கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> பழங்குடியின மாணவர்களின் படிப்பிற்காக வீட்டுச் சுவர்களை கரும்பலகைகளாக மாற்றிய பள்ளி தலைமையாசிரியர்...

 


>>> பக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...

 


>>> இன்று ஜே.இ.இ. பிரதானத் தேர்வு...

 


>>> சாகாவரம் பெற்ற மூன்றெழுத்து நீதி தேவதை (RBG - Ruth Bader Ginsberg) அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி - பெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்....

 


அவர் மேடைக்கு வந்தால் கூட்டம் முழுதும் "ஆர்.பி.ஜி.' "ஆர்.பி.ஜி.' என்று கோஷிக்கும். அவர் முகமும் அந்த மூன்றெழுத்தும் போட்ட டீ ஷர்ட் அனைவரையும் அலங்கரிக்கும். அவர் குறித்த ஆவணப்படம், நெட் ஃப்ளிக்ஸில் போடு போடு என்று போடுகிறது. ஆர்.பி.ஜி ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், 20,000 பேர் நிச்சயம் ஆஜராகி விடுவார்கள்.

 யார் அந்த ஆர்.பி.ஜி.? திரைப்பட நடிகரா? அரசியல்வாதியா? இல்லை இல்லை. அவர் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி "ரூத் பேடர் கின்ஸ்பர்க்'. ஓர் ஆதர்ச நீதிபதி என்றால் நாம் எப்படி ஓர் ஆளுமையை உருவகம் செய்வோமோ அப்படியே அவர் இருந்தார். "ஆர்.பி.ஜி காலமானார்' என்ற செய்தியைக் கேட்டவுடன் உலகத்தில் இருந்து ஒளிக்கீற்று ஒன்று மறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
 அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் "கிளார்க்' பணிக்கு மனு கொடுத்தார். பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மனு நிராகரிக்கப்படுகிறது. "கிளார்க்' என்றால் எழுத்தர் இல்லை. "லா கிளார்க்' என்றால் நீதிபதிகளுக்கு முன்கூட்டியே தீர்ப்புகள் எடுத்துக் கொடுத்து சட்ட நுணுக்கங்களை ஆராய்ச்சி செய்து நீதிபதி தீர்ப்பெழுத உதவுபவர். "க்ளார்க்'காக இருந்த பலர் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நிராகரிப்புக்குப் பல ஆண்டுகள் பின், அதே ஆர்பி ஜி அமெரிக்காவின் இரண்டாவது பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிறார்.
 அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள்தான். ஒவ்வொரு வழக்கையும் ஒன்பது பேரும் ஒன்றாக அமர்ந்து விசாரிப்பார்கள். இங்கு போல இரண்டு பேர், மூன்று பேர் என்று அமர்வுகள் கிடையாது. அவர்களுக்குப் பணிமூப்பு கிடையாது. இறக்கும் வரை பணி புரியலாம்.
 "இதென்ன அநியாயம், சாகும்வரை நீதிபதியா' என்கிறீர்களா? ஆர்.பி.ஜி. போன்ற ஒருவர் நமக்கு நீதிபதியாக இருந்தால் அவருக்கு சாகாவரம் தர இறைவனை வேண்டிக் கொள்வீர்கள்.
 "எவ்வளவு பெண் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்' என்று அவரைக் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்: "ஒன்பது பேரும் பெண்களாக இருந்தால் சரியாக இருக்கும்'.
 கேள்வி கேட்டவர் சற்று ஆடிப்போய் விட்டார். "அது எப்படி சரியாக இருக்கும்' என்று கேட்டதற்கு அவர் தந்த பதில்: "ஒன்பது நீதிபதிகளும் ஆண்களாக பல காலம் இருந்தார்களே, அப்போது ஏன் யாருக்கும் அது தவறாகத் தோன்றவில்லை?'
 ஆம், ஆர்.பி.ஜி.யின் பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். பெண்கள் சமத்துவத்திற்கு கடைசி மூச்சு வரை (18 செப்டம்பர் 2020) அதாவது தனது 87 வயது வரை குரல் கொடுத்தவர். "நான் எங்களுக்காக (பெண்பாலருக்கு) தயவு ஒன்றும் கேட்கவில்லை. எங்கள் குரல்வளையின் மீது வைத்திருக்கும் உங்கள் காலை எடுங்கள். அது போதும்' என்றார் அவர். ஐந்து அடி உயரம்தான். ஆனால் அவரது ஆளுமை ஆகாய உயரம்.
