‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று சென்றடைந்தனர்.
அமெரிக்கா, ரஷ்யா உட்பட சில நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவி உள்ளன. இங்கு சில மாதங்கள் தங்கி விண்வெளி ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் அவ்வப்போது விண்வெளிக்கு சென்று வரும். அத்துடன், அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான் விண்வெளி வீரர்களும் சுழற்சி முறையில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் விண்கலத்தில் நேற்று நாசா வீரர்கள் 3 பேர், ஜப்பான் வீரர் ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2002-ம் ஆண்டு எலான் மஸ்க் என்பவர் உருவாக்கி, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல் முறையாக உருவாக்கி விண்ணுக்கு அனுப்பிய விண்கலத்துக்கு ‘டிராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, நேற்று காலை 11 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரக ராக்கெட் விண்கலத்தைச் சுமந்து சென்றது. அதில் விண்கலத்துக்குள் 4 வீரர்கள் இருப்பது போன்ற வீடியோவை இந்நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பியது. திட்டமிட்டபடி விண்கலம் சரியான சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதில் சென்ற 4 வீரர்களும் விண்வெளியில் 6 மாதங்கள் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபடுவார்கள். முன்னதாக கேபின் வெப்ப நிலையில் சற்று கட்டுப்பாடு இழந்த நிலை காணப்பட்டது. அந்தச் சