அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பிரச்னை தொடர்பாக, ஊழியர் சங்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழுவினர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலரை
சந்தித்து மனு அளித்தனர்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம், நிதிச் சிக்கல் அறிவிப்பை
வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்குறைப்பு மற்றும் ஊழியர்களின் சம்பள
குறைப்பு உள்ளிட்டவை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு
ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கியுள்ளனர்
இந்நிலையில், நேற்று மார்க்ஸ்சிஸ்ட் எம்எல்ஏ, பாலகிருஷ்ணன் மற்றும்
பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவின், இணை
ஒருங்கிணைப்பாளர் மதியழகன் ஆகியோர் தலைமையில், பல்கலைக்கழக ஊழியர்கள்,
உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் செயலர் ஸ்ரீதர் ஆகியோரை
சந்தித்து மனு அளித்தனர்
மனுவில், "பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையால், ஊழியர்கள் மத்தியில் பெரும்
பீதி ஏற்பட்டு, 9,880 ஊழியர்கள் மற்றும், 3,600 ஆசிரியர்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள ஊழல்களை
விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் எம்எல்ஏ, பாலகிருஷ்ணன் கூறுகையில்,
""நிதிநிலைமையை காரணம் காட்டி, 50 சதவீதம் ஊதிய குறைப்பு, 50 சதவீதம்
ஆட்குறைப்பு நடவடிக்கையில், பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
பல்கலைக்கழகம் தேவையில்லாமல், காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. ஊதிய
குறைப்பு, ஆட்குறைப்பு இருக்காது என, எழுத்துப்பூர்வமாக
தரவேண்டும்" என்றார்
கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் மதியழகன்
கூறுகையில்,""பல்கலைக்கழகத்தில் பல மோசடிகள் நடந்துள்ளன. ஊழியர்களை
அதிகளவில் எடுத்துவிட்டு, தற்போது ஆட்குறைப்பு செய்யப் போவதாக
தெரிவிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் ஊழல்
நடந்துள்ளது" என்றார்