 சட்டப் படிப்பு முடிக்கும்போதே அவருக்குத் திருமணமாகி, அவர் தாயும் ஆகி இருந்தார். பல சட்ட நிறுவனங்கள் அவரை வேலைக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு மூன்று காரணங்கள்: அவர் பெண், அவர் யூதர், அவர் ஒரு தாய்.
 அவர் வாழ்க்கை, ரோஜா மலர் தூவிய பாதையாக அமையவில்லை. கரடு முரடானதுதான். தன் கொள்கைகளில் துளியும் சமரசம் செய்து கொள்ளாமல், அமெரிக்க அரசியல் சாசனத்தை ஆதர்சமாகக் கொண்டு, அதில் பெண்களுக்கும், கருப்பர்களுக்கும் ஓரங்கட்டப்படும் உரிமைக்கும் குரல் கொடுத்தார்.
 தன் கணவரை கல்லூரியில் சந்தித்தார். அவரை மணந்து அவர் 2010}இல் புற்று நோயால் இறக்கும் வரை அந்நியோன்னிய வாழ்க்கை வாழ்ந்தார். நம் ஊர் போல (கரோனா வரும் வரை) உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் வேலைக்கு ஆட்கள் அங்கு கிடையாது. சமையலில் இருந்து அனைத்துப் பணிகளிலும் அவர் கணவர் சம பங்கு ஏற்றார். சொல்லப்போனால் அவரே முக்கால்வாசி நாள்கள் சமைத்து விடுவாராம். ஆர்.பி.ஜி. கூறினார்: "என் வாழ்க்கைத்துணை தன் வேலை எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் என் வேலையும் என நினைத்தார்'. கணவர் அமைவதும் பெரிய வரம் இல்லையா?
 திருமணத்திற்குப் பின்னர் அவர் மாமியார் அவரிடம் "உன் திருமண வாழ்வின் வெற்றியின் ரகசியம் என்ன' என்று கேட்டார். "சில சமயம் செவிடாக இருக்கவேண்டும்' என்றாராம் ஆர்.பி.ஜி. இதைப் பற்றி சொல்லிவிட்டு "எனது 56 ஆண்டு இல்லற வாழ்வில் மட்டுமல்ல என் வெளி வாழ்விலும் உச்சநீதிமன்றத்திலும் இதைப் பின்பற்றி இருக்கிறேன்' என்றார்.
 ஆர்.பி.ஜி.க்கு புற்று நோய் வந்தது.பெருங்குடல், கணையம், நுரையீரல் பகுதிகளில். போதுமா? "காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்' என்று நம் மகாகவி பாடினார். ஆர்.பி.ஜி. அதை செய்து காட்டினார். புற்று நோய் ஒருநாள் கூட அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய விடாமல் அவரைத் தடுக்கவில்லை.
 ஒருநாள் அவர் கணவர் "ரூத்! உன்னை பார்த்தால் வதை முகாமில் இருந்து வந்தவர் போல் இருக்கிறது. உடலைப் பேண ஏதேனும் செய்ய வேண்டும்' என்று சொன்னாராம். உடனே அவர் "வொர்க் அவுட்' பயிற்சியாளர் ஒருவரை வரவழைத்து வெயிட் தூக்குதல் முதலிய பயிற்சிகளைச் செய்யத் தொடங்கினார். அதை அவர் தவறாது செய்வாராம். அவர் வொர்க் அவுட் செய்வது பிரபலமாகிப் பலரையும் பின்பற்ற வைத்தது.
 பெண்களுக்கு வீடு}வேலை என்கிற கழைக்கூத்து நன்றாகத் தெரியும். அதை "பேலன்ஸ்' செய்து கொண்டே இருக்கவேண்டும். அவர் தனது முதல் குழந்தையை கருவுற்றிருந்தபோது, கணவர் கட்டாய ராணுவப் பணிக்குச் சென்று விட்டார். ஆர்.பி.ஜி. சட்ட கல்லூரியில் சேரவேண்டும். தன்னால் முடியுமா என்று தயக்கம்.
 அவர் மாமனார் சொன்னார், "ரூத், இந்த இக்கட்டில் நீ சட்டப் படிப்பைக் கைவிட்டால் அது புரிந்துகொள்ளக் கூடியது. யாரும் உன்னைக் குறைவாக நினைக்கமாட்டார்கள். ஆனால், உனக்கு உண்மையில் சட்டம் பயிலவேண்டும் என்ற வேட்கை இருந்தால், கவலையை விடு குழந்தையையும் படிப்பையும் எப்படி சமாளிக்கலாம் என்று யோசி' என்றார். தன் கணவருடன் கலந்து ஆலோசித்து அதையே செய்தார்; சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். முதல் மாணவராக வெற்றி கண்டார்.
