குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர், மருத்துவ ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றுவது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
''இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு பொதுப் பணிகளில் அடங்கிய 2018-19 ஆம் ஆண்டுக்கான சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் உள்ள உதவி இயக்குநர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கான முதல்கட்டச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய மருத்துவ ஆய்வாளர் மற்றும் மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலைப் பகுப்பாய்வாளர் ஆகிய பதவிகளுக்கான நான்காம் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களின் சான்றிதழ்களை அக்.28-ம் தேதி முதல் நவ.6-ம் தேதி மாலை 5.30 மணி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலம் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவ்விண்ணப்பதாரர்களுக்குக் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று கருதி, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இ-சேவை மையங்களின் பட்டியல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.