கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

 
இன்று - ஜன.30 : காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டிய பகிர்வு:

* மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1869-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் என்ற நகரில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றார். 1893-ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய சட்ட நிறுவனம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்தது. அங்கே குடியேறி இருந்த இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளைக் கண்டார். அவர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்த 20 ஆண்டுகளில், இந்தியர் மற்றும் பிற இனத்தவர்களின் உரிமைகளுக்காகப் போராடிப் பலமுறை சிறைக்குச் சென்றார்.

* 1914-ஆம் ஆண்டுக்குப் பிறகு தாயகம் திரும்பிய காந்திஜி, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தேசத் விரோதக் குற்றச்சாட்டில் அப்பாவி இந்தியர்களைக் கைது செய்ய வழிவகை செய்த, பிரிட்டிஷாரின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சை முறையில் போராட்டத்தைத் துவக்கினார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல இந்தியத் தலைவர்களின் வழிகாட்டியாக மாறினார்.

* காந்தி வாழ்ந்த 28,835 நாட்களில் 2,338 நாட்கள் சிறையில் கழித்தார். 28 முறை உண்ணாவிரதம் இருந்தார். நடப்பதில் ஆர்வம்கொண்டவர். 'உடற்பயிற்சிகளின் இளவரசன் நடைபயிற்சி’ என்று சொல்வார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே நீண்ட தூரம் நடப்பது காந்திக்கு மிகவும் பிடிக்கும். லண்டனில் சட்டம் படித்துக்கொண்டு இருந்தபோது தினமும் 10 மைல்கள் வரை நடப்பார். 1930-ம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி நோக்கி தனது 60-வது வயதில் யாத்திரை மேற்கொண்டு 241 மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.

* ஒரு முறை ரயிலில் ஏறும்போது ஒரு கால் செருப்பு கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்துவிட்டது. அடுத்த கணமே தன் மற்றொரு கால் செருப்பையும் கழற்றிப் போட்டுவிட்டார். ஒரு கால் செருப்பை மட்டும் கண்டெடுப்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதால், மற்றொரு கால் செருப்பையும் அப்படிக் கழற்றிப் போட்டார்.

* காலம் தவறாமையைக் கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காகத் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டு இருப்பார். படுகொலை செய்யப்பட்ட 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்திஜி சற்று மனவேதனையுடன் இருந்தார். ஏன் என்று கேட்டபோது, 'அன்றைய இறைவணக்கத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாகப் போனதற்காக வருந்துகிறேன்’ என்றார்.

* குஜராத்தியில் 'ஹரிஜன்’, ஆங்கிலத்தில் 'யங் இண்டியா’, குஜராத்தி மற்றும் இந்தியில் 'நவஜீவன்’ ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஆங்கிலத்திலும் இந்தியிலும் 'இண்டியன் ஒப்பீனியன்’ என்ற நாளிதழை நடத்தினார்.

* 1915-ம் ஆண்டு சாந்தி நிகேதனுக்குச் சென்ற காந்தி, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரைப் பார்த்து 'நமஸ்தே குருதேவ்’ என்று வணங்கினார். உடனே தாகூர், ''நான் குருதேவ் என்றால், நீங்கள் மகாத்மா'' என்று சொல்லி வணங்கினார். இதுவே, மகாத்மா என்ற அடைமொழி அமையக் காரணமான நிகழ்ச்சி.

* 1921-ம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பு வரை முழு உடையுடன் காட்சி அளித்த தேசத் தந்தை தனது தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தில் ஏழை விவசாயிகள் பெரும்பாலானோர் இடுப்பில் துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அதுவே அவரது எளிமையான ஆடை மாற்றத்துக்குக் காரணம் ஆனது.

* இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தை காந்திஜி கொண்டாடவில்லை. மாறாக, வகுப்புவாதக் கலவரங்களினால் மனம் நொந்து காணப்பட்டார். நோபல் அமைதி விருதுக்கு 1948-ம் ஆண்டு காந்திஜி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டார். நோபல் பரிசுக் குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப்போவது இல்லை என்று அறிவித்தது.

* காந்திஜிக்கு, உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள், 350-க்கும் அதிகமான அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளன. இது, எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைத்திடாத அரிய பெருமை. கடந்த 2007-ம் ஆண்டில், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2- ம் தேதியை 'சர்வதேச அகிம்சை தினம்’ ஆக ஐ.நா. அறிவித்தது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹. 2000/- Cash Reward to teachers and government employees who have served the government without any defect for 25 years - CEO Proceedings & Format

25 ஆண்டுகள் மாசற்ற அரசுப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ₹. 2000/- வழங்குதல் சார்ந்து - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அ...