 அவர் பெற்றோர் பணம் படைத்தவர்கள் இல்லை. கல்லூரிக் கட்டணம் கட்டக்கூட வசதி கிடையாது. அவர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஏற்கும்போது, தன் வெற்றியைத் தன் தாயார் கால்களில் சமர்ப்பித்தார். தாயாரின் அறிவுரைப் பற்றியும் அவர் கூறியுள்ளார்.
 "உன் நேரத்தை கோபம், வெறுப்பு, வருத்தம், பொறாமை போன்ற வெற்று உணர்ச்சிகளில் வீணடிக்காதே. அவை உன் நேரத்தை உறிஞ்சி விடும். நீ செல்ல வேண்டிய இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்லாது'.
 அவருடைய தீர்ப்புகளில் தெளிவு, துணிவு இரண்டும் இருக்கும். "புஷ் எ கோர்' என்று ஒரு தீர்ப்பு. அதிபர் புஷ் பதவி ஏற்றதே அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான். வாக்குகளை மறு கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்று ஃபுளோரிடா மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து புஷ் அமெரிக்க உச்சநீதிமன்றம் வருகிறார்.
 ஐந்து பேர் அவருக்கு சாதகமாக தீர்ப்பு, நான்கு பேர் அவருக்கு எதிராக. அந்த நான்கு பேரில் ஒருவர் ஆர்.பி.ஜி. பெரும்பான்மை (அதாவது ஐந்து பேரின்) தீர்ப்பு, அடிப்படை சட்ட தத்துவத்திற்கு முரணாக உள்ளது என்று அவர் தன் தீர்ப்பில் எழுதினார். ஆனால் ஐந்து நீதிபதிகள் புஷ்ஷுக்கு சாதகமாக இருந்ததால் அவர் வெள்ளை மாளிகையில் அமர்ந்தார்.
 "யுனைடெட் ஸ்டேட்ஸ் எதிர் விர்ஜினியா மிலிட்டரி இன்ஸ்டிடியூட்' என்ற வழக்கில் அவருடைய தீர்ப்பு அனைவரின் பாராட்டையும், கவனத்தையும் ஈர்த்தது. அந்த அமைப்பில் ஆண்களை மட்டும் அனுமதிக்கும் கொள்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதாவது, ஆர்.பி.ஜி.யின் தீர்ப்பு வரும் வரை. "பொதுப்படையாக இதுதான் பெண்களால் முடியும்; அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லி உயர் தகுதி கொண்டுள்ள பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது இனிமேல் செல்லுபடியாகாது' என்று சொன்னார்.
 "ஓல்ட்மஸ்டட் எதிர் எல்சி' என்று ஒரு வழக்கு. மனநலம் குன்றியவர்களின் மனித உரிமைகளை நிலை நாட்டிய மிகப்பெரிய வழக்கு அது. "அரசு, மனநலக் குறைபாடு உள்ளவர்களை தனிமைப்படுத்தி அடைக்காமல் சமூக அமைப்புகளில் வைக்க முடியுமானால் அதை செய்யவேண்டும். அது அவர்களின் மனநலத்தை மேம்படுத்த உதவும்' என்றார். இது 1999}இல் சொன்ன தீர்ப்பு. ஆர்.பி.ஜி. யின் தொலைநோக்கு , மனித உரிமை சார்ந்த சமத்துவம், கோணாது நிற்கும் நீதி நிலை அனைத்தையும் கூறுகிறது அவரது அந்தத் தீர்ப்பு.
 அவர் வழக்குரைஞராக வாதாடிய ஒரு வழக்கு அவரது நடுநிலைமையை தெளிவுபடுத்தும். அதுதான் "வெய்ன்பெர்கர் எதிர் விசென்பெர்க்' வழக்கு. "பிரசவத்தில் மனைவியை இழந்து குழந்தையை கவனித்துக் கொள்ளும் தந்தைக்கும், தாயாருக்குக் கொடுக்கும் சலுகைகளைத் தரவேண்டும்' என்று வாதாடி வெற்றி பெற்றார் அவர்.
 சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் தீர்ப்புகளை; அவரின் பெருமைகளை. ராக் ஸ்டார் என்கிறார்களே அதுபோல ஒரு கவர்ச்சி ஆர்.பி.ஜி.க்கு எப்படி வந்தது? அவரின் தூய்மை, நீதி வழுவா நிலை, தளரா உழைப்பு, நேர்கொண்ட பார்வை } இவை அனைத்தும் தங்கள் நன்மைக்கே என்று மக்கள் உணர்ந்தார்கள்.
 "ஆர்.பி.ஜி.' என்கிற மூன்றெழுத்து நீதித்துறை வரலாற்றில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறது. அந்த நீதி தேவதைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
 
