கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜோசப் லிஸ்டர்...

 
ஜோசப் லிஸ்டர்... மனிதகுலத்தை காத்த மருத்துவர். இளம் வயதில் மருத்துவம் மீது ஆர்வம் கொண்டு அதை கற்று தேர்ந்தார். இவர் காலத்தில் கெட்ட காற்றால் நோய்த்தொற்று உண்டாவதாக எண்ணி காற்று புக முடியாத மாதிரி பார்த்துகொண்டார்கள். இதைவிட கொடுமை எந்த க்ளவ்ஸ் இல்லாமல் அப்படியே அறுவை சிகிச்சை செய்வார்கள்; கூடவே இரத்தகறை நிறைந்த துர்நாற்றம் மிகுந்த ஆடையை அணிவது பெருமையாக கருதப்பட்டது.
அப்பொழுது தான் நொதித்தல் நுண்ணியிரிகளால் உண்டாகிறது எனும் பாஸ்டரின் கண்டுபிடிப்பு இவரை கவர்ந்தது. அவற்றை நீக்க அவர் வடிகட்டுதல், சூடுபடுத்தல் மற்றும் வேதி பொருட்களை பயன்படுத்தல் ஆகிய மூன்று முறைகளை சொல்லி இருந்தார்.

அதிலிருந்து மூன்றாவதை தேர்ந்தெடுத்து மரங்கள் அரிக்காமல் தடுக்கும் கார்பாலிக் அமிலத்தில் முக்கிய பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்; அறுவை சிகிச்சையின் பொழுது சுத்தமான நீல நிற ஆடைகளை அணிந்துகொண்டு செயல்பட்டார்.

ஒரு சிறுவன் அவரிடம் எலும்பு முறிவுக்காக வந்தபொழுது கார்பாலிக் அமிலத்தில் முக்கி அவனுக்கு சிகிச்சை தந்தார், எந்த தொற்றும் இல்லாமல் எலும்பு கூடிக்கொண்டது அப்பொழுது அது மிகப்பெரிய ஆச்சரியம்.

அப்படியும் மற்றவர்கள் பின்பற்ற யோசித்தார்கள். நாட்டின் மன்னருக்கு (ஏழாம் எட்வர்டுக்கு) அப்பெண்டிசிடிஸ் இருந்தது; அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் பிழைப்பது அப்பொழுது அரிது. இவரை ஆலோசனை கேட்டார்கள். அவரின் முறைகளை பின்பற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மன்னர் பிழைத்தார். அவர் என் உயிரை காப்பாற்றிய லிஸ்டர் என புகழ தொற்றில்லா அறுவை சிகிச்சைகள் சாத்தியமாகின.

பிப். 10 : நோய்த்தொற்று இல்லா அறுவை சிகிச்சையின் தந்தையின் நினைவு தினம்.

>>>ராண்ட்ஜன்....

ராண்ட்ஜன் இளம் வயதில் அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். ஜெர்மனியில் பல்வேறு பல்கலைக்கழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார்.

பேரியம் பிளாடினோ சயனைட் பூச்சு பூசிய திரை மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் கதிர்களை பற்றி ஆய்வு செய்கிற பொழுது திரையில் மங்கலான பச்சை ஒளிரலை அவர் கண்டார்; அதற்கு காரணமான கதிரை எக்ஸ் கதிர் என அழைத்தார்.

அவை புத்தகங்கள் வழியாகவும் மனித உடல்களின் வழியாகவும் கடந்து போவதை கண்டார்; நடுவில் இந்த கதிர்களின் மீது மனைவியின் கைபட்டு அவரின் எலும்புகள் அப்படியே பதிவான பொழுதுதான் எலும்புகளை கடந்து எக்ஸ் கதிர்கள் செல்லாது என்பதும் அதைக்கொண்டு குண்டுகள் ஏதேனும் குறைகள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பின் கண்டறிய பயன்படுத்தலாம் என உணர்ந்து அதை செயல்படுத்தினார்.

பியரி கியூரியை போலவே தன் கண்டுபிடிப்புகளை அவர் காப்புரிமை செய்யவில்லை. மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார். அவருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது; அதில் கிடைத்த பணத்தை தான் வேலை பார்த்த பல்கலைகழகத்திற்கே கொடுத்து விட்டார். பல்வேறு அயனிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்த இவர் இதே நாளில் (பிப்.10) மறைந்தார். அவரின் பெயரில் தனிம அட்டவணையின் 111 வது தனிமம் வழங்கப்படுகிறது.

>>>தாமஸ் ஆல்வா எடிசன்.

 
தோல்வி என்பது வீழ்ச்சியல்ல... படிப்பினையே!

அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டு பிடிப்பைச் செயல்படுத்தப் பெரிய நிறுவனங்கள் முன் வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடு செய்து சொந்தமாகத் தொழிற்சாலை தொடங்கினார் எடிசன்.

மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணலைப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார். ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டாலருக்கு விற்பனையான நேரத்தில், நான்கு டாலர் அடக்க விலை யில் எடிசன் உற்பத்தி செய்தார். விற்பனை தொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப் பகுதிகளில் உயர் ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டுபிடிக்கப்படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டாலராகக் குறைந்தது. நஷ்டமடைவது தவிர வேறு வழியில்லை எனத் தெரியவந்ததும், உடனே தொழிற்சாலையை மூடினார்.

எடிசனிடம் அவரது நண்பர்கள், ‘‘சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேயடியாக நஷ்டமடைந்திருக்க வேண்டிய தில்லையே’’ என்றார்கள். ‘‘நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல... படிப்பினையே!’’ என்றபடி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் எடிசன். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கான்கிரீட் கலவையைக் கண்டுபிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தைவிட அதிகமாகச் சேர்த்தார்.

அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதியரின் நான்காவது மகனாக, 1847-ம் வருடம் பிறந்தார் தாமஸ் ஆல்வா எடிசன்.

தலை பெரிதாக இருந்ததால், ‘மண்டு, மூளை வளர்ச்சி குறைந்தவன்’ என ஆசிரியரும் மாணவர்களும் கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுத் தாயிடமே பாடம் பயிலத் தொடங்கினான் சிறுவன் தாமஸ். ஊரில் விளையும் பொருட்களைப் புகை வண்டியில் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தும், நகரத்தில் இருந்து பத்திரிகைகள் வாங்கி வந்து மற்ற ஸ்டேஷன்களில் விற்பனை செய்தும் சம்பாதித்தான். உள்நாட்டுப் போர் காரணமாகப் பத்திரிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து, ரயில்வே அதிகாரிகளின் உதவியுடன் புகைவண்டியிலேயே இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து ‘வீக்லி ஹெரால்ட்’ பத்திரிகையை விற்கத் தொடங்கினான். ஆசிரியர், அச்சடிப்பவர், விற்பனையாளர் என எல்லா வேலைகளையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15.

எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும் உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோ கிராப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமா’வைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது!

1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, ‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் என்பதை, 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.

தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத இவரது தன்மையே!

>>>நெல்சன் மண்டேலா....

 
கடல் கடந்து உலகமெல்லாம் வியாபாரம் செய்யபோன ஐரோப்பியர்களின் கண்ணில் ஆப்பிரிக்காவும் பட்டது. அதனுள் நுழைந்து அங்குள்ள பூர்வ குடிகளை தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செலுத்தி வந்தனர். தன் நிறமே உயர்ந்தது என்கிற கீழ்த்தரமான எண்ணம் கொண்டு அவர்களை வாட்டி வதைத்தனர்.

பெரும்பான்மை மக்களான அவர்களுக்கு எந்த உரிமையும் தராமல் அடக்கி வைத்து எண்ணற்ற துன்பங்களை தந்தனர். அதில் சிலரை கடல் கடந்து தங்கள் பண்ணைகளில் வேலை செய்ய கொண்டு போனதில் உருவானது தான் அமெரிக்க ஆப்பிரிக்க இனம்.

தங்கள் சொந்த மண்ணில் அவர்கள் மட்டுமல்ல; இந்தியர்களும் அவ்வாறே நடத்தப்பட்டனர். தன் நண்பர் ஒருவருக்காக வாதாட தென் ஆப்பிரிக்கா போயிருந்த காந்தி, பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறத்தால் கறுப்பர் என்பதால் பயணச்சீட்டு எடுத்திருந்தும் நள்ளிரவில் வெளியே தள்ளப்பட்டார். யோசித்த காந்தி தன் வலியை தன் மக்களின் வலி என உணர்ந்தார். -அமைதி வழியில் போராடினார். ஓரளவிற்கு தன் மக்களின் உரிமைகளை மீட்டார்.

நெல்சன் மண்டேலா எனும் மாமனிதர் காந்திக்கு சில காலம் கழித்து அங்கே களத்துக்கு வந்தார். வக்கீலாக தன் வாழ்க்கையை நடத்தி பல கறுப்பின மக்களின் விடுதலைக்கு உழைத்தார். அப்பொழுது உதித்து கறுப்பின மக்களுக்காக போராடிக்கொண்டு இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தார்.

எளிய போராட்டங்களின் மூலம் உரிமையை வென்றெடுத்து விடலாம் என்கிற அவரின் கனவு ஆங்கிலேய ஆட்சியின் அணுகுமுறையால் தகர்ந்தது. ஆயுதம் ஏந்தி தன் நாட்டுக்காக போராடினார்; சிறையில் அடைக்கப்பட்டார். 27 ஆண்டுகள் சிறையில் வாடினார். காந்தியின் போராட்ட முறை அவரை ஈர்த்தது.

தன் இனத்துக்காக மட்டும் போராடாமல் இரு இனத்துக்கும் சம உரிமை என யோசித்தார். அமைதி வழியில் மக்களை போராட சொன்னார். மகன் இறந்தபொழுது சிறையை விட்டு வெளியேறி வர மன்னிப்பு கேட்டால் என்ற விடுவிக்கிறோம் என்றபொழுது மறுத்தார். கிளார்க் அங்கே பதவிக்கு வந்த பின் இவரை விடுதலை செய்தார். 50,000 மக்கள் திரண்டிருந்தார்கள். பலர் ஆடிப்பாடி குதூகலித்தனர்.

