கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ரிசானாவின் இரத்த விலை?

 
ரிசானா ரபீக் என்ற பெண்ணின் தண்டனை வழியாக சவுதிஅரசாங்கம்  மனிதஉயிரின் விலைக்கு பெரும் சவால் இட்டுள்ளது.மனித நேயமே அற்று இறைவன் பெயரால் ஷரியத் என்ற மதச்சட்டம் வழியாக தண்டனை என்ர பெயரில் ஒரு இளம் பெண்ணை படுகொலை செய்துள்ளது. கடந்த 2005ல் ஒரு பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்று க்தனது 17வது வயதில் சவுதி ஜெயிலில் அடைக்கப்பட்டவர். 2012டிசம்பர் வரை தான் விடுதலையாகி விடுவோம் என நம்பியிருந்த அப்பெண் அவசரமாக பொறுபான தகவல் பெற்றோருக்கோ அப்பெண்ணினின் சொந்த தேசம் இலங்கைக்கோ தெரிவிக்காது கொலை செய்தது மிகவும் கண்டிக்க தக்கது.ஒரு பக்கம் இலங்கை அரசு இராணுவ கெடுபிடி மறுபக்கம் ஈழப்போராளிகள் அச்சுறுத்தல்! இந்த சூழலில் ஒன்பதாம் வகுப்புடம் படிப்பை நிறுத்தி விட்டு தன் ஏழ்மையான குடும்பத்தை கரை சேர்க்க எண்ணி, மொழி தெரியாத முற்றிலும் வேறுபட்ட ஒரு இன மக்களிடம் வீட்டு வேலை செய்ய வெளிநாடு செல்ல துணிந்து சென்ற  ரிசானாவை காத்திருந்தது கழுத்து அறுக்கப்பட்டு மரணிக்கும் கொடும் முடிவே.10 நபர்கள் கொண்ட சவுதி குடும்பத்தில் வீட்டு பணியாளராக அமர்த்தப்படுகின்றார். ஒரே மாதத்தில் அவ்வீட்டிலுள்ள 4 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டார் என கைது செய்யப்படுகின்றார். இந்த குழந்தை எவ்வாறாக மரித்தது என்று போஸ்டுமார்டம் கூட செய்யாது அடைக்கம் செய்த சவுதி காவல்துறை, ரிசானா தான் கொலை செய்தாள் என 2007ல் மரண தண்டனை விதிக்கின்றது.இந்த வீட்டிலிருக்கும் வேறு நபர்கள் இந்த குழந்தையை கொன்றனரா அல்லது இந்த குழந்தைக்கு மரபனுவாகவே வேறு ஏதும் நோய் இருந்ததா என்று பரிசோதிக்க இயலாத சவுதி அரசு, மதச்சட்டத்தின் பெயரில் 7 வருடம் சிறையில் கழித்த இளம் பெண்னைபடுகொலை செய்தது அதிர்ச்சியாக உள்ளது. தற்போது  மரணப்பட்ட நாலுமாத குழந்தையின் சகோதர குழந்தை கூட தீர்க்க இயலாத நோயில் அகப்பட்டு மருத்துவம் பெற்று வருவதாகத் தான் செய்திகள் உள்ளன.பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் இரத்த பணம் தருவதாக கெஞ்சியும் மன்னிக்க விரும்பாததால் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று சப்பை கட்டுகின்றது சவுதி அரசு. ஆனால்நாலே  மாதமானதாய்ப்பால் கொடுத்து வளர்க்க வேண்டிய குழந்தையை புட்டிப்பால் கொடுத்தது மட்டுமல்லாது குழந்தையை பராமரிக்க பணிந்தது குழந்தைகளை பராமரிக்கும் தாதியிடம் அல்லவெறும் 17 வயதான வீட்டு பணியாளரான இன்னொரு குழந்தையிடம்.ஆனால் சவுதி அரசாங்கம் தாயின் பொறுப்பற்றதனத்தை தண்டிக்காது, இரக்கமே அற்ற  நாலு மாத குழந்தை யின் தாயி மன்னிக்க இயலாது என்று கூறியதாக காரணம் காட்டி ஏழைத்  தாயின் 24 வயது மகளை கொலை செய்ய தூண்டியுள்ளார். எந்த பேச்சு வார்த்தைக்கும் குழந்தையின் பெற்றோர்கள் வரவில்லை என்பதை சுட்டி காட்டி ரிசானாவுக்கு தண்டனை வழங்கியிருப்பது சவுதியில் நீதி சரியாக பேணப்படுகின்றது என்றல்ல பொருள். அங்கு இருக்கும் ஒரு சாதாரண இரக்கமற்ற பெண்ணால் கூட அடுத்த நாட்டில் இருந்து வேலையாட்களாக வருபவர்களை தண்டிக்க இயலும் என்பதே!
இந்த நிகழ்வை காணும் போது சவுதிக்காரர்கள் மனதில் இரக்கமே இல்லையா என ஆச்சரியம் கொள்ளவைக்கின்றது. ரிசானாவுடன் இன்னும் 45 மேலுள்ள இளம் பணியாளர் பெண்கள் மரண தண்டனை காத்து சிறையில் வாடுகின்றனர். இதில் பெருபாண்மையானவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பியா நாட்டு பெண்கள் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இவர்களில் சிலரின் மேல் சாட்டும் குற்றம் பாலியலாக துன்புறுத்த வந்த தங்கள் வீட்டு யஜமானர்களை கொன்றனர்கள் என்பதே. சவுதி போன்ற நாட்டில் வேலை செய்யும் பல பெண்கள் கண்ணீர் தோராத கதைகளுடன் வாழ்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. அரபிகள் வீட்டு பணிப் பெண்களை பாலியலாக துன்புறுத்தியுள்ளதாகவும் அங்குள்ள யஜமான பெண்கள் கூட சில வீட்டு வேலையாட்களான ஆண்களை கெடுக்க நினைத்து நடக்காத சந்தர்பங்களில் அவர்களை சட்டத்தால் பழி தீர்த்து கொள்ளும் சம்வங்களும் கேட்டுள்ளோம்.
40-60 வருடங்கள் முன்பு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக செல்வ செழிப்புடன் இருந்த இலங்கை என்ற தீவு இன்று போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்களின் துயரின் ஒரு சிறு சம்பவம் மட்டுமே இது. சிறுதேனும் நல்ல வாய்ப்பு வசதி இருந்தால் 17 வயது மகளை பெற்றோர்கண் காணா நாட்டுக்கு அனுப்பியிருக்க மாட்டார்கள். இந்த பெண்ணுக்கு கொடுத்த தண்டனையால் இப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதரகளும் வாழ் நாள் முழுதும் துக்கத்தில் கழிக்க தள்ளப்பட்டு விட்டனர். அந்த பெற்றோருக்கு தங்கள் மகளுக்கு நடந்த கொடும் செயலுக்கு தாங்களூம் காரணமாகி விட்டோமோ என்ற  குற்ற உணர்ச்சி  ஒருபோதும் மறையப்போவதில்லை. தாங்களும் தங்கள் அருமை மகள் மரணத்திற்க்கு காரணமாகி விட்டோமோ என கதறி துடித்திருப்பார்கள். இப்படியாக ஏழை மக்கள் கலங்கி தவிப்பதையா படைத்தவர் தான் விரும்புவாரா!
கண்ணகிக்கு நீதி தவறிய பாண்டிய மன்னனால் ஒரு முறை மதுரை எரிந்தது. சவுதியோ குழந்தையின் பெற்றோரை கைகாட்டி எங்கள் மதச்சட்டம் என்று கூறி தப்பிக்க பார்க்கின்றது. இலங்கை அரசு மட்டுமல்ல, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஐக்கிய நாட்டு சபை, மனிதநேய அமைப்புகள் என உலகத்தில் இருந்து வந்த அனைத்து  கோரிக்கையும்  சவுதி நாடு புரக்கணித்து உள்ளது.  சவுதிக்கு வேலையாட்கள் அனுப்புவதை எல்லா நாட்டில் இருந்தும் தடை செய்ய வேண்டும். சவுதியை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும். ரிசானாவின் தாய் குழந்தையில் தாயை மன்னித்து விட்டதாக அறிவித்து தன் மன்னிக்கும் மனதை வெளிப்படுத்தியுள்ளார். ரிசானாவும் ஒரு இஸ்லாமிய பெண் தான். பல இஸ்லாமிய சகோதர்கள் சவுதி செய்தது தவறு என்று உணர்த்திய போது ஒரு சிலர் மதபிரசங்கம் செய்கின்றனர். கடவுள் என்ற பெயரில் மனிதநேயமில்லா செயல்களை யார் செய்தாலும் எந்த மதம் செய்தாலும் தண்டிக்கும் துணிவு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். இங்கு சுயநலமான மத சிந்தனையில் பொய் புரட்டு பேசுவது வருந்த தக்கது. வாளால் வெட்டி தண்டனையை நிறைவேற்றியவனும் கடவுளுக்கு சேவை செய்ததாக பரைசாற்றியுள்ளான்.  இந்த தண்டனையால் மனிதம் மதத்தால் படுகொலைசெய்யப்பட்டது என்பது மட்டுமே உண்மை. ஒரு இளம் பெண்ணுக்கு நீதி மறூக்கப்பட்டது வழியாக ஒரு தாயின் தீராத  அழுகைக்கு காரணம் ஆகிவிட்ட சவுதியை இறைவனும் மன்னிக்க போவதில்லை.

