ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இன்று ஒலிம்பிக் மைதானத்தில் துவக்க விழா (இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணி) வண்ணமயமாக நடக்கிறது.
ஆஸ்கர் விருது வென்ற பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்ல், துவக்க விழாவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கற்பனையில், மைதானமே ஒரு பசுமையான கிராமப்புறமாக மாற உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பங்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி, மல்யுத்த வீரர் சுஷில் குமார் வர உள்ளார். பின் ஜோதி ஏற்றப்படும். இரண்டாம் ராணி எலிசபெத், ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைக்கிறார்.