அமெரிக்காவில், கொரோனா பரவலை தடுக்க, மூடப்பட்ட பெரும்பாலான பள்ளிகள், கடந்த மாத துவக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. அதிகமானோர் பலியான நியூயார்க் நகரில், இன்று, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால், அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரலில், 2 சதவீதமாக இருந்த பாதிப்பு, தற்போது, 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்து உள்ளது.மிசிசிபி மாகாணத்தில் தான், அதிக அளவில் பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஜூலை மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டது தான், பாதிப்பு அதிகரிக்க காரணம்.
77ஆயிரம் சிறார்கள்
பள்ளி குழந்தைகள் முக கவசம் அணிந்து வந்தாலும், துாங்கும் வகுப்பு, விளையாட்டு வகுப்பு போன்றவற்றின் போது, பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக, தேசிய தொற்று நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின், 49 மாகாணங்களின் பொது சுகாதார துறை அளித்த விபரங்களின் அடிப்படையில், இம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச் - செப்.,19 வரை, 5 - 17 வயது வரையிலான, இரண்டு லட்சத்து,77ஆயிரம் சிறார்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடையில் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், செப்டம்பரில் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு, 12 -17 வயது சிறார்கள், 51 பேர் பலியாகியுள்ளனர்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான பாதிப்பு உள்ளது. மருத்துவமனையில் சேர்ப்பதும், இறப்பு விகிதமும், பெரிய வர்களை விட, குழந்தைகளிடம் குறைவாக உள்ளது. 18 - 22 வயது வரை உள்ளோரின் பாதிப்பு, 55 சதவீதம் அதிகரித்துள்ளது.அதிகம்அமெரிக்காவின் வடகிழக்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் தான், குழந்தைகள் பாதிப்பு அதிகமாக உள்ளது.
செப்., 24 நிலவரப்படி, 20 வயதுக்கு உட்பட்டவர்களில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆறு லட்சத்து, 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய இரு வாரங்களில் இருந்ததை விட, 14 சதவீதம் அதிகம்.ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில், கொரோனாவால், 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து, 5,000 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.