கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடித்துடிப்பு நின்று போன கல்லூரி மாணவருக்கு CPR முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியர் வனஜா - பொதுமக்கள் பாராட்டு... (The nurse Vanaja who gave CPR first aid to a college student who lost his pulse and saved him - public praised)...



 மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவை பொதுமக்கள் பாராட்டினர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே  6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.


இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக  செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி செய்யப்படும் முதலுதவி சிகிச்சை அளித்தார்.



இதனால் மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பும் சீரானது. இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது. இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞர மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இளைஞர் குறித்து விசாரணை செய்ததில் அவர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த்(19) என்பதும் அவர் மல்லிப்பட்டிணம அடுத்த மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கல்லூரி மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்டது குறித்து அறிந்த பின்னரே செவிலியர் வனஜா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பி சென்றுள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒப்பந்த செவிலியர் வனஜாவின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...