தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 தேர்வு மையங்களில் நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வின் முடிவுகள் இன்னும் ஒரு மாத காலத்தில்
வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள
ஆயிரத்து 870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் பங்கேற்க 10ம் வகுப்பு
படித்தவர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், பொறியியல் முடித்தவர்கள்
அதிகளவில் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை எழுத்து தேர்வு
நடந்தது. 3483 தேர்வு மையங்களில் பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் 9
லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட
எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும்
தேர்வு மையங்கள் வீடியோ கேமரா மற்றும் வெப்கேமரா மூலமும்
கண்காணிக்கப்பட்டது.
இதுதவிர பறக்கும் படையினரும் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர்.
மாவட்ட வருவாய் அதிகாரிகள், தாசில்தார்கள் இதில் இடம் பெற்று இருந்தனர்.
வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது.
நேரடியாக வேலை கிடைத்து விடும். கடந்த ஆகஸ்டு மாதம் 12ம் தேதி ஆறரை லட்சம்
பேர் தேர்வு எழுதிய குரூப்- 2 தேர்வின் போது விடைத்தாள் வெளியானதால் அந்த
தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதுபோன்ற சம்பவம் வி.ஏ.ஓ. தேர்வில் நடந்து
விடக்கூடாது என்பதற்காக கேள்வித்தாள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு
இருந்தது.
இன்று நடந்த தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ்
கூறியதாவது: வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்.
தேர்வு விடைகள் இன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வர்களின் விடைத்தாள் நகல்கள் ஒரு வாரத்தில் இணையதளத்தில்
வெளியாகும். குரூப்- 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் கைது
செய்யப்பட்டு உள்ளனர். இனி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடக்க
வாய்ப்பு இல்லை என்றார்.