சன்னமான ஆனால் தீர்க்கமான குரலில்: "Our struggle has reached a decisive moment. Our march to freedom is irreversible" என அவர் சொன்னார்.

44 வயதில் சிறை சென்ற அவர் சிறை மீளும்பொழுது 71 வயது முதியவராகி இருந்தார். யாரையும் சந்திக்க முடியாமல் சூரியனின் வெளிச்சமே பெரும்பாலும் கண்ணில் படாமல் இருந்தாலும் காந்தி வழியில் வெள்ளையின மக்களையும் நேசித்தார்.

நேர்மையான மனிதர் என்பதற்கு எடுத்துகாட்டாக மண்டேலாவை எடுத்துக்கொள்ளலாம். அடக்குமுறைக்கு அடிபணியாத, துணிச்சலும், தீர்க்கமும், அறிவும் கொண்ட செயல்வேகம் கொப்பளிக்கும் ஒரு நாயகன் தேவையென்றால் மண்டேலாவை அதற்கு நிகரில்லா எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

இந்த சகாப்தத்தின் அசாத்தியமான ஓர் அடையாளமாக அவர் என காஸ்ட்ரோ சொன்ன வரிகளே போதும் அவரின் பெருமையை உணரப்போதும்.

பிப். 11: நெல்சன் மண்டேலா இருபத்தி ஏழு ஆண்டுகால சிறைவாசத்துக்கு பின் விடுதலை செய்யப்பட்ட நாள் இது.

>>>ஆபிரகாம் லிங்கன்....

 
இன்று பிப்.12 : ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

‘‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’

முதன்முதலாகத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார் ஆபிரகாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், ‘‘உங்களில் சொர்க் கத்துக்குச் செல்ல விரும்புபவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்’’ என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரகாம் மட்டும் பேசாமல் நின்றார்.

‘‘ஆபிரகாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?’’ எனப் பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், ‘‘நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்’’ என்று உறுதியான குரலில் சொன்னார் ஆபிரகாம்.

‘‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’ என, புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809&ம் வருடம், அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்குத் தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக்கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.

இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தாலும், காய்கறி போல மனிதர் கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்குள் ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்ததும், அவசரமாக தனது 22-வது வயதில் ஒரு நகராட்சித் தேர்தல் வேட்பாளராகக் களம் இறங்கி, படு தோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதிலும் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்துபோயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள். நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’ என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தை கள்!

இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத் தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச் சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தைச் சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப் படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக்கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு, 1834&ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அதன்பின், நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப் பினர், உப ஜனாதிபதி என பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு, சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சந்தித்து, 1860-ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத் தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835-ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33&வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து, நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று பேர் சிறு வயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந் தது. இத்தனைத் தோல்வி களையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி யானதும், அதிரடி நடவடிக்கை எடுத்து, அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865&ல் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறி யனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ என்பது ஆபிரகாம் லிங்கனுக்கு மட்டுமல்ல...

நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாகப் போராடும் ஒவ்வொருவருக்கும் அது வெற்றித் திருமந்திரம்!

>>>லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...

 
அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

>>>டார்வின்....

 
உலகமே ஒரு பாதையில் பயணபட்டுக்கொண்டு இருந்தபோது, "இல்லை, இது தவறு!" என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது.

அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின் அங்கே சிறுவன் ஒருவன் கதறக் கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார் (அப்போது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை). அப்பாவின் ஆலோசனைப்படி, இயற்கையியல் வல்லுநர் ஆனார்.


HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகை சுற்றி வந்தபோது பல்வேறு அற்புதங்களை கண்டார். பல விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார். அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார். சில அழிந்திருந்தன; அவையே மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார்.


பைபிள் சொன்ன ‘மனிதனை கடவுள் படைத்தார்’ என்பதில் இருந்து மாறுபட்டு, மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற அறிவியலின் கோட்பாடுகளில் ஒன்றான பரிணாமக்கொள்கையை ‘‘உயிரினங்களின் தோற்றம்’’ என்கிற தாளை வாலஸ் உடன் இணைந்து வெளியிட்டார்.

பரிணாமக் கொள்கையை கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர்; இவரை குரங்கு என சித்தரித்தார்கள் பல மதவாதிகள்; பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் தான் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின் தொடர்ந்து பேசினார். மூன்று முக்கிய கூறுகளை அவர் விளக்கினார்.


1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது).


2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி).


3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில் பல்வேறு குணங்களில் உண்டாகும் மாறுபாடுகள்).


மதத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என சொன்ன அவர், கடவுளை பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை. அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இன்றைக்கு தான் 153 ஆண்டுகளுக்கு முன் ORIGIN OF SPECIES என்கிற தன் ஆய்வுத்தாளை சமர்பித்தார்.


‘‘உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்’’ எனச் சொன்ன டார்வினின் பிறந்தநாள் இன்று (பிப்.12).

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...