கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா மீண்டும் தேர்வு!

 Photo: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா மீண்டும் தேர்வு!
ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ளார். அவரை எதிர்த்துபோட்டியிட்ட மிட்ரோம்னியைவிட அதிக வித்தியாசத்தில் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வானது இதுவே முதல்முறை . மார்டின் லூதர் கிங்கிற்கு இணையான புகழை ஒபாமா பெற்றுவிட்டதாக மீடியாக்கள் புகழ்கின்றன.
அதிபர் தேர்தல் துளிகள்

முதல் அதிபர்  
அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக முதல் அதிபர் தேர்தல் 1789ம் ஆண்டு நடைபெற்றது. இருப்பினும் இத்தேர்தலில் 10 மாநிலங்கள் மட்டுமே பங்கேற்றன. முதல் அதிபர் என்ற பெருமைக்குரியவர் ஜார்ஜ் வாஷிங்டன். இவர் 1789 ஏப்., 30ம் தேதி அதிபரானார்.

சீனியர், ஜூனியர் 
ரொனால்டு ரீகன் 69 வயதில் அதிபராக பதவியேற்றார். இவரே அதிக வயதில் அதிபரானவர். அதிக ஓட்டு (525) வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரும் இவரே. குறைந்த வயதில், அதாவது 43ல் அதிபரானவர் ஜான் கென்னடி.

இவர் ஒருவரே
பிராங்ளின் ரூஸ்வெல்ட் 1932ம் ஆண்டு 37வது அதிபராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து 1936, 1940, 1944 ஆகிய நான்கு முறை அதிபராக பதவி வகித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் இவர் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தவர். ஏனெனில் 1951ம் ஆண்டுக்கு முன்புவரை, தொடர்ந்து 2 முறைக்கு மேல் அதிபராக இருக்கக்கூடாது என்ற சட்டமில்லாதால் இவர் 3வது முறையாக அதிபரானார்.

முதல் விவாதம்
அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள், விவாதம் நடத்துவது வழக்கம். இது, 1960, செப்., 26ம் தேதி அதிபர் தேர்தலில் ஜான் கென்னடிக்கும், ரிச்சர்டு நிக்சானுக்கும் இடையே விவாதம் நடந்தபோது துவங்கியது.

2 முறை எத்தனை பேர்
அதிபர் தேர்தல் வரலாற்றில், தொடர்ந்து 2 முறை 14 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
1) ஜார்ஜ் வாஷிங்டன்
2) தாமஸ் ஜெப்ரசன்
3) ஜேம்ஸ் மேடிசன்
4) ஜேம்ஸ் மோன்ரூ
5) ஆன்ட்ரூ ஜாக்சன்
6) கிரான்ட்
7) தியோடர் ரூஸ்வெல்ட்
8) உட்ரோவ் வில்சன்
9) ஐன்ஸ்ஹோவர்
10) ரிச்சர்ட் நிக்சான்
11) ரொனால்டு ரீகன்
12) பில் கிளின்டன்
13) ஜார்ஜ் புஷ்
14) பாரக் ஒபாமா


நால்வர் மட்டுமே 
ஜார்ஜ் புஷ், ஜிம்மி கார்டர், கிளின்டன், ஜார்ஜ் டபிள்யு.புஷ் ஆகிய முன்னாள் அதிபர்கள் மட்டுமே தற்போதும் இருக்கின்றனர்.


