கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தமிழகத்தில் காற்றாலைகளின் இயக்கம்

 
தமிழகத்தின் தலையாய பிரச்னை மின் வெட்டு. தற்போது, தமிழகத்துக்கு, தினமும், 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தியாகிறது. 4,500 மெகாவாட் மின் பற்றாக்குறை, தமிழகத்தை ஆட்டி படைக்கிறது. தமிழக மின்வாரிய அதிகாரிகளின் கெடுபிடியால், பல காற்றாலைகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை, தேவையற்ற சேவை வரி, நடைமுறை சிக்கல்களை நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், காற்றாலை உரிமையாளர்கள், பிற மாநிலங்களுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர்.
காற்றாலை மின் உற்பத்தி குறைவு:
தமிழகத்தில், தற்போது நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம், 7,040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், சாதாரண நாட்களில், காற்றாலைகள் மூலம், தினமும், 3,000 முதல், 3,500 மெகாவாட் வரை, மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டு, அதிகபட்சமாக ஒருநாளில், 4,059 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. தற்போது காற்று வீசும் காலம் முடியும் தருவாய். எனவே, காற்றாலை மூலம்,1,000 மெகாவாட் அல்லது அதற்கும் குறைவாகவே மின்சாரம் உற்பத்தியாகிறது. இது தான் மின் தட்டுப்பாடுக்கு முக்கிய காரணம். மொத்தம், 7,040 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, காற்றாலைகளை நிறுவியிருந்தும், தினமும், 3,000 முதல், 3,500 மெகாவாட் மின்சாரம் வரை மட்டுமே உற்பத்தியாவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
காரணம் இது தான்:
காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, இத்தொழிலில், தனியார் ஆர்வமாக இறங்கினர். எனினும், ஒரு காற்றாலைக்கு, 1.25 கோடி ரூபாய் முதல், 13 கோடி ரூபாய் வரை, முதலீடு செய்து, அதை நிறுவ அனுமதி பெறுவதில் சிக்கல், தயாரித்து கொடுக்கும் மின்சாரத்துக்கு, மின் வாரியத்திலிருந்து பணம் கிடைப்பதில் இழுத்தடிப்பு போன்றவை, மின் உற்பத்தியாளர்களை கலங்கடித்தது. இதனால், காற்றாலைகளை நிறுவிய பலர், அவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து, காற்றாலை முதலீட்டாளர்கள் கூறியதாவது: பல கோடி ரூபாய் முதலீடு செய்து, அரசுக்கு, மின்சாரம் வழங்குகிறோம். ஆனால், அதற்கான தொகை சரியாக கிடைப்பதில்லை. அத்தோடு, சேவை வரி, அதிகாரிகள் கெடுபிடி என்று ஏகப்பட்ட பிரச்னைகள். நாங்கள் மீண்டும் தொழிலில் இறங்க, இப்பிரச்னைகள் நீங்க வேண்டும். இல்லாவிடில், போனது வரை நஷ்டம் என்று ஒதுங்கிவிடுவோம்.காற்று வீசும் காலம் முடிந்தாலும், லேசாக அடிக்கும் காற்றை வைத்தே, மின்சாரம் தயாரிக்கும், நவீன காற்றாலைகள் சந்தைக்கு வந்துள்ளன. ஆனால், அதிகாரிகளின் கெடுபிடியால், அந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆர்வமில்லை. நவீன காற்றாலைகளை நிறுவினால், மின் பிரச்னையை சமாளிக்கும் அளவுக்கு, மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.இவ்வாறு முதலீட்டாளர்கள் கூறினர்.