 கட்டுரையாளர்:
பிரபா ஸ்ரீதேவன் அவர்கள், நீதிபதி (ஓய்வு).

நன்றி: தினமணி நாளிதழ்

>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.09.2020(ஞாயிற்றுக்கிழமை)

 

🌹நமக்கு ஒருவரிடம் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அப்படியில்லாமல் நாமே  தீர்மானித்து விட்டால் பிறகு அவமானங்களும், இழப்புகளும் மட்டுமே நமக்கு மிஞ்சும்.!

🌹🌹மற்றவர்களை அவமானப்படுத்தி இன்பம் கண்டால் அதுவும் ஒருவித மனநோய் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.!!

🌹🌹🌹நீங்கள் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் அமைதியாக விலகிவிடுங்கள்.

ஏனென்றால் நம் நிம்மதி நமக்கு மிக முக்கியம்.

நம் வெறுப்புக்கு முதலில் பழி ஆவது நம் நிம்மதி தான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘இசையிலும், குணத்திலும் உயர்ந்த மனிதர் எஸ்.பி.பி. - ஏ.ஆர். ரகுமான்

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடனான நினைவுகளை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்துள்ளார்.

எஸ்.பி.பி. உடன் தாம் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, பேசியுள்ள ஏ.ஆர்.ரகுமான், இசையிலும், குணத்திலும் உயர்ந்த மனிதரான எஸ்.பி.பி.யின் பண்புகள் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள கூடியவை என்றும், அவரது குரலையும், மனிதநேயத்தையும் எல்லோரும் நேசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.                                                                       📕📘எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இசையமைப்பாளர் கங்கை அமரன் பேட்டியளித்தார்.

மேலும் பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதி அளித்தார்.