ஒபாமா "ஓடி வந்த பாதை' 
*2009 ஜன., 20 ல் அமெரிக்க அதிபாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* பிப்., 27 - ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் போக்கை வாபஸ் பெற்றார்.
* மார்ச் 31- இங்கிலாந்து அரசி எலிசபெத்தை சந்தித்தார்.
* அக்., 9 - அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.
* 2010 ஜன., 27- வேலைவாய்ப்பு, சுகாதாரம், பொருளாதாரம் குறித்து உரை நிகழ்த்தினார்.
* 2011 மார்ச் 28- லிபியாவிற்கு உதவ முற்பட்டார்.
* ஏப்., 27- அமெரிக்க மண்ணில் பிறந்தற்கான பிறப்பு சான்றிதழை வெளியிட்டார்.
* மே. 1 - ஒசாமா பின்லேடன் இறந்ததாக அறிவித்தார்
* டிச., 31- பரந்த பாதுகாப்பு மசோதா நிறைவேற்றினார்.
* 2012 மே 9 - ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்தார்.
* ஜூன் 5 - சட்ட விரோதமா குழந்தைகள் நாடு கடத்தப்படுவதை நிறுத்த உத்தரவிட்டார்.
* செப்., 5 - தேசிய ஜனநாயக மாநாட்டில் ஒபாமா உரை நிகழ்த்தினார்.
* செப்., 14 - லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கி, 4 அமெரிக்கர்கள் இறந்ததற்கு ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.
* நவ., 7 - தேர்தலில் மீண்டும் அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்க தேர்தல் நடந்தது எப்படி
அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுவதில்லை. அதிபர் வேட்பாளர் சார்பில் நிற்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் தான், ஒவ்வொரு மாகாணத்திலும் நிற்கிறார்கள். இவர்களுக்குத்தான் அமெரிக்க மக்கள் ஓட்டளிப்பர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு நேரடியாக மக்கள் ஓட்டளிக்க மாட்டர். மாகாணங்கள் வாரியாக தேர்வான தேர்வுக்குழு உறுப்பினர்கள், டிச.17ல் கூடி ஓட்டளித்து அதிபர், துணை அதிபரை தேர்வு செய்கின்றனர். இத்தேர்வுக் குழு உறுப்பினர்களைத் தான் "எலக்டோரல் காலேஜ்' என அழைக்கின்றனர்.  ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 முதல் 55 வரை தேர்வுக் குழுவினரின் எண்ணிக்கை மாறுகிறது. தேர்வுக் குழுவினரின் மொத்த எண்ணிக்கை 538. ஒவ்வொரு மாகாணத்திலும், அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தேர்வுக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அமெரிக்க அதிபரை தேர்வு செய்த உடன், இத்தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலைந்து விடுவர். அவர்களுக்கு பதவிக் காலமோ, வேறு பணிகளோ கிடையாது. அமெரிக்க அரசியல் சாசனப்படி, தேர்வுக் குழு உறுப்பினர்கள், தங்களுக்குப் பிடித்த அதிபர் வேட்பாளருக்கு ஓட்டளிக்கலாம். ஆனால், சில மாகாணங்கள் இயற்றியுள்ள சட்டத்தின் படி, கட்சி மாறி ஓட்டளிக்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் மீது, பார்லிமென்ட் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடைமுறை, தேசிய அளவில் பொதுவானதாக இருந்தாலும், மாகாணங்கள் சில, தங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வுக் குழு உறுப்பினர் தேர்வில் சில நடைமுறைகளை கடைபிடிக்கின்றன. சில மாகாணங்கள், தேர்தலில் மெஜாரிட்டி எண்ணிக்கையில், தேர்வுக் குழு உறுப்பினர்களைப் பெறும் கட்சிக்கே, ஒட்டுமொத்த ஓட்டுகளை அளிக்கும் நடைமுறையையும் கடைபிடிக்கின்றன.  மொத்தம் உள்ள 538 ஓட்டுகளில் 270 ஓட்டுகள் பெறுபவருக்குத் தான் அங்கு அதிபர் நாற்காலி.
இந்தியர் ஓட்டு யாருக்கு
