பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியோர், விரும்பும் பாடத்தில் மறுகூட்டல் செய்யவோ, விடைத்தாள் நகல் பெறவோ விரும்பினால், இனி எந்த கல்வித் துறை அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம்; இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல், விடைத்தாள் நகல் என, இரண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் கேட்கும் மாணவர், அதே பாடத்திற்கு, மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகலைப் பொறுத்தவரை, மொழிப் பாடங்களுக்கு, 550 ரூபாய்; இதர பாடங்களுக்கு, 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலைப் பொறுத்தவரை, மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்திற்கு தலா, 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு வசுந்தரா தெரிவித்துள்ளார்.
தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின், விண்ணப்ப எண்களுடன் கூடிய ஒப்புகைச்சீட்டு மற்றும் வங்கி செலுத்துச் சீட்டு ஆகியவற்றை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த, "செலானை&' கொண்டு, ஐ.ஓ.பி.,யின் ஏதாவது ஒருகிளையில், கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.