📕📘சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு உலகளவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால அமைப்புத் தலைவர்  மைக் ரயன் கூறுகையில், உலகளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாமல் கரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

📕📘மத்திய அரசின் பள்ளிகள் திறப்பது தொடர்பான விஷயம், தமிழகத்தின் சூழ்நிலையை பொறுத்தே ஏற்றுக்கொள்ளப்படும். முதல்வரின் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகள் திறப்பு தொடர்பான அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு

📕📘அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆலோசனை கேட்க வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

📕📘புதிய கல்வி கொள்கை குறித்து இணையவழி கருத்து கேட்பு கூட்டத்தில் மாணவர்களிடம் கருத்து கேட்கவில்லை என மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்

📕📘01/07/2020 முதல் 30/09/2020 வரையிலான காலத்திற்கு CPS  தொகை மீதான வட்டி 7.1% ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

📕📘6 மாதத்திற்கு பிறகு திறக்க தயாராகும் பள்ளிகள்: ஆயத்த பணிகள் தொடக்கம் - நாளிதழ் செய்தி 

📕📘தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் - பள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - சிறப்பு அலுவலரின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

📕📘தேசிய பெண்குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் தொகை ( National Scheme of Incentive to Girls for Secondary Education ) தகுதியான மாணவியரின் வங்கிக் கணக்கு விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

📕📘 'ஆன்லைன்' தேர்வை எழுதாதவர்களுக்கு எழுத்து தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

📕📘தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு 25.96% மட்டுமே அடிப்படை வசதி: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

📕📘தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% வனத்துறையில் பணி வழங்கக்கோரி வழக்கு

📕📘செப்டம்பர் 27-ல் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

📕📘முதுகலை மாணவர்களுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை அறிவிப்பு

📕📘நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.  நாடு முழுவதும் 3,842 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 14.37 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை தற்போது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. www.ntaneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளுடன், தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📕📘இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பதவியில் சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 அரசாணை 37ன் படி 10.03.2020 க்கு முன்னர் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசின் இசைவு பெற்று ஒரு முன் ஊதிய உயர்வு பெற விபரம் கோரி வேளாண்மை இயக்குநர்  சுற்றறிக்கை வெளியீடு

📕📘பல்கலை, கல்லூரிகள் திறப்பு தேர்வு அட்டவணை வெளியீடு: முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

📕📘காவலர் தேர்வு:

தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு. 

https://tnusrbonline.org என்ற இணையதளத்தில் இன்று (செப்.26) காலை 10.00  மணி முதல்,  அக்.26 வரை விண்ணப்பிக்கலாம்.

டிசம்பர் 13ஆம் தேதி எழுத்துத் தேர்வு.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம்.

தேவையான ஆவணங்கள்

1. பத்தாம் வகுப்பு/+2/டிகிரி மதிப்பெண் சான்றிதழ் 

2.ஜாதி சான்றிதழ்

3. தமிழ்மொழி கற்றல் சான்றிதழ் (PSTM)

4.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 

4.கையொப்பம் பத்தாம் வகுப்பு 

5.தொலைபேசி எண் 

6.ஆதார் எண்

📕📘அக்டோபர்  31-ஆம் தேதி  முதலாமாண்டு சேர்க்கையை நிறைவு செய்து,  நவம்பர் 1 முதல் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அமைச்சர் இரமேஷ் பொக்ரியால்  அறிவித்துள்ளார். 

📕📘2006ஆம் கல்வி ஆண்டில் M.Phil., சேர்க்கை பெற்று Arrear வைத்து 2008ல் தேர்ச்சி பெற்றாலும் ஊக்க ஊதிய உயர்வு பெற ஏற்புடையது என திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இயக்குநர் அறிவிப்பு 

📕📘பள்ளிக்கல்வி நாட்டு நலப்பணித்திட்டத்தில் 2019-2020ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்று முடித்த NSS மாணவர்களின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து jdnsed@nic.in/ Isec.tndse@nic.in என்ற மின்னஞ்சலுக்கு விரைந்து அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.

📕📘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சமூக நலத்துறை. இதற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2020

📕📘ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் 10ஆம் மற்றும் 11ஆம், 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஆல்டோ கார் பரிசு அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

📕📘கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்பு உள்ள மாவட்ட ஆட்சியர்களோடு தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

📕📘பிரபல பாடகர் எஸ்பிபி-ன் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில்  72  குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நேற்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

📕📘வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு

ஏற்படாது - தமிழக வேளாண் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம்.

