கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நல்லதை கற்றுக்கொள்! - சு.கி.சிவம்

"Home Work கணக்கு போட்டாச்சா?" என்று பாபுவை அதட்டினாள் அக்கா.

"கஷ்டமா இருக்குக்கா. ராமு எப்படியும் கணக்கு போட்டுட்டு வந்துடுவான். கோபுவும், நானும் அவனை பார்த்து காப்பி பண்ணி எழுதிக்குவோம். இதுதான் ஈஸின்னு கோபுவும் சொன்னான்" என அக்காவிடம் விளக்கமாகப் பேசினான் பாபு.

பாபுவை அருகில் அழைத்து "எங்க டீச்சர், ஒரு கதை சொன்னாங்க பாபு. அதை உனக்கு சொல்லட்டுமா?" என்றாள் அக்கா.

"ஹை, கதையா..?! சொல்லு... சொல்லு" என ஆர்வமானான் பாபு.

"காட்டில் மிகவும் சிரமப்பட்டு விறகுகளை வெட்டி ஒருவர் சம்பாதித்து வந்தார். ஒரு நாள் அவர் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும்போது ஒரு புலி கொழுத்த மான் ஒன்றை வேட்டையாடுவதை பார்த்தார். உடனே பாதுகாப்பாக மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்துவிட்டார். துரத்தி துரத்தி படாதபாடுபட்டு மானை புலி அடிச்சு... சாப்பிட்டது! ஆனால், அந்த மானை முழுமையாக சாப்பிட முடியாததால், மிச்ச இரையை அப்படியே போட்டுட்டு புலி போயிடுச்சு. பிறகு வயசான கழுதைப்புலி ஒண்ணு அங்கு நொண்டியபடியே வந்தது. அதுக்கு ஒரே சந்தோஷம். "கொழுத்த மான்! கஷ்டமே இல்லாம கடவுளா கொடுத்திருக்காரு. கடவுளுக்கு நன்றி!" என்று சொல்லிட்டு மானை முழுமையாக தின்றுவிட்டு ஏப்பம் விட்டது.

இதை பார்த்த விறகுவெட்டி, "அட உழைக்காத கழுதைப்புலிக்கு கடவுள் எவ்வளவு நல்ல உணவு கொடுத்தாரு. படாதபாடுபட்டு புலிக்கு கிடைச்ச அதே உணவு, உழைக்காமலேயே கழுதைப்புலிக்கு கிடைக்கும் படியா செஞ்ச கடவுளை நாம புடிச்சுக்கணும்னு!" நினைச்சு கோடாரியை தூக்கி வீசியெறிந்தாரு.

'இனிமேல் உழைக்கவே தேவையில்லை. கழுதைப் புலிக்கு உணவு கிடைக்கச் செய்தது போல் நமக்கான உணவையும் கடவுள் கொடுப்பாரு’ அப்படின்னு நினைச்சு மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டு நேராக கோவிலுக்குப் போனார்.

சாமி சாப்பாடு கொடுக்கும்னு இரண்டு நாள் இரவு பகலாக காத்திருந்தாரு. பசி மயக்கம். கண்ணை மூடினாரு. அவரது கனவுல கடவுள் வந்தாரு.

"முட்டாளே, உழைக்காம சாப்பிடணும்ங்கிற தப்பான விஷயத்தை கழுதைப்புலி கிட்டேயிருந்து நீ கற்றுக் கொள்வதற்காகவா உனக்கு அறிவை கொடுத்தேன். உழைச்சுதான் சாப்பிட வேண்டும் என்பதை புலியிடம் இருந்து கற்றுக்கொள்" என்றார்.

கடவுள் சொன்னதைக் கேட்டு புத்தி தெளிந்தவராக மீண்டும் கோடாரியை தூக்கிக் கொண்டு உழைப்பதற்காக காட்டுக்குச் சென்றார் அந்த விறகுவெட்டி!" என்று கதை சொல்லி முடித்தாள் அக்கா.

"பாபு, இந்த கதையில வர்ற மாதிரி காப்பி அடிக்கலாம் என்ற விஷயத்தை கோபுவிடம் இருந்து கத்துக்காதே. கஷ்டப்பட்டு கணக்கு போடணும்ங்கறதை ராமுவிடம் இருந்து கற்றுக்கொள்" என்றாள் அக்கா.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-03-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை ...