கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இதயத்தை பலப்படுத்தும் வெள்ளைக் காய்கறிகள்

 
வெள்ளை காய் மற்றும் பழ வகைகளில் தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது. காலிபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பூண்டு, காளான்கள், இஞ்சி, வெள்ளை உருளை, முள்ளங்கி ஆகியவற்றிலும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக காளான்கள் காய்கறியாகவே கருதப்படுகிறது. இது உண்பதற்கு ஏற்ற உணவு. காளான்களில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் நிறங்களும் உள்ளன. உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள் மட்டுமே. பளுப்பு நிறமோ அல்லது கறும் புள்ளிகளோ கொண்டவை வயதில் முதிர்ந்த இனப்பெருக்கத்தில் ஈடுப்பட்டுள்ள காளான்கள் என்பதனை குறிக்கும். காளான்களில் அதிக புரதம்காணப்படுகின்றது. உலகம் முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்த காளான்கள் உள்ளன, பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் அவற்றில் அடங்கியுள்ள சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துக்களே ஆகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. இது ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபங்கல், மேலும் ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வெள்ளைப் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.

உருளைக்கிழங்கும், வாழைப்பழமும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைடிரேட், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன. இது மனிதர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்க வல்லது.

காலிஃப்ளவர் விட்டமின் சத்து நிறைந்தது. இதில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் குறைந்த அளவு கலோரிகளே காணப்படுகின்றன. பீட்ரூட், காரட் போல டர்னிப் வேரில் கிடைக்கும். இந்த வெள்ளைநிற காய்கறியில் விட்டமின் C சத்து அதிகம் காணப்படுகிறது. இதை பச்சையாக சலாட்போல சாப்பிடலாம். இந்த வெள்ளை நிற காய்கறிகளை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் .இது போன்ற எண்ணற்ற நல்ல பல தகவலை தந்து கொண்டு இருக்கும் சகோதரி பரமக்குடி சுமதி அவர்களுக்கு இன்று ஒரு தகவல் சார்பாக நமது நன்றியே தெரிவித்து கொள்கிறோம்

>>>தாய்ப் பாலை தானம் தந்து கின்னஸ் சாதனை படைத்த தாய்!!

 
தாய் பால் கொடுத்தால் தன்னுடைய அழகை இழந்து விடுவோம் என்று எண்ணி தன்னுடைய பிள்ளைக்கே தாய் பால் கொடுக்கும் சில பெண்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு தாய் .

அமெரிக்காவில் உள்ள வடக்கு டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் 86 கேலன்கள் ( 325.54 லிட்டர்) தாய்ப் பாலை தானமாக கொடுத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை இடம் பெறச் செய்துள்ளார்.

அலிசியா ரிச்மேன் என்ற 28 வயதுடைய அந்தப் பெண் க்ரன்பரி நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2012ம் ஆண்டு மார்ச் வரை கிட்டத்தட்ட 86 கேலன் தாய்ப்பாலை வடக்கு டெக்சாஸில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக கொடுத்திருக்கிறாராம்.அலிசியாவிற்கு 19 மாதத்தில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு தேவையான பால் போக மீதமுள்ள பாலைத்தான் பம்ப் செய்து தானமாகக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், தாய்ப் பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் அது பேருதவியாக இருந்துள்ளது. இதற்காகவே அவருடைய பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இது கடவுள் தனக்கு அளித்த வரம் என்று கூறியுள்ள அலிசியா, தாய்ப்பால் தனக்கு அதிகமாக சுரப்பதனால்தான் அது கிடைக்காத குழந்தைகளுக்கு தானமாக தரமுடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

>>>சர்.சி.வி. இராமன்

 
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, 16 வயது தான் நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

இவர் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.

பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் 'சர்' பட்டம் அளிக்கப் பெற்றார். 1954 ல் 'பாரத ரத்னா' பட்டம் பெற்றார்.

>>>கிரென்கே கிளாசிக் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்!

 
ஜெர்மனியில் நடந்து வரும் கி‌ரென்கே கிளாசிக் செஸ் தொடர் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஜெர்மனியில் நடந்த கி‌ரென்கே கிளாசிக் செஸ் தொடர் போட்டியின் 10 ஆவது சுற்றில்,தன்னை எதிர்த்து ஆடிய ஜெர்மன் வீரர் அகர்காடி‌ஜை வீழ்த்தி சாம்பியன் பட்டம்‌ வென்றார்.

>>>இன்றைய 'கூகுள் டூடுள்' நாயகன் நிகோலஸ் கோபர்னிக்கஸ்!

 
இன்று - பிப். 19 : நிகோலஸ் கோபர்னிக்கஸ் எனும் இணையற்ற வானியல் வல்லுநரின் பிறந்த தினம்.

