செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிக்கு, தங்கப் பதக்கம் வழங்கியது
முறையல்ல என, மாணவர் தொடர்ந்த வழக்கில், மாணவிக்கு சாதகமாகத் தீர்ப்பு
வழங்கிய மும்பை ஐகோர்ட், மாணவியை, வேண்டுமென்றே தேர்வில் தோல்வி அடையச்
செய்த, கல்லூரி விரிவுரையாளருக்கு கண்டனம் தெரிவித்தது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில்
உள்ளது, நாக்பூர் பல்கலைக்கழகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்தப்
பல்கலையில், ஜூஹி பாண்ட்கே என்ற மாணவி, எல்.எல். எம்., (சட்டப்படிப்பு)
படித்தார். இவருக்கும், விரிவுரையாளர் நார்னவாரே என்பவருக்கும், கருத்து
வேறுபாடு இருந்தது. இதனால், "போதுமான நாட்கள் வருகை இல்லை" எனக் கூறி,
மாணவி ஜூஹியை, ஒரு செமஸ்டர் தேர்வை எழுத விடாமல் செய்தார், நார்னவாரே.
இதனால், ஜூஹி, அந்த செமஸ்டரில் தோல்வி அடைந்தார். இதை எதிர்த்து,
பல்கலைக்கழக நிர்வாகத்தில், மாணவி முறையீடு செய்தார். சற்று கால தாமதமாக
நடந்த விசாரணையில், விரிவுரையாளர் வேண்டுமென்றே, மாணவியை தேர்வு எழுத
விடாமல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மீண்டும் தேர்வு எழுதிய ஜூஹி,
அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். அவரின் மொத்த மதிப்பெண், 1,129 ஆக
இருந்தது.
இதற்கு முன்னதாக, அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற வகையில், தங்கப் பதக்கம்
மற்றும் "அதிக மதிப்பெண் மாணவர் பட்டியலில்" முதலிடத்தைப் பெற்றார்,
மாணவர் முஷாஹித் அலி. அவர், 1,027 மதிப்பெண் பெற்றிருந்தார். ஜூஹியை விட,
102 மதிப்பெண் குறைவாகவே அவர் பெற்றிருந்த போதிலும், முதல் மாணவராக
அறிவிக்கப்பட்டார்.
மறு தேர்வு எழுதி, ஜூஹி வெற்றி பெற்றதும், அவர் தான், "பல்கலையில் அதிக
மதிப்பெண் பெற்றவர்' என, அறிவிக்கப்பட்டார்; தங்கப் பதக்கங்களும்
பெற்றார். இதனால், அதிருப்தி அடைந்த மாணவர் முஷாஹித் அலி, மும்பை உயர்
நீதிமன்றத்தில், தன்னையே முதல் மாணவராக அறிவிக்க வேண்டும் எனக்கோரி,
வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள், பூஷன் கவாய் மற்றும் சுனில் தேஷ்முக்
ஆகியோரைக் கொண்ட, அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மாணவரின் கோரிக்கையை,
தள்ளுபடி செய்த நீதிபதிகள், "ஜூஹியே முதல் மாணவி என்பதற்கான தகுதிகளைக்
கொண்டவர்; அதிக மதிப்பெண் பெற்றதற்காகவே, அவருக்கு தங்கப் பதக்கம்
வழங்கப்பட்டுள்ளது" என்பதை உறுதி செய்தனர்.
மேலும், மாணவியை வேண்டுமென்றே தேர்வு எழுத விடாமல் செய்த, விரிவுரையாளர்
நார்னவாரேக்கு, கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் மீது நடவடிக்கை
எடுக்கவும், பல்கலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.