கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>புத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்கும் கல்வித்துறை

உடுமலை அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க, சிலம்ப கலையினை, பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பால், மாணவர்கள் முறையாக பயின்று வருகின்றனர். அழிந்து வரும் கலையாக காணப்பட்ட சிலம்பம், இளைய சமுதாயத்திடம் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருவதால், மீண்டும் புத்துயிர் பெற்று வருவதாக, சிலம்ப பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியது சிலம்ப கலை. தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்டு, போற்றி பாதுகாக்கப்பட்டு வந்த தற்காப்பு கலைகளில், ஒன்றாக இக்கலை இருந்துள்ளது. கடந்த காலங்களில், சிலம்பாட்டம், புலி விளையாட்டு, கரடி விளையாட்டு, சில்தா (கம்பு), பிச்சுவா (இரண்டு கத்தி) சோடு, வாள், குத்து வரிசை, தீபந்தம், சுருள் கத்தி, மகுடு என்ற மான் கொம்பு விளையாட்டு ஆகியவை தமிழகத்தில் பாரம்பரியமிக்க போர் கலையாகவும் இருந்துள்ளது.

இதில், சிலம்ப பயிற்சி பெற்றவர்கள், பயிற்சி பள்ளிகளை துவக்கி அதன் மூலம் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இக்கலையினை கற்றுத் தந்து வருகின்றனர். தேங்காயை தலையில் வைத்து உடைத்தல், தராசு தட்டில் முட்டை வைத்து சுற்றுதல், தராசு தட்டில் இரண்டு டம்ளரில் தண்ணீர் வைத்து சுற்றுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் சிலம்ப ஆசிரியர்களால் அளிக்கப்படுகிறது. திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சிலம்ப போட்டிகள் நடைபெறுகிறது; மாவட்ட அளவிலும் சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டு சிலம்ப கலைகளை இளைஞர்களிடம் வளர்க்கப்பட்டு வருகிறது.

உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 225 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க சிலம்ப கலை கற்க ஆர்வம் காட்டியதால், பள்ளி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகமும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதற்கட்டமாக தற்போது, ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம்தோறும், வெள்ளிக்கிழமைகளில், மதிய நேரத்தில், 3.00 மணிக்கு மேல் மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில், குச்சிகளை சுற்ற கஷ்டமாக உணர்ந்த மாணவர்கள் தற்போது, லாவகமாக குச்சிகளை சுற்ற பழகிகொண்டுள்ளனர்.

""பெற்றோர்கள் ஒத்துழைப்பு, கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறப்பட்ட பின்னரே, சிலம்ப பயிற்சி வாரத்தில் ஒரு நாள் ஊராட்சி தலைவர் ஒத்துழைப்போடு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். உடற்பயிற்சி போன்றுள்ளதாலும், தற்காப்பு கலையாக உள்ள இக்கலையினை கற்க மாணவர் மட்டுமின்றி, மாணவியரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என்றார் இப்பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி.
"உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிலம்பம்
'சிலம்ப ஆசான் சக்திவேல் மற்றும் பயிற்சியாளர் நந்தகோபால் கூறியதாவது: ஆங்கிலேயர்களை விரட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், புலித்தேவர், மருதபாண்டிசகோதர்கள் உள்ளிட்ட மன்னர்கள் காலத்தில் சிலம்பம் போர்க்கலையாக பயன்படுத்தப்பட்டதாக சிலம்ப வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலம்பம் வெறும் கலை மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இப்பயிற்சியின் மூலம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி, அதிர்வினை நிகழ்வு, உடல் தாங்கும் திறன் பயிற்சி, சமயோசிதமாக சிந்தித்தல், நிலை தடுமாறாமல் நிற்கும் பயிற்சி, சிலம்பத்தை கைகளினால், பயன்படுத்துவதால் விரல்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.உயிருக்கும் ஆரோக்கியம் தரும் சிலம்பம் மனித வாழ்க்கைக்கு கற்பக விருட்சமாக உள்ளது. தற்போது சிலம்பாட்டத்தை அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்துள்ளனர். இதனால், அழிவின் விளிம்பில் இருந்த சிலம்ப போட்டி தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.
பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தற்போது மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊராட்சி தலைவர் ஒத்துழைப்பால், இப்பயிற்சி மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது. இதற்கான சம்பளமும் அவர் சொந்த செலவில் வழங்கி வருகிறார். தற்போது, விடுமுறை நாட்களிலும் தினசரி மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...