வங்கிப் பணியில் சேர, தமிழகத்தில் ஆர்வம் குறைவாக உள்ளது என, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாருதி ஸ்கூல் ஆப் பாங்கிங் நிறுவனத்தின், நான்காம் ஆண்டு நிறைவு
விழாவில் கோவை, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:
நம் நாட்டில், 1975 வரையிலான காலகட்டத்தில், வங்கிகளில் அதிக
பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அக்காலகட்டத்தில், பணியில் சேர்ந்தவர்கள்
அனைவரும், வரும் ஏழு ஆண்டுகளுக்குள், ஓய்வு பெற உள்ளனர்.
இதனால், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியால், இத்துறையில் பல்வேறு நவீன மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. இத்தகைய தொழில்நுட்பங்களை, எளிதில் பயன்படுத்தும் திறமையை,
இன்றைய இளைஞர்கள் கொண்டுள்ளனர்.
ஆர்வம், கடின உழைப்பு கொண்டிருந்தால், சாதிக்கலாம். பீகார் மாநிலத்தினர்
அதிக எண்ணிக்கையில் இத்துறையில், பணியாற்றுகின்றனர். இதேபோல், சண்டிகர்,
மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இத்துறைக்கு அதிக முக்கியத்துவம்
அளித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆர்வம் குறைவாக உள்ளது.
கிளர்க் அல்லது அலுவலர் பணியில் சேர்ந்தால், வரும் 15 ஆண்டுகளில், பொது
மேலாளராக பதவி உயர்வு பெறும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.