கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கட்டடம் கட்ட தலைமையாசிரியர்கள் தயக்கம்...பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கிடைக்காமல் போகும் அபாயம்...

அரசு பள்ளிகளில் கட்டடம் தேவையிருப்பினும், அதை கட்டுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, தலைமை ஆசிரியர்கள், அப்பணியினை எடுக்காமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் இடநெருக்கடி இருந்தும், அதற்கு அரசு நிதி ஒதுக்க தயாராக இருந்தும், மாணவர்களுக்கு கட்டடம் கிடைக்காத நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி திட்டமும், ஒன்பது, பத்தாம் வகுப்பு உள்ள பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் இத்திட்டங்கள் மூலம், ஒவ்வொரு ஆண்டும், தேவைக்கேற்ப, வகுப்பறைக் கட்டடத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இதற்காக, வகுப்பறை பற்றாக்குறை உள்ள பள்ளிகளைக் கண்டறியும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், அனைத்து பள்ளிக்கும் வகுப்பறை தேவையா என்பது குறித்த கணக்கெடுப்பு, தலைமை ஆசிரியர்களிடம் சேகரிக்கப்படுகிறது. வகுப்பறை கட்டடம் கட்டுவதில், பல்வேறு சிக்கல்கள் தலைதூக்குவதால், தலைமை ஆசிரியர்கள் வகுப்பறை கட்டும் பணியை தவிர்ப்பதிலேயே குறியாக உள்ளனர்.கட்டடம் தேவையாக இருந்தாலும், போதுமான அளவு கட்டடம் உள்ளது என்றே, அறிக்கையில் தெரிவிக்கின்றனர். இதனால் திட்டங்களில் கட்டடத்துக்கு என, நிதி இருந்தும், அவற்றை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.கட்டடப் பணிகளுக்கு, திட்டங்களில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாகவே அதிகரிக்காமல் உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து விட்டால், அதில் வகுப்பறை கட்டடத்தை கட்டிமுடிக்க வேண்டிய கடமை, தலைமை ஆசிரியரை சேர்ந்தது. கட்டடத்தில் சரியான தரம் இருக்க வேண்டும் என்பதையும், திட்டத்தின் கீழ் செயல்படும் இன்ஜினியர்கள் அவ்வப்போது சோதனை செய்து கொண்டே உள்ளனர்.
இந்நிலையில், கட்டுமான பொருட்களின் விலையேற்றம், தினம் தினம் அதிகரிக்கிறது. சிமென்ட் மூட்டை, இரும்பு கம்பிகளின் விலை பலமடங்கு அதிகரித்து வருவதால், அந்த குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுக்குள் கட்டடம் கட்டுவது, இயலாத காரியமாகி விடுகிறது.இதனால், ஒரு வகுப்பறை கட்டடம் கட்டத் துவங்கினால், பல ஆண்டு வரை நிதிப் பற்றாக்குறையால் இழுபறியில் நிற்கிறது. சமீபத்தில் கட்டட பணிகளை மேற்கொண்ட தலைமை ஆசிரியர்கள், அதை முடிக்கும் முன், அப்பணியிலிருந்து பணிமாறுதல் பெறவோ, பதவி உயர்வு மாறுதல் பெறவோ முடியாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் தலைமை ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பள்ளியில் வகுப்பறை உள்ளிட்ட கட்டட பணிகளைஎடுக்க தயக்கம் காட்டுகின்றனர். பள்ளியில் இடநெருக்கடி இருந்தாலும், போதுமான அளவு வகுப்பறை உள்ளது என்று கணக்கு காட்டுகின்றனர். இதனால் திட்டங்களில் போதுமான நிதி இருந்தும், மாணவ, மாணவியருக்கு, புதிய வகுப்பறை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.கட்டுமான பணிகள் கட்டுவதில், தலைமை ஆசிரியர்களுக்கு உருவாகியிருக்கும் நெருக்கடிகளை தளர்த்த வேண்டும் எனவும், அதிகரித்து வரும் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்துக்கு ஏற்றவாறு, கட்டடங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Science Competition for School Students

  பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் Science Competition for School Students >>> Click Here to Download