அமெரிக்காவில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் நான்கில் மூன்று பங்கினர், ஒபாமாவுக்கு ஓட்டளித்துள்ளனர். அமெரிக்க மாகாணங்களில், ஓஹியோ, கொலராடோ, விஸ்கான்சின், புளோரிடா, வெர்ஜினியா ஆகியவற்றின் ஓட்டுகள் தான், அதிபர் வெற்றியை தீர்மானிப்பவை என கருதப்படுகிறது. இம்மாகாணங்களில் மட்டும் 75 சதவீத இந்தியர்கள், ஒபாமாவுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த "ஏப்ரல் மீடியா' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஆனால், பென்சில்வேனியாவில் ரோம்னியை இந்தியர்கள் ஆதரித்துள்ளனர்.
ஒபாமா ஒரு பார்வை
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா, 1961 ஆக.,4 ல் ஹவாய் தீவு, ஹொனலூலூ நகரில் பிறந்தார். தாய் ஆன்டன்ஹாம், ஆங்கில வம்சாவளியை சேர்ந்தவர். தந்தை சீனியர் ஒபாமா, கென்ய நட்டைச் சேர்ந்தவர். கருத்துது வேறுபாட்டால், 1964ம் ஆண்டு பிரிந்தனர். தந்தையை பிரிந்து, தாய் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த ஒபாமாவின் குடும்பம், இந்தோனேஷியாவில் ஜகர்தாவிற்கு குடிபெயர்ந்தது. அங்கு 6 முதல் 10 வயது வரை படித்தார்.  1971ல் மீண்டும் ஹொனலூலூ திரும்பிய ஒபாமா, அங்கு பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். 1979 ல் லாஸ் ஏஞ்சல்ஸ் கல்லூரியில் படித்தார். 1981-83ல் கொலம்பியா பல்கலையில், அரசியல் அறிவியல் படிப்பில் பட்டம் பெற்றார். பின், சிகாககோவில் சர்வதேச தொழில் கழகத்தில் ஒரு ஆண்டு பணியாற்றினார். 1985 முதல் 88 வரை சிகாகோவில் சமூக சேவகராக பணியாற்றினார். 1988 ல் ஹார்வர்டு கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 1992 முதல் 2004 வரை சிகாகோ சட்ட பல்கலையில் ஆசிரியராக பணியாற்றினார். 1992 அக்., 3 மிச்சேலை மணந்தார். இவர்களுக்கு மாலியா, சாஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.  அரசியலில் ஈடுபட்ட பின், 1996லும், 2004லும் இல்லினாய்ஸ் மாநில செனட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது, 2003ல் ஈராக் படையெடுப்பை எதிர்த்தார். உரைகள், புத்தகங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரை கவர்ந்த ஒபாமா, 2004 ல் ஜனநாயக கட்சியின் பெரிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டார். 2008 நவ., 13ல், செனட் பதவியை ராஜினாமா செய்த ஒபாமா, அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் மெக்கெய்னை விட 192 ஒட்டுகள் கூடுதலாக பெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் முதல் கருப்பு இன அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றார்.
""வெற்றி நிச்சயம்.. இது வேத சத்தியம்...''
ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரோம்னியை விட, அதிக ஓட்டு வித்தியாசத்தில் இவர் பெற்ற வெற்றி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க வரலாற்றில், கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒருவர், இரண்டாவது முறையாக அதிபரானது இதுவே முதல் முறை. மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையான புகழை, ஒபாமா பெற்றுவிட்டார் என "மீடியா'க்கள் புகழ்கின்றன.
வெற்றி ஏன்:
* உடல் நலம் தொடர்பான சட்டம்: இதற்கு முன் இருந்த ஐந்து ஜனாதிபதிகள் நிறைவேற்றத் தவறிய, "யுனிவர்செல் ஹெல்த் இன்சூரன்ஸ்' திட்டம் தொடர்பான சட்டத்தை 2010ம் ஆண்டு துவக்கி வைத்தார். இதனால் பல கோடி அமெரிக்கர்கள் பயன் பெறுவர்.