📕📘ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 1.30 முதல் 2.80 வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

📕📘அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து கடைகளில் இனிப்புப் பண்டங்களை சில்லரை விற்பனை செய்யும் போது காலாவதியாகும் தேதியைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

📕📘பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.                                                 

 📕📘ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில்  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு, ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம்.

📕📘அமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு: 4 ஆண்டுக்கு மேல் தங்க முடியாது - டிரம்ப் நிர்வாகம் அதிரடி பரிந்துரை.

📕📘கொரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருவாய் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.328 கோடி) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

📕📘ரெய்னா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததே தொடர் தோல்விக்கு காரணம் - ஸ்டீபன் ப்ளெமிங்.                      

 📕📘மறவாதீர்கள் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர்.30

📕📘சாத்தான்குளம் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் 2 எஸ்ஐ உள்ளிட்ட 9 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

📕📘புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது பாஜக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.

📕📘புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சுயநலம் இல்லாமல் பொதுநலம் உணர்வுடன் கட்சியுடைய பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றும் வகையில் புதிய நிர்வாகிகள் செயல்படுவார்கள் என தான் மனமார நம்புவதாக பிரதமர் மோடி கருத்து

📕📘கால மாற்றத்திற்கேற்ப ஐ.நாவும் தனது செயல்முறைகளை மாற்ற வேண்டியுள்ளது 

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்துள்ளனர் 

- பிரதமர் மோடி 

📕📘அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் 

அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே வந்து அளிக்கப்படும் 

- தமிழக அரசு

📕📘26ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் அக்டோபர் 1ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை, பெருநகர சென்னை காவல் எல்லையில் கூட்டம் கூடவும், பேரணிகள், உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றிற்கு தடை

- சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார்

📕📘ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

📕📘பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து  சிரோன்மணி அகாலி தளம் வெளியேறுவதாக அறிவிப்பு.

முன்னதாக வேளாண் மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                  

    என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

>>> தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு 25.96% அடிப்படை வசதி: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்...

 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2018-2019 கணக்கின்படி 37,183 பள்ளிகளில் சிறப்பு குழந்தைகள் பயன்படுத்துவதற்கான சாய்வு பாதை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதுதவிர 59,152 தனியார்  பள்ளிகளிலும் சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  மொத்தத்தில் 25.96 சதவீதம் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

 68.86 சதவீதம் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகள் தடையில்லாமல் செல்ல சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

பள்ளிகளில் படிக்கும் சிறப்பு குழந்தைகளுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று மத்திய அரசு விதி வகுத்துள்ளது. சிறப்பு குழந்தைகளை அனுமதிக்கும் பள்ளிகளுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிதி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

 போக்குவரத்து நிதியாக 2020-2021ம் கல்வி  ஆண்டுக்கு 14 கோடியை 98 லட்சம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு நிதியாக 3 கோடியே 69 லட்சம் ஒதுக்கப்படவுள்ளது.  பார்வை குறை உள்ள மாணவர்களுக்கு உதவ இதுவரை 4 லட்சத்து 24,285 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

 ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் திறனை வளர்க்க வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

>>> 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்ப பதிவு குறைவு..செப்டம்பர் 30க்குள் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்...

 புத்தாக்க அறிவியல் விருது விண்ணப்பங்கள் குறைந்த அளவே பதிவாகியுள்ளதால் அனைத்து பள்ளிகளில் மாணவர்களை பங்கேற்க செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ மாணவியர் இடையே அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல்(இன்ஸ்பயர்) விருது வழங்கப்படுகிறது.

 இதற்காக தங்கள் அறிவியல் படைப்பு குறித்த விபரங்களோடு மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

 தகுதியான படைப்புகளை தேர்வு செய்து கண்காட்சி நடத்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

மாவட்ட, மாநில அளவில் கண்காட்சி நடத்தி விருதுகள் வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில் ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த ஜூன் முதல் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தியும் போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

விண்ணப்ப பதிவு மிக குறைவாக இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 30க்குள் விருதுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தவும், நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கணேஷ்மூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Child Safety in School Handbook - 2024-2025

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு - 2024-2025 - வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், சென்...