>>>ஆம்பியர்...

 
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர். பிரெஞ்சு தேசம் அறிவு வெளிச்சத்தில் மூழ்கிக்கொண்டு இருந்த காலத்தில் இவர் பிறந்தார். இவரின் அப்பா ரூசோவின் சிந்தனைகளால் கவரப்பட்டார். பிள்ளைகள் அடைந்துக்கிடக்கும் கட்டடங்களில் கல்வி கற்க கூடாது; இயற்கையை கவனித்து இயல்பாக ஆனந்தமாக கல்வி கற்க வேண்டும் என்பதை அவரின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். இவரை சுற்றி இருக்கும் விஷயங்களை உற்றுநோக்க விட்டார். நூலகத்தினுள்ளே கொண்டு போய்விட்டார். அற்புதமான புத்தகங்களை படிக்க வாங்கிக்கொடுத்தார்.

இலத்தீனை முதலில் வெறுத்தாலும் பின் அதை கற்று அற்புதமான அறிவியல் நூல்களை கற்று தேர்ந்தார். கணக்கில் எல்லையற்ற ஆர்வம் உண்டானது ஆம்பியருக்கு. புரட்சி ஏற்பட்ட பின் நடந்த குழப்பம் நிறைந்த அரசியல் சூழலில் அப்பா கொல்லப்பட்டார். மகன் வேலை தேடி போனார்; கணித ஆசிரியராக இணைந்து வேலை செய்தார்; அதே சமயம் வரலாறு, கவிதை, இயற்கை அறிவியல், தத்துவம் ஆகியவற்றையும் காதலோடு கற்றுதேர்ந்தார்.

நெப்போலியனின் ஆட்சிகாலத்தில் அறிவியலுக்கு முன்னுரிமை தரப்படவே இவர் பேராசிரியர் ஆனார். அப்பொழுது தான் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓயர்ஸ்டட் என்கிற டானிஷ் நாட்டு அறிவியல் அறிஞர் மின்சாரம் பாய்கிற பாதையின் அருகே வைக்கப்படுகிற காந்த ஊசி விலகலுக்கு உள்ளாகிறது என சொன்னார். இதை கேள்விப்பட்டு மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே தொடர்பிருப்பதை ஆம்பியர் உணர்ந்தார்.

மேலும் அதை விரிவுபடுத்தி இரண்டு கம்பிகள் இடையே மின்சாரம் பாயும் பொழுது அவை நேர் திசையில் செல்கின்றனவா அல்லது எதிர் திசையில் செல்கின்றனவா என்பதை பொருத்து விலகுதல் அல்லது ஈர்த்தல் நிகழும் என்றார்.

இதுவே மின்னியக்க விசையியல் துறைக்கு அடித்தளம் அமைத்தது. மேலும் ஆம்பியர் விதியை உருவாக்கினார்; அதன் மூலம் மின்சாரம் பாயும் இரண்டு கம்பிகளுக்கு இடையே ஏற்படும் மாற்றத்தை விளக்கினார். தன் விதியை கொண்டு கூலும்பின் காந்த விதியோடு ஒத்துப்போவதை அற்புதமாக நிரூபித்தார். அவர் எழுதிய Memoir on the Mathematical Theory of Electrodynamic Phenomena, Uniquely Deduced from Experience எனும் அற்புத நூலிலே தான் முதன் முதலில் மின்னியக்கவிசையியல் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

இறக்கிற பொழுது "இறுதியாக மகிழ்வோடு சாகிறேன் நான் "எனக்குறித்து வைத்துவிட்டு இறந்துபோனார். இந்த மாபெரும் அறிஞர் அவரின் பெயராலேயே மின்சாரத்துக்கான எஸ் ஐ அலகு வழங்கப்படுகிறது .அவரின் பிறந்த நாள் இன்று (ஜன.20).

>>>இது பெற்றோருக்கு...

* மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள்.

அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள்.

ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும், பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள்.

- டாக்டர் விகடன்

>>>ஜூன் மாதத்தில் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:

இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841

>>>நாணயம்... நம்பிக்கை!

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.


பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ''அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.


''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான். ''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்.

