கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் ஆசிரியர்களுக்கு முதல்வர் அறிவுரை

 
"மாணவர்களை இந்த படிப்பு தான் படிக்க வேண்டும் என்று பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள், மாணவர்களிடையே எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையில், தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்,'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்கள் என, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும், 92 லட்சம் பள்ளி, மாணவ, மாணவியருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது.விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, 36 ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளையும், பள்ளிக்குழந்தைகள் சிலருக்கு, விலையில்லா காலணிகள், சீருடைகள், கணித உபகரணப்பெட்டிகள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.

விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இன்றியமையாத தன்மை வாய்ந்த கல்வியை அனைவரும் கற்க வேண்டும்; கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 1,660 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடக்கின்றன. இந்தாண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு, 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளில், 26 ஆயிரத்து 220 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வு, இரண்டுமுறை நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.

ஆசிரியர் பணி என்பது அறப்பணி; தன்னலமற்ற சேவைப்பணி; ஆசிரியர் பணியை விட சீரிய பணி எதுவும் இல்லை. ஆசிரியர் பணி, வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல; ஒழுக்கம், பண்பு, ஆன்மீகத்தை மாணவ, மாணவியரிடையே எடுத்துச் சொல்லும் பணி.எந்த ஒரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர், தன்னை விட வளர்ச்சி பெறுவதை, எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் படிக்கும் மாணவர் புகழ் பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியர்கள் கண்டு இன்புறுவர்.

மாணவர்கள் ஆற்றலை, ஆர்வத்தை ஊக்கப்படுத்துவது ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்கள் மேற்கொண்டு, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் திறமையை மாணவர்களிடத்தில் உருவாக்கி, தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர், பாடத்தை கற்பிக்கும் விதம், மாணவ- மாணவியரை ஈர்க்கும் வகையில், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், செய்முறை விளக்கத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.

ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்பது ஒரு முக்கோண வடிவம். இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதே சமயத்தில், பெற்றோரும் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி விட்டதாலேயே, தங்கள் முடிந்துவிட்டதென நினைக்கக்கூடாது. பிள்ளைகளை உயர்த்த, உறுதுணையாக பெற்றோர் இருக்க வேண்டும். இந்த படிப்புதான் படிக்க வேண்டும் என்று, அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆர்வமாக படிக்க விரும்பும் படிப்பில், அடைகிற வெற்றியை, ஆர்வமில்லா படிப்பில் அடையமுடியாது.

படிக்கும் ஆர்வத்தை, பிள்ளைகளிடையே ஏற்படுத்தும் அதே சமயத்தில், அவர்கள் விருப்பத்திற்கேற்ற பாடத்தை படிக்க அனுமதித்தால், அனைத்து மாணவ- மாணவியருக்கும் வெற்றி உறுதி.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, பள்ளிக் கல்வி செயலர் சபீதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து நெரிசலின்றி முடிந்த விழா
சென்னையில் நேற்று பல விழாக்கள் நடந்ததை ஒட்டி, போக்குவரத்து பாதிக்காத வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த விழாவில், பட்டதாரி ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் என, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழா நடந்த பகுதி, அண்ணாசாலைக்கு அருகாமையில் இருந்ததால், விழாவிற்கு வரும் வாகனங்களால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை இருந்தது.

இதையறிந்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று முன்தினமே, விழா நடைபெறும் மைதானத்திற்கு பின்புறமாக, கூவம் ஆற்றை ஒட்டி, போக்குவரத்திற்கு அதிகம் பயன்படாமல் இருந்த சாலையை கண்டறிந்தார். அந்த வழித்தடத்தில், வாகனங்களை வெளியேற்ற வேண்டும் என, போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 1,000 வாகனங்களும், ஒரே நேரத்தில் வெளியேற அனுமதிக்காமல், 50 மற்றும் 100 வாகனங்களாக, படிப்படியாக போலீசார் வெளியேற்றினர்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அண்ணாசாலையில், வாகனங்கள் மணிக்கணக்கில் நெரிசலில் சிக்காமல் சென்றதால், பொதுமக்களின் பாராட்டை போலீசார் பெற்றனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியதாவது:
வெளி மாவட்டங்களில் இருந்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில், வாகனங்களில் சென்னைக்குள் நுழையும் போது, கண்டிப்பாக நெரிசல் ஏற்படும். அதனால், விழாவிற்கு வரும் வாகனங்களை காலை, 7:00 மணிக்குள் மைதானத்திற்குள் கொண்டு சென்று, வழக்கமான சோதனைகளை முடித்தோம்.

அதேபோல், விழா முடிந்ததும், மதிய உணவு நேரத்தில், வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக, அண்ணாசாலையை தவிர்த்து, பிற சாலைகளின் வழியாக வெளியேற்றப்பட்டன. இதனால், நெரிசல் தவிர்க்கப்பட்டது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...