* பொருளாதார வளர்ச்சி: பின்னடைவில் இருந்த அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், 78,700கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள மீட்பு மற்றும் மறு முதலீட்டு சட்டத்தில் கையெழுத்திட்டார். இச்சட்டம் அமலுக்கு வந்த பின், வேலையின்மை குறையத் துவங்கியது. பன்னிரண்டு மாதங்கள் கழித்து தனியார்த் துறை நிறுவனங்கள், அதிகமாக உற்பத்தி செய்யத் துவங்கின. 37 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.
* வால் ஸ்ட்ரீட் சீர்திருத்தம்: அமெரிக்காவில் ஏற்பட்ட மந்த நிலை, 2010ல் ஒபாமாவை விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது. அதை சரி செய்து, நிதித் துறையை கட்டுப்படுத்தும் வகையில், டாட்-பிராங்க் வால் ஸ்ட்ரீட் சீர்திருத்தம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார்.
* ஈராக் போர் முடிவு: 2009ல் ஈராக்கில் நடந்த போரை முடிவுக்கு கொண்டுவந்தார். 2011, டிச.18ல் அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறின.
* ஒசாமா வீழ்ச்சி: அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், 2011, மே2ல் அமெரிக்காவின் சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* ஆட்டோமொபைல் நிமிர்ந்தது: முந்தைய ஆட்சியில் வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல் தொழிலை சரி செய்த பெருமை இவரையே சாரும். 2009க்கு பின் இத்துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் பெருகின.
* கடாபி வீழ்ச்சி: 2011, மார்ச்சில், ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளுடன் கூட்டணி சேர்ந்து, கடாபிக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. லிபிய மக்களை பாதுகாக்கவும், கிளர்ச்சி படைகளுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா செயல்பட்டது.
* தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு: புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், எலக்ட்ரிக் கார்கள், நிலக்கரி, இயற்கை எரிபொருள், ஸ்டெம்செல்ஆராய்ச்சி உள்ளிட்ட தொழில்நுட்பம் நிறைந்த துறைகளின் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கினார். இதற்கு முன் எந்த நிர்வாகமும் இந்த துறைகளில் கவனம் செலுத்தியதில்லை.
* பள்ளி ஊட்டச்சத்து மேம்பாடு: பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச உணவுகளில் அதிக ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் கட்டாயம் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்தார். இதனால், இரண்டு மடங்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மாணவர்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டது.
* உலக நாடுகளுடன் உறவு: உலக நாடுகளுடன், நெருக்கமான உறவை வைத்திருக்க விரும்புபவர் ஒபாமா. எந்த நாட்டிற்கு சென்றாலும், அங்குள்ள கலாச்சாரத்தை மதிப்பதுடன், அதை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டக்கூடியவர். மற்ற நாட்டு அதிபர்கள், பிரதமர்களிடம் சுமூக உறவை கடைபிடிப்பார்.
* மனைவி: ஒபாமாவின் வெற்றிக்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, நல்லொழுக்கம், நேர்மை, வளைந்து கொடுக்கும் தன்மை என பல இருந்தாலும், அவருடன் கைகோர்த்து நிற்கும், மனைவி மிச்செலுக்கே பெருமை கிடைக்கும். இது போன்ற காரணங்கள் தான், இவரை மீண்டும் அமெரிக்காவின் அதிபராக்கி உள்ளன.
 
