பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின
மாணவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், கல்வி கட்டணங்களை
உயர்த்தி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தால், 74
ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர் எனத தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், தேர்வு செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு, நிர்ணயம் செய்யப்படும் கட்டணம், முழுமையாக வழங்கப்படும்.
அரசின் பல துறைகள், தங்கள் துறை சார்ந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணங்களை உயர்த்தும் போது, தனியாக எவ்வித அரசு உத்தரவையும் எதிர் நோக்காமல், கல்வி தொகை அறிவிக்கையில் மாற்றம் செய்து, அரசு துறைகளால் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை உடனே வழங்கலாம். இத்திட்டத்தால், 74 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர்.
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படுகின்றன.
பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட மிகவும் பின் தங்கிய எட்டு மாவட்டங்களில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். இதற்காக, 2.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.