இந்திய காற்றாலை சங்கத்தின் தேசிய தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த ஆண்டு மட்டும், 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, காற்றாலை நிறுவப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, இதுவரை, 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க மட்டுமே காற்றாலை நிறுவப்பட்டுள்ளது. மின்சாரத்துக்கு, தமிழக அரசு கொடுக்கும் விலை கட்டுப்படியாகவில்லை; எனவே, இதில் முதலீடு செய்ய, பலருக்கும் ஆர்வம் இல்லை.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மற்றும் ஆந்திரா மாநிலத்தில், காற்றாலை மின்சாரத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு, 4.30 ரூபாய் முதல், 5.50 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக, ஒரு யூனிட்டுக்கு, 3.05 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதிலும், "பூல்டு' விலையில் கொடுப்பவர்களுக்கு, 2.54 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, பிற மாநிலங்களில், காற்றாலைகளை நிறுவ முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தியா முழுவதும், காற்றாலை மூலம், 17 ஆயிரத்து, 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அதில், தமிழகத்தில் அதிகபட்சமாக, 7,040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை, தேவையற்ற சேவை வரி, நடைமுறையில் உள்ள சிக்கல்களை நீக்க, அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே,காற்றாலை உற்பத்தியாளர்கள் கவனம், மீண்டும் தமிழகம் பக்கம் திரும்பும்.இவ்வாறு ரெங்கையன் கூறினார்.
தமிழகத்தில் என்ன விலை?:
காற்றாலை மின்சாரத்துக்கு, தமிழக அரசு ஒரு யூனிட்டுக்கு, 2.54 ரூபாய் முதல், 3.51 ரூபாய் வரை கொடுக்கிறது. அதையும், முறையாக மாதம்தோறும்கொடுப்பதில்லை. 2011, ஜூலையில் கொடுத்த மின்சாரத்துக்கு, தற்போது தான், தமிழக மின் வாரியம் பணம் தரத் துவங்கி உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக, காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு, மின் வாரியம் சரியாக பணம் தராததே, மின் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.கடந்த, 2006க்கு முன் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு, 2.75 ரூபாயும், 2009க்கு பின் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு, யூனிட்டுக்கு, 2.90 ரூபாயும், 2012 மார்ச்சுக்கு பின் நிறுவப்பட்ட காற்றாலைக்கு, யூனிட்டுக்கு, 3.39 ரூபாயும், இனிமேல் நிறுவப்படும் காற்றாலைக்கு, ஒரு யூனிட்டுக்கு, 3.51 ரூபாயும் வழங்க, மின் வாரிய தீர்ப்பாயம், விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், காற்றாலை மூலம், ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய, 4.45 ரூபாய் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உதிரி பாகம் நிறுவனங்கள் முடக்கம்:
இந்தியாவில் நிறுவப்படும் காற்றாலைகளில், 60 சதவீதம், திருச்சியில் தான் தயாரிக்கப்படுகிறது. காற்றாலை தயாரிப்பின் முக்கிய மையமாக திருச்சி திகழ்கிறது. சுஸ்லான், கணேசா, வின்விண்ட், லீப்நெஸ், ரெஸின் உள்ளிட்ட, 18 காற்றாலை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள காற்றாலை நிறுவனங்களுக்கு, திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில் உள்ள, தொழிற்சாலைகளிலிருந்துதான், உதிரி பாகங்கள் சப்ளையாகிறது.காற்றாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், உதிரி பாகம் நிறுவனங்கள் ஒரு ஆண்டாக முடங்கியுள்ளன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, 10 ஆயிரம் தொழிலாளர்கள், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், வங்கிக் கடன், கடனுக்கான வட்டி, தொழிலாளர்களின் சம்பளம் ஆகியவற்றை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இப்பிரச்னையை போக்க, தமிழக அரசு, காற்றாலை மின்சார உற்பத்தியில் இறங்க வேண்டும் என்று, உதிரி பாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் விரும்புகின்றனர்.

திருச்சி துவாக்குடி அருகே காற்றாலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் கூறுகையில், "" கடந்த ஒரு ஆண்டாக, காற்றாலை உதிரி பாக விற்பனை அறவே இல்லை. ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள் கூட, காற்றாலை தொழிலில் உள்ள பிரச்னையால், அவற்றை வாங்க வரவில்லை. இதனால் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இடத்தின் விலை உயர்வும் காற்றாலை தொழில் பின்னடைவுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

  EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...