பராக் ஒபாமா மேலும் சில தகவல்கள்:

* பராக் ஒபாமாவின் தந்தை சீனியர் ஒபாமா, கென்யா நாட்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்துக்குப் பட்டப்படிப்புக்காக வந்த மாணவர். அங்கே ஆன் டன்ஹாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஹவாயின் ஹோனோலுலுவில் இவர்கள் இருவ
ருக்கும் 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார் பராக் ஒபாமா. கென்யாவின் 'ஸ்வாஹிலி' மொழியில் 'பராக்’ என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று பொருள்.

* திருமணமான மூன்றே வருடங்களில் பெற்றோர் பிரிந்தனர். அதற்குப் பிறகு அம்மாவுடன் இந்தோனேஷியா சென்றார். அங்குதான் ஒபாமாவின் குழந்தைப் பருவம் கழிந்தது.

* அமெரிக்காவில் தனது பள்ளிப் பருவத்தின்போது தாத்தா, பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது. பள்ளியில் படிப்பிலும், கூடைப்பந்து ஆட்டத்திலும் சிறந்து விளங்கினார். கருப்பினத்தவர் என்று கூறி, வகுப்பில் சக மாணவர்கள் இவரை இழிவாக நடத்தினர். கூடைப்பந்துப் போட்டிகளின்போது துன்புறுத்தப்பட்டார். அப்போது, கண்ணாடி முன் சட்டையைக் கழட்டிவிட்டு தன்னைத்தானே உற்றுப்பார்த்து... 'ஏன் இந்த வேறுபாடு?’ என அழுது இருக்கிறார்.

* வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே அப்பா வந்து பார்ப்பார். ஒபாமாவுக்குத் தன் தந்தையின் மீது எல்லையற்ற பாசம் உண்டு. அப்பாவின் மரணத்துக்குப் பிறகு, அவர் வாழ்ந்த இடங்களுக்குப் பயணம் செய்து அவரைப்பற்றிய தகவல்களைச் சேகரித்தார். ''என் தந்தையிடம் இருந்து எனக்கான கனவுகள்'' என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல், ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் வலியையும், சம உரிமைத் தாகத்தையும் உலகுக்கு எடுத்துச் சொன்னது.

* கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தார். பிறகு சில காலம் சிகாகோ தேவாலயத்தின் சமூக முன்னேற்றத் திட்ட இயக்குனராகப் பணியாற்றினார். அதையடுத்து ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்றார். பின்னர் சிகாகோ சட்டப் பல்கலைகழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

* எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தவர்.கல்விக் கடனிலேயே படித்தவர். அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் தனது கல்லூரிப் படிப்புக்காக வாங்கிய கடனையே அடைத்திருந்தார். இவரது வருமானத்தின் பெரும் பகுதி, இவர் எழுதிய புத்தகங்களின் மூலமே இன்னமும் கிடைக்கிறது. அதுபோக இவரது Dreams from My Father, மற்றும் The Audacity of Hope நூல்களின் ஒலி வடிவம், இவருக்கு அமெரிக்க இசை உலகில் உயரியதாகக் கருதப்படும் கிராமி விருது கிடைக்க வகைசெய்தது.

* குத்துச்சண்டை மிகவும் பிடிக்கும். 'எப்பொழுதும் மோதிப் பார்த்துவிட வேண்டும். எதிராளியின் பலத்தைப் பார்த்து பயம் இல்லை; நம்மிடம் நம்பிக்கை இருந்தால் போதும்’ என்று அடிக்கடி சொல்வார். அமெரிக்காவின் செனட் தேர்தலில் வென்று தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

* முதலில் கிளின்டனை ஆதரித்து அரசியல் செய்தார். பிறகு ஜான் கேரிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இறுதியில், தானே அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்தார்.

* ஒபாமாவுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தபோது, ''உண்மையான அன்புக்காக சிறு வயதில் ஏங்கியவன் நான். போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கத்தில் இருந்து மீண்டவன்!'' என்று இவர் தன் சிறு வயது நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டது இவர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில் அவர் இஸ்லாமியர் என அடுத்த வதந்தி கிளம்பியது. ''இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை. இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான்'' என்று பேசி, ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றிபெற்றார்.

* பதவியேற்ற குறுகிய காலத்துக்குள் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அதற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 'இந்த விருது என்னைக் கூச்சப்படவைக்கிறது. இது என்னுடைய பணிகளை இன்னமும் அதிகப் பொறுப்பு மிகுந்ததாக ஆக்குகிறது'' என்று பணிவாகச் சொன்னார்.
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...