தமிழகம் முழுவதும் நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வை 20% பேர் எழுதவில்லை.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 74.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு
எழுதியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர். தேர்வு எழுதியவர்களில் 4.21
லட்சம் பேர் பெண்கள்.
தமிழகம் முழுவதும் 244 தேர்வு
மையங்களில் 3,483 தேர்வுக்கூடங்களில் நேற்று வி.ஏ.ஓ. பணியிடத்திற்கான
போட்டித் தேர்வு நடைபெற்றது. ஆயிரத்து 870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு,
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வில் பங்கேற்க 10ம்
வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், பொறியியல் முடித்தவர்கள்
அதிகளவில் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
தேர்வுக் கூடங்களை மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் பறக்கும்
படையினர் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி
தலைவர் நட்ராஜ், செயலர் உதயசந்திரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
ஜெயகாந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர்
நேரடியாக பணியில் நியமிக்கப்படுவார்கள்.
சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த விஏஓ
தேர்வை பார்வையிட்ட பின் டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் விஏஓ தேர்வு எந்தவித பிரச்னை இல்லாமல் நடந்தது.
அதிகபட்சமாக சென்னையில் 70 ஆயிரம் பேர், மதுரையில் 52 ஆயிரம், நெல்லை,
சேலத்தில் 51 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். தேர்வு மையங்களில் இருந்து
விடைத்தாள்கள் அனைத்தும் உடனடியாக சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி
அலுவலகத்துக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். ஸ்கேன் செய்யப்பட்ட
விடைத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு எழுதியோர்
அதனை பார்த்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விஏஓ தேர்வுக்கான வினா விடை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (http://www.tnpsc.gov.in/answerkeys.html)
வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை
இருந்தால் 7 நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும்.
அதன் பின்னர் நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து விடைகளில் திருத்தம்
இருந்தால் அதுபற்றிய விவரம் இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்படும். அதன்
பிறகே விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்
தெரிவித்தனர்.