உலகில் பல விலங்குகள் உள்ளன. இவை பல வழிகளிலும், உதவியாக இருக்கின்றன.
விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது
பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அக்., 4ம் தேதி சர்வதேச
விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வன ஆர்வலரும், இத்தாலி நாட்டைச்
சேர்ந்தவருமான பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும்
வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தாலியில் 1931ல் இத்தினம்
தொடங்கப்பட்டு, தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. "அனிமல்'
என்ற வார்த்தை லத்தின் மொழியில் இருந்து உருவானது.
எத்தனை வகை:
பெரும்பாலான
விலங்குகள், பாலூட்டி வகையை சேர்ந்துள்ளது. சில விலங்குகள் தனது உணவுக்கு,
மற்ற விலங்குகளை வேட்டையாடும் பழக்கத்தை கொண்டுள்ளன. இவை "ஊன் உண்ணிகள்'
என அழைக்கப்படுகின்றன.
புலிகளை காப்பது ஏன்:
புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான், வனத்தின் இயல்பு நிலையை
பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால், மேய்ச்சல் விலங்குகள் அதிகப்படியாக
பெருகி, காடுகளின் வளம் குறையும். இதனால் தான், புலிகளை பாதுகாக்க வேண்டும்
என அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சமீபத்தில்
வெளியிடப்பட்ட தகவலின் படி நாட்டில் 1,706 புலிகள் உள்ளன.
இவை வாழ வழி விடுங்கள்:
விலங்குகளும்
இயற்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. சில விலங்குகள் கடல்,
காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைத் தான் வாழ்வாதாரமாக கொண்டுள்ளது. இயற்கை
வளங்களை மனிதன் சேதப்படுத்துவதால், இவைகளின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படுகிறது. பல விலங்குகள் மனிதனால் வேட்டையாடப்படுகின்றன. தற்போதைய
சூழ்நிலையில், பல்வேறு வகையான விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. இவற்றை
பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.