வேறு மதங்களின் கருத்துக்களை தொடர்ந்து படித்துவந்த இவர், இன்றைய வாழ்க்கைக்கு எப்படி அறம் சார்ந்த வாழ்வை இவற்றின் மூலம் கொண்டு வரமுடியும் என தொடர்ந்து யோசித்தார்; வாசித்தார். உலகப்போர் சமயத்தில் ஆப்ரிக்காவில் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, மருத்துவம் பயின்றார். அங்கே போர்கைதியாக மனைவியோடு சிலகாலம் கஷ்டப்பட்டார்.

மனித வாழ்க்கையில் அறம் குறைந்து வருவதைகண்டு மனம் துடித்தார். சமண மதத்தின் உயிர்களை கொல்லாமை என்கிற கருத்து அவரை ஈர்த்தது; உயிர் என்பது காக்க, அழிக்க அல்ல வாழ்தலின் அறம் உயிர்களை காத்தலும், பிற உயிரை முடிந்தவரை காயப்படுத்தாமலும், கொல்லாமலும் இருக்க வேண்டும் என்ற அவரது, "reverence of life" தத்துவம் ஆப்ரிக்காவில் காண்டாமிருக கூட்டத்துக்கு நடுவில் போகும் பொழுது உதித்தது. அதை அங்கே ஆப்ரிக்காவில் லம்பாரனே எனும் இடத்தில் மருத்துவமனை தொடங்கி எண்ணற்ற உயிர்களை காக்க ஆரம்பித்தார், அங்கே தன் தத்துவத்தை செயல்படுத்தினார். அவ்வூரின் மக்களுக்கு அதை விளக்கினார். அன்பை பரப்பினார்.

அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அந்த பணத்தை தொழுநோய் சிகிச்சை மையத்தை அங்கே அமைக்க பயன்படுத்தி கொண்டார்.இன்று உலகம் முழுக்க அவர் காட்டிய தத்துவ பாதையில் பல்வேறு அமைப்புகள் உயிர்களை காத்து வருகின்றன. ஜன.14 - அவரது பிறந்தநாள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...