பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க 23 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள்அரசு பணிக்கான நேர்காணலை ரத்து செய்துள்ளது என மத்தியஅமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டில் சுதந்திர தின உரையின் போது மத்திய அரசு பணிகளில் குரூப் பி (நான் கெஸடட்) மற்றும் குரூப் சி பிரிவுகளில் நேர்காணல் கூடாது. அதற்கு பதிலாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யலாம் என கூறி இருந்தார். மேலும் கடந்த காலங்களில் நேர்காணலின் போது நிகழ்ந்த குற்றங்கள் மற்றும் புகார்கள் ஏராளமாக இருந்தது. அதுமட்டுமல்லாது வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பணத்தை பெற்றுக்கொண்டு சலுகை காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. நேர்காணலை ரத்து செய்வதோடு எழுத்து தேர்வு நடத்துவதன் மூலம் அனைவருக்கும் சம அளவிலான வாய்ப்பு வழங்கப்படும். என அமைச்சர் கூறினார். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பிரதமரின் இந்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்தின. அதே நேரத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவை அமல்படுத்த தயங்கின. தற்போதைய நிலையில் ஜம்முகாஷ்மீர் , லடாக் உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்களில் 23 மாநிலங்கள் வரையில் நேர்காணல் நடைமுறையை நிறுத்தி உள்ளது. இது திருப்தி அளிப்பதாக உள்ளது என அமைச்சர் கூறினார்.