தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையின்போது, இட
ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின்,
தமிழக கிளையின் செயலரான டாக்டர் ஜெயலால் தாக்கல் செய்த மனு: தனியார் கல்வி
நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினருக்கு இடங்களை ஒதுக்க வேண்டும் என, 2006ம் ஆண்டு தமிழக அரசு
சட்டம் இயற்றியது.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் கல்விக் கட்டண நிர்ணயம் செய்வதற்கு என,
குழு உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்கள் எல்லாம், தேசிய அளவிலான குழு அல்லது
மாநிலக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை பின்பற்ற வேண்டும். தற்போது, தேசிய
அளவிலான கட்டண நிர்ணயக் குழு செயல்படவில்லை. அந்தக் குழு செயல்படும் வரை,
தனியார் மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசு ஒழுங்குமுறைபடுத்த வேண்டும்.
இந்த தனியார் கல்லூரிகள், சட்டம் மற்றும் விதிமுறைகளை மதிப்பதில்லை.
தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்காக, தமிழக அரசு இயற்றிய சட்டம்,
மருத்துவக் கவுன்சில் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச்
முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும்
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை
நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.