கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நாட்டின் 13வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் பிரணாப்

 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டு, நாட்டின், 13வது புதிய ஜனாதிபதியாக, பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்கிறார். பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கும் கோலாகல பதவியேற்பு விழாவில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, நாட்டின், 13வது ஜனாதிபதியாக, இன்று பதவியேற்க உள்ளதால், டில்லியில், இதற்கான விழா ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. புதிய ஜனாதிபதியை வரவேற்று, பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, டில்லி பார்லிமென்ட் வளாகத்தின் மைய மண்டபம், ஜோராக வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மைய மண்டபத்தில், இன்று காலை 11.30 மணியளவில், ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார்.

பலத்த பாதுகாப்பு: இதையொட்டி, பார்லிமென்ட் வளாகமும், அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும், நேற்றே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது குடியிருக்கும் தல்கோத்ரா சாலை இல்லத்தில் இருந்து, காலையில் கிளம்பி, பிரணாப் முகர்ஜி நேராக ஜனாதிபதி மாளிகை செல்வார். அங்கு, ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் பிரதிபா பாட்டீலுக்கு, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு, பிரணாப் முகர்ஜியை அழைத்துக் கொண்டு, பிரதிபா பாட்டீல் நேராக பார்லிமென்டிற்கு வருவார். குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், இருவரும் அமர்ந்து வருவர். அவர்கள் இருவரையும், பார்லிமென்டில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் மீராகுமார் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா ஆகியோர் வரவேற்று, பார்லிமென்ட் மைய மண்டபத்திற்கு அழைத்து வருவர்.

பதவி பிரமாணம்: இதன்பின், பதவி ஏற்பு விழா துவங்கும். பிரணாப் முகர்ஜிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான கபாடியா, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பிரணாப் பதவியேற்றதும், ராணுவ வீரர்கள், 21 குண்டுகள் முழங்க, வரவேற்பு அளிப்பர். ஜனாதிபதி, முப்படைகளின் தலைவர் என்பதால், தங்களது புதிய தலைவரை வரவேற்கும் வகையில், குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின், புதிய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி, உரை நிகழ்த்துவார்.

புத்தகங்கள்: கடந்த ஒரு வாரமாகவே, பார்லிமென்ட் நூலகத்தில் இருந்து, நிறைய புத்தகங்களை பிரணாப் வரவழைத்து படித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதிகளான ராஜேந்திர பிரசாத் மற்றும் ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கள் அடங்கிய புத்தகங்கள் நிறையவற்றை, பிரணாப் வாங்கிச் சென்றுள்ளதாக, பார்லிமென்ட் நூலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், புதிய ஜனாதிபதியான பிரணாப், இன்றைய உரையில், முன்னாள் ஜனாதிபதிகள் பற்றியும், அவர்களது பங்களிப்பையும், நிறைய குறிப்பிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மீண்டும் பிரதிபா பாட்டீலும், பிரணாப்பும், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், பார்லிமென்டிலிருந்து கிளம்பி, நேராக ஜனாதிபதி மாளிகைக்கு செல்வர். அங்கு, புதிய ஜனாதிபதியாக வந்திறங்கியுள்ள பிரணாப் முகர்ஜிக்கு, முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதை ஏற்றுக் கொண்டு, அதிகாரப்பூர்வமாக, தன் பதவியில் பிரணாப் அமர்வார். அந்த இடத்திலேயே, பிரதிபா பாட்டீலுக்கு, சிறியதாக, பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெறும்.