>>>ஒரு முத்தமும் பல கேள்விகளும்.... ஓ பக்கங்கள்-ஞாநி

‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க  கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி,  முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.
பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை  அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.
“நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பை தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் உதவி செய்வது மெழுகுவத்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா? டெல்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த பேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன் ?”
இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் பேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை.என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.
இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆனபோது அவர் வயது 15தான். மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்கவைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவளுடைய அம்மா ராதாவுடையதுதான்.
இப்படி வளர் இளம் பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்கவைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்த படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்படவேண்டும்.
அது மட்டுமல்ல, டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட டெல்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. டெல்லி நிகழ்ச்சியில் குற்றவாளிகளில் ஒருவன் மைனர் என்பது கவனிக்கத்தக்கது. அண்மையில் தமிழ்நாட்டில் பள்ளிச் சிறுவர்கள் பள்ளி வளாகத்தில் மது குடித்ததைக் கண்டித்த ஆசிரியரை அடித்திருக்கிறார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் மது குடிக்க பணம் தேவை என்பதற்காக பள்ளிக்கூட மரமேசைகளை உடைத்து விறகாக்கி விற்றுக் குடித்திருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும்பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர்.  “ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்” என்று செய்தி அனுப்பினேன்.“எனக்கும் செய்தி வந்தது. இனி இந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்” என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.
சினிமா சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாகாரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர்களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்கு பதிலாக பலப்படுத்துகின்றன. ஆணுக்கு சேவை செய்ய பெண், பெண் விட்டுக் கொடுத்தால்தான் குடும்பம் உருப்படும்,ஆணின் இச்சைக்கானவள் பெண் என்ற கருத்துகளை திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது சினிமா. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழைய கருத்தை, பொறுக்கியானாலும் காதலன், ரவுடியானாலும், லவ்வர் என்று நவீனப்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண்பிம்பங்கள்  உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில்  ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவ சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில்,எண்பதுகளில் இருந்ததை விட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர் பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சரியமானதுதான்.
இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.
அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.
என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும்போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.
குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.
எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனதில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றி படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யூஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை.எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலை நாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.
பள்ளிப் பருவத்திலிருந்து உடல் நலம் மன நலம் சார்ந்த பாலியல் கல்வியையும் மீடியாவைப் புரிந்துகொள்ளும் பயிற்சியையும் அறிமுகம் செய்யவேண்டும் என்று என் போன்றோர் பல வருடங்களாக வலியுறுத்திவருகிறோம். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு காட்டுவோர் பாலியல் வக்கிரங்களை படைப்பாக்குவோரைக் கண்டு கொள்வதே இல்லை.
பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில்,  சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உடபடுத்திக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாச்கர்களுக்கும் மட்டுமென்று தனக்கு தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குநரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவத்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.
காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்கு சொல்லித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாறவேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாகவேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.
கல்கி 19.1.2013

>>>வேலைக்குப் போகும் பெண்கள் அவசியம் கருத்தில் கொள்ளவேண்டியது !!

 
1. நேரத்தை நிர்வகிக்கும் திறமை

2. பிள்ளைகளோடு தினமும் நேரம் செலவழிப்பது

3. நம் டென்ஷனை பிள்ளைகளிடம் காட்டாமல் இருப்பது

4. அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்ப்பது.

5. அலுவலக நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாமல் இருப்பது.

6. சம்பாதிக்கின்ற காரணத்தால் அளவுக்கு மீறிய பொருளாதார சுதந்திரம் கொடுப்பது.

7. கணவருடன் கலந்தாலோசித்து வேலைகளை பங்கிட்டுகொள்வது

8. வாரத்தில் ஒருநாள் உங்களுக்கென்று சிறப்பு நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை செய்வது

9. அண்டை வீட்டுக்காரர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வது

10. பிள்ளைகள் ஏதாவது சாதிக்கும்போது தட்டிக்கொடுத்து பாராட்டுவது

11. தங்கள் வாழ்க்கை முறையும் நம் வரலாற்றையும் கற்றுத்தருவது .

12.தான் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களிடம் நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுவது

தொடக்க பள்ளிக்கு முந்தைய காலகட்டத்தில் - 75 சதவீதம் தாயாகவும், 25 சதவீதம் ஆசானாகவும்.
 
தொடக்க பள்ளிக்கு காலகட்டத்தில் - 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் ஆசானாகவும்.

தொடக்க பள்ளிக்கு பிந்தைய காலகட்டத்தில் - 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் தோழியாகவும்.

மேலே சொன்னதுபோல நமது பங்கு, பிள்ளைகள் வளர்ப்பில் இருந்தால் நாமும் சவால்களை சமாளித்து நம் பிள்ளைகளை சாதனையாளனாக உருவாக்க முடியும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...