கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வங்கிகளில் வசூலாகாத கல்விக் கடன் அதிகரிப்பு

கடந்த, 10 ஆண்டுகளாக, பொதுத்துறை வங்கிகள் வழங்கும் கல்விக் கடன் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, வசூலாகாத கல்விக் கடனும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில், பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கல்விக் கடனில், 15 சதவீதத்திற்கு அதிகமான தொகை, வசூலாகாமல் உள்ளது. வளர்ச்சி விகிதம்: கடந்த 2003-04 முதல் 2011-12ம் நிதியாண்டு வரை, பொதுத் துறை வங்கிகளின் கல்விக் கடன், ஒட்டுமொத்த அளவில், 35 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தை கண்டு வந்துள்ளது. இதே காலத்தில், வங்கித் துறையின் கடன் வளர்ச்சி, 23 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. "கல்விக் கடன் பிரிவின் வளர்ச்சியே, வங்கிகளின் சொத்து மதிப்பு குறைவதற்கும் வழி வகுத்துள்ளது" என, எஸ்பிரிட்டோ சான்டோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் சாய்கிரண் புலவர்த்தி தெரிவித்தார். பொதுவாகவே, கல்விக் கடன் என்பது, உத்தரவாதமற்றதாகவே வங்கித் துறையில் கருதப்படுகிறது. பட்டம் பயின்ற மாணவர்கள், துவக்கத்தில் குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர். இதனால், அவர்கள் கல்விக் கடனுக்காக திரும்ப செலுத்தும் தொகையும் குறைவாக உள்ளது.
நிதி பற்றாக்குறை: இது, வங்கிகள் கல்விக் கடன் அளிப்பதற்கும், கடனை திரும்ப பெறுவதற்கும் உள்ள இடைவெளியை அதிகமாக்கி, நிதிப்பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. கடந்த 2007-08ம் நிதியாண்டு நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய கல்விக் கடனில், மொத்த வசூலாகாத கடன், 2 சதவீதமாக இருந்தது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின், 2004-05ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வங்கிகளின் கல்விக் கடனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து, வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதில் தீவிரம் காட்டி வந்தன. இந்த வகையில், அதிக அளவில் கல்விக் கடன் வழங்குவதில், தென்னிந்தியாவை சேர்ந்த தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. நடப்பு 2012ம் ஆண்டு, மார்ச் கடைசி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் மொத்த கல்விக் கடனில், மேற்கண்ட நான்கு மாநிலங்களின் பங்களிப்பு 56 சதவீதமாக உள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்த, பெரும்பாலான பொதுத் துறை வங்கிகளின் மொத்த கடனில், கல்விக் கடன் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், தென்மாநிலங்களை சேர்ந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடனில், கல்விக் கடன், 2.55 சதவீதமாக இருந்தது. அதே சமயம், இந்திய அளவில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடனில், ஒட்டுமொத்த கல்விக் கடன், சராசரியாக 1.17 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. கடந்த சில மாதங்களாக, கல்விக் கடன் பிரிவின் சொத்து மதிப்பு குறித்து, பல வங்கிகள் கவலை தெரிவித்து வருகின்றன. அதே சமயம், வங்கிகள் கல்விக் கடன் வழங்க, மறுக்கும் வங்கிகள் குறித்த புகாரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள்: இதையடுத்து, வங்கிகள் மற்றும் கல்விக் கடன் பெறுவோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் மத்திய, மாநில அரசுகளுடன் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது. மாணவர்கள் சுலபமாக கல்விக் கடன் பெறும் வகையில், வட்டிச் சலுகை, கடன் உறுதி திட்டம் போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இத்திட்டங்களால், தென்னிந்தியாவை சேர்ந்த இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஆந்திரா பேங்க், கனரா பேங்க் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் ஆகிய வங்கிகள், மிகப் பெரிய அளவில் பயனடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள் வழங்கிய கல்விக்கடன் விபரங்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - ரூ.12,566 கோடி
கனரா வங்கி - ரூ.3,948 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.3,309 கோடி
இந்தியன் வங்கி - ரூ.3,222 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.2,469 கோடி
சிண்டிகேட் வங்கி - ரூ.2,270 கோடி
ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் - ரூ.2,263 கோடி
பேங்க் ஆப் இந்தியா - ரூ.2,193 கோடி
பேங்க் ஆப் பரோடா - ரூ.1,872 கோடி
யூனியன் பேங்க் ஆப் இந்தியா - ரூ.1,860 கோடி
ஆந்திரா வங்கி - ரூ.1,516 கோடி
இந்த விபரங்கள் மார்ச், 2012 நிலவரப்படியானவை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

  மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்... >>> விண்ணப்பதாரர்கள...