வெளியேறுவார்: இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டதும், மூத்த மத்திய அமைச்சர் யாராவது ஒருவர், பிரதிபா பாட்டீலை அழைத்துக் கொண்டு, ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறுவார். பிரதிபா தங்குவதற்காக, டில்லி துக்ளக் சாலையில் தயார் செய்யப்பட்டிருக்கும் பங்களாவில், அவரை மத்திய அமைச்சர் அழைத்துக் கொண்டு போய், விட்டுச் செல்வார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், எம்.பி.,க்கள், பல்வேறு தூதரகங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜனாதிபதி இல்லை: நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வாகி, கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம், நேற்றுடன் முடிவடைந்தது. அதனால், பிரதிபாவின் அலுவலகமும், நேற்று நள்ளிரவு, 12 மணியுடன் மூடப்பட்டு விடும். அவரின் அதிகாரங்களும், அத்துடன் நிறைவு பெற்று விடும். புதிய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியோ, இன்று காலை 11.30 மணிக்குத் தான் பொறுப்பை ஏற்கிறார். ஆக, இடைப்பட்ட 12 மணி நேரங்களுக்கு, ஜனாதிபதியாக யாருமே இல்லை என்றாகிறது. முப்படைகளின் தலைவர் என்ற, மிக முக்கிய பதவி காலியாக இருக்கப் போகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில், அரசியல் சட்ட காப்பாளராக, ஜனாதிபதியின் இடத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே இருந்து செயல்படுவார். ஏதேனும், இக்கட்டுகளோ நெருக்கடியோ, இந்த 12 மணி நேரத்தில் ஏற்பட்டால், அதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் கையாள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரது "லிஸ்ட்'டும் ரொம்ப நீளம்: இன்றைக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவியேற்பு விழாவில், மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, பாஸ் பிரச்னை. விழாவில் பங்கேற்பவர்களுக்காக, மிக குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளதால், அதற்கேற்ற வகையில், பாஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி பதவியில் இருந்து கீழிறங்கும் பிரதிபா பாட்டீல் மற்றும் ஜனாதிபதியாகப் போகும் பிரணாப் முகர்ஜி என, இருவரது குடும்பத்தினருக்கும், ஏகப்பட்ட பாஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களது குடும்ப உறுப்பினர்களது பட்டியல், பெரியதாக நீள்வதே, இதற்கு காரணம். துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரின் குடும்பத்தினரை தவிர, அமைச்சர்களோ அல்லது எம்.பி.,க்களோ, தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரணாப்பிற்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன? நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள பிரணாப் முகர்ஜிக்கு, மாதம் ஒன்றுக்கு, 1.5 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும். டில்லியில் உள்ள பிரமாண்டமான மாளிகையில் வசிக்கலாம். இந்த மாளிகையில், மிகப் பெரிய அறைகளும், பூங்காக்களும் உள்ளன. அவருக்கு உதவி செய்ய, மாளிகையில், 200 ஊழியர்கள் பணியாற்றுவர். அவர் ஓய்வெடுக்க, சிம்லா மற்றும் ஐதராபாத்தில் மாளிகைகள் உள்ளன. முப்படைக்கும் தளபதியான அவர், தனி விமானத்தில், எந்த நாட்டுக்கும் பறக்கலாம். வேண்டுமானால், குடும்பத்துடன் செல்லலாம். நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, பிரணாப் முகர்ஜி ராணுவத் துறையால் பதிவு செய்யப்பட்ட அம்பாசிடர் காரில் தான் பயணித்து வந்தார். இன்று முதல், அவர், மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணிக்கலாம். அதுதான், இனி அவரது அலுவலக கார். குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்பட்டது. அவர் பதவியில் இருக்கும்போது, இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கும் என்றால், அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவருக்கு, மாதந்தோறும் ஓய்வூதியமாக, 75 ஆயிரம் ரூபாயும், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பங்களா, அதில், இரு தரைவழி தொலைபேசி இணைப்புகள் இருக்கும். அத்துடன், மொபைல்போன் இணைப்பும் வழங்கப்படும். ஒரு கார், ஒரு தனிச் செயலர் உட்பட, ஐந்து ஊழியர்கள் அவருக்காக பணி அமர்த்தப்படுவர். அவர்களது மாதச் செலவுக்கென, 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இலவசமாக விமானத்திலும், ரயிலிலும் அவரின் மனைவியுடன், நாடு முழுவதும் செல்ல சலுகையும் வழங்கப்படும்.

பிரணாப் தொகுதியில் போட்டியிட மகன் அபிஜித் ஆசை: நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வாகியுள்ளதால், அவரின் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, அவரது மகனும், மேற்குவங்க சட்டசபை எம்.எல்.ஏ.,வுமான, அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, இன்று பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேர்ந்ததால், அவர் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தன் தந்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, பிரணாப்பின் மகனும், பிர்பும் மாவட்ட நல்ஹாதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்.பி.,யுமான, ஆதிர் சவுத்திரி கூறுகையில், ""ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்தத் தொகுதியில், பிரணாப் முகர்ஜி, நிறைய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். எனவே, அபிஜித் முகர்ஜி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது நிச்சயம்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...