ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் செயல்படும்,
150க்கும் மேற்பட்ட பள்ளிகளில், நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை, 25
சதவீதம் சேர்க்க, ராணுவத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும்
கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009-ன் கீழ், அரசு நிதியுதவி பெறாத, ஒவ்வொரு
தனியார் பள்ளிகளும், ஒவ்வொரு ஆண்டும், நலிந்த மற்றும் வறுமையில் வாடும்
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை, 25% அளவில் சேர்க்க வேண்டியது
கட்டாயம்.
இந்த விதிமுறை, நாட்டின் பல பகுதிகளில், ராணுவ வீரர்களின்
குழந்தைகளுக்காக, ராணுவத்தால் நிறுவப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட
பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்தப் பள்ளியில், நலிந்த பிரிவினரின்
குழந்தைகளைச் சேர்க்க, ராணுவத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக, ராணுவ தலைமையகம் சார்பில், ராணுவ அமைச்சகத்திற்கு கடிதம்
ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவத்தில் பணியாற்றும், 13 லட்சம் வீரர்களின் குழந்தைகளுக்காக, நாடு
முழுவதும், ராணுவ குடியிருப்புகளுக்கு அருகில் பள்ளிகள் நிறுவப்பட்டு
உள்ளன. இதுபோல், 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில்,
நலிந்த பிரிவைச் சேர்ந்த, குழந்தைகளை, 25% அளவில் சேர்த்தால், ராணுவ
வீரர்களின் குழந்தைகள் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு தரமான
கல்வி கிடைக்காது.
ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளியில், ஏற்கனவே கடும்
இடப்பற்றாக்குறை உள்ளது. ராணுவ வீரர்களின் குழந்தைகளே, முழு அளவில் அங்கு
சேர முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில், மற்ற பிரிவு குழந்தைகளுக்கு, 25
சதவீத இடங்களை ஒதுக்கினால், ஏராளமான ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு இடம்
கிடைக்காமல் போய் விடும்.
ராணுவ வீரர்கள் மத்தியில் மனஅழுத்தம் அதிகரிப்பதற்கு, அவர்களின்
குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி கிடைக்காததும் ஒரு காரணம். அதனால்,
"ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக கூடுதல் பள்ளிகளை திறக்க வேண்டும்"
என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளிகள்
எல்லாம், ராணுவ வீரர்களின் நல நிதியில் நடத்தப்படுகிறது; அரசு பணம் எதுவும்
அவற்றுக்கு செலவிடப்படுவதில்லை. எனவே, இந்த விஷயத்தில், ராணுவ அமைச்சகம்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.