கிரேக்கத்தின் தத்துவம், அறிவு ஆகியன உலகை கட்டிப் போட்டிருந்தன. அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்றே யாவரும் எண்ணினார்கள். அரிஸ்டாட்டில் வானியலுக்கு சில விஷ்யங்களை வகுத்து தந்துவிட்டு போனார். பூமி தான் இந்த மண்டலத்தின் மையப்புள்ளி; நம் பூமி நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றால் உருவாகி உள்ளது. அதை சுற்றி பிற கிரகங்கள் சுழல்கின்றன என சொன்னார். அவை பூமியை சுற்றி கச்சிதமான வட்டப்பாதைகளில் சுழல்வதாக மனிதர் சொல்லிவிட்டு போனார்.

வந்தார் தாலமி... கிரகங்கள் பூமியை கச்சிதமான வட்டப்பாதையில் சுற்றிவந்து கொண்டிருப்பது உண்மையானால் ஏன் கிரகங்கள் ஒரே மாதிரியான சுற்றுப்பாதையில் பயணிப்பதில்லை என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு பதில் தந்தார் இவர். குறிப்பிட்ட ஒரு சுற்றுப்பாதை மட்டும் வட்டமாக இருக்கும் அதை சுற்றி வருகிறபொழுது மட்டும் கோள்கள் நமக்கு பூமியை சுற்றுவதை உணர முடியும்; வேறு சில சமயங்களில் பிறப்பாதையில் பயணிப்பதால் ஒழுங்கற்றதாக அதன் இயக்கம் படுகிறது என்றார். ஈக்குவண்ட் என்கிற புள்ளியை உருவாக்கி அப்புள்ளியில் மட்டும் இவ்வாறு வட்டப்பாதையில் நகர்தல் நிகழும் என்றார்.

கோபர்நிக்கஸ் வந்தார்... நல்ல வளமிகுந்த குடும்பத்தில் போலந்து நாட்டில் பிறந்திருந்தார் அவர். அப்பா அம்மாவின் மறைவுக்கு பின் மாமாவின் கவனிப்பில் வளர்ந்த மனிதர் பாதிரியார் ஆனார். செல்வ வளத்துக்கு குறைவில்லாமல் வாழ்க்கை நகர்ந்தது. பாதிரியாரான இவர் கிறிஸ்துவ சட்டங்களை கற்றுத்தேற கல்லூரி போனார். அங்கு நோவரா எனும் வானியல் பேராசிரியரை கல்லூரி வாழ்க்கையின் பொழுது சந்தித்தார்; அவர்தான் தாலமியின் கருத்துக்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கி பார்க்க வேண்டும் என்றார். இவர் மருத்துவம் படிக்க வேறொரு கல்லூரிக்கு போனார்; அப்பொழுது வானியலும்,மருத்துவமும் ஒன்றுக்கு ஒன்றுக்கு இணைந்தவை எனக்கருதப்பட்டு வானியல் போதிக்கப்பட்டது. அங்கே கற்றுத்தேர்ந்த இவர் தாலமியின் கருத்துக்கள் தவறு என்றார்.

பைபிளை கற்ற மதகுரு என்றாலும் அதில் சொல்லிய பூமி தான் மையம் அதைச்சுற்றி தான் சூரியன் சுழல்கிறது எனும் கருத்தை மறுதலித்தார்; சூரியன் தான் மையம் அதைச் சுற்றி தான் மற்ற கோள்கள் சுழல்கின்றன அண்டம் மிகப்பெரிது அதில் சூரிய குடும்பம் மிக மிக சிறியது என அடித்து சொன்னார். தான் எழுதியதை அப்பொழுது தான் பிறந்த அச்சுத்துறையின் ஆன் தி ரெவலுஷன்ஸ் எனும் நூலாக வடித்தார். இவரின் கருத்தை ஒட்டி அதையே சொன்ன ப்ரூனோ எரித்து கொல்லப்பட்டார்; கலிலியோ சிறைப்படுத்தப்பட்டார். ஆனாலும், உண்மையை பல்லாண்டுகள் கடந்து உலகம் ஏற்றுக்கொண்டது.

>>>கோபால கிருஷ்ண கோகலே...

 
கோபால கிருஷ்ண கோகலே... இந்திய விடுதலைப் போரட்ட வீரர். வறுமையான சூழலில் பிறந்தவர். அப்பாவை இளம் வயதிலேயே இவர் இழந்துவிட, அண்ணன் வேலைபார்த்து இவரை படிக்க வைத்தார்.

மின்சாரம் இல்லாத அக்காலத்தில் தெரு விளக்கில் ஒண்டி படித்தார். ஒரே டிராயர், சட்டை, ஒருவேளை மட்டும் சாப்பாடு மட்டுமே வாழ்க்கைக்கு வாய்த்தது. அந்த ஒருவேளை சாப்பாட்டையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப் படித்தே பி.ஏ. பட்டம் பெற்றார்.

அரசாங்க வேலைகள் காத்துக் கொண்டிருந்தபொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணினார். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார். வன்முறை இல்லாத போராட்ட முறைகள், இருக்கும் அரசு நிர்வாகத்தில் மாற்றம் என குறிக்கோள் கொண்டு செயல்பட்டார்.

நேரடி போராட்டத்தின் மூலம் விடுதலை வேண்டும் என்பது திலகரின் கோஷமாக இருந்தது. குழந்தைத் திருமணத்தை தடை செய்யும் ஆங்கிலேய அரசின் சட்டத்தை இவர் ஆதரித்தார். இந்துக்களின் நம்பிக்கைகளில் தலையிடுகிறார்கள் என அச்சட்டத்தை திலகர் நிராகரித்தார். மோதல் வலுத்தது; இனிமேல் இணைந்து செயல்பட முடியாது என காங்கிரஸ் இரண்டு பிரிவாக உடைந்தது.

மிதவாதிகளின் பிரிவுக்கு இவர் தலைமை தாங்கினார்; சமூகத்தின் சேவகர்கள் எனும் அமைப்பை தொடங்கினார். அதில் சேர்ந்தவர்கள் தங்களின் சொத்துக்களை நாட்டுக்கு எழுதி வைத்து விடவேண்டும். இந்த அமைப்பு கல்வியறிவை எளிய மக்களுக்கு போதித்தது. நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது. பல பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது.

தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கவும் செய்தார் கோகலே. மகாத்மா காந்தியடிகள் தன்னுடைய குரு என இவரைத்தான் வாஞ்சையோடு குறிக்கிறார்; கோகலேவை சந்திக்கும் முன்வரை ஆங்கிலேய அரசின் மீது மிகப்பெரிய மரியாதை அவருக்கு இருந்தது; முதல் உலகப் போரில் ஈடுபட்டு பட்டயம் எல்லாம் பெற்ற காந்தி, கோகலேவை சந்தித்தது திருப்பம்.

மக்கள் இந்த ஆட்சியில் எப்படி இருக்கிறார்கள் என உணர இந்த தேசம் முழுக்க பயணி என அவரின் அறிவுறுத்தலே காந்தியை மகாத்மா ஆக்கியது. மதுரையில் அரையாடை பூண்டார்; தேச விடுதலைக்கு தலைமையேற்றார்.

இருபது வயதில் பொதுவாழ்வில் நுழைந்த அவர் ஆஸ்துமா, நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு இருந்த போதிலும் விடாது நாட்டுக்காக உழைத்தார். இங்கிலாந்து போயிருந்த பொழுது 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார் என்பதே அவரின் இடைவிடாத உழைப்புக்கு சான்று.

காந்தியின் அரசியல் குருவான அவரை, அவரது நினைவு தினமான இன்று (பிப்.19) நாமக்கல் கவிஞரின் வரிகளோடு நினைவுகூர்வோம்.

'பெருநிலக் கிழவியிந்த பேதையாம் இந்து தேசம்

பலபல துன்பமுற்றுப் பஞ்சையாய் வாடிநிற்க

வெறுமனே யிருந்துநாங்கள் வீணரா யலைந்து கெட்டோம்

வேண்டினோம் தேசபக்தி விமலனார் எமக்குத் தந்த

பெருமானே கோகலே நீ பின்னையும் பிறந்து வந்து

பெற்றதாய் இந்துமாதின் பிணியெலாம் அறுத்து வைப்பாய்!'

>>>பிப்ரவரி 19 [February 19]....

நிகழ்வுகள்

  • 1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
  • 1674 - இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • 1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
  • 1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
  • 1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.
  • 1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 ஜப்பானியப் போர் விமானங்கள் ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
  • 1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.
  • 1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
  • 1985 - ஸ்பெயினில்வின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
  • 1986 - அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1473 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)
  • 1833 - ஏலி டூக்கோமன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)
  • 1855 - உ. வே. சாமிநாதர், தமிழறிஞர் (இ. 1942)
  • 1859 - சுவாண்டே ஆரேனியஸ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர், (இ. 1927)
  • 1900 - ஜியோர்கஸ் செஃபேரிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர், (இ. 1971)
  • 1941 - டேவிட் குரொஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
  • 1943 - டிம் ஹண்ட், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்
  • 1956 - ரொடெரிக் மாக்கினன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இறப்புகள்

  • 1951 - அண்டிரே கைட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், (பி. 1869)
  • 1952 - நூட் ஹாம்சன், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், (பி. 1859)
  • 1988 - அண்டிரே கூர்னான்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...