டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜனின், வாழ்த்து கடிதத்துடன், தனித்தனியே அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளன.
விருது பெறும் ஆசிரியர்களுக்கு, அழைப்பிதழ் அனுப்பப்படும் முறை, 12 ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு தான் நடந்துள்ளது. பள்ளியின் வளர்ச்சியிலும், கல்வித் தர வளர்ச்சியிலும், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சிறப்பாக செயல்படும் ஆசிரியருக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, எம்.சி.சி., பள்ளியில், நடக்கும் விழாவில், 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிவபதி, விருதுகளை வழங்குகிறார்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்து கடிதத்துடன் கூடிய அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெறும் ஆசிரியருக்கு, 12 ஆண்டுகளுக்கு முன், இதுபோல் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதன்பின், இந்த ஆண்டு தான், அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் விருது பெறுவதை, ஒவ்வொரு ஆசிரியரும், தம் வாழ்நாள் சாதனையாக கருதுகின்றனர். எனவே, விருதுபெறும் நிகழ்ச்சியைக் காண, மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் என, பலரையும் அழைத்து வருவர். விழா நடக்கும் அரங்கிற்குள், சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தவிர, வேறு யாரையும் விடுவதில்லை. உடற்பயிற்சி ஆசிரியர்களை, அரங்க நுழைவாயிலில் நிறுத்தி, அதிக கெடுபிடிகளை செய்வதே, பள்ளிக்கல்வித் துறையின் வாடிக்கையாக இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு, அதுபோல் எவ்வித அவமரியாதைக்குரிய செயலும் நடக்காது என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "விருது பெறுபவர், உடன் வருபவர் என, அனைவரையும் கணக்கிட்டு, 2,500 சாப்பாட்டிற்கு, "ஆர்டர்" வழங்கியுள்ளோம். ஆசிரியருக்கான போக்குவரத்து பயணப்படி உள்ளிட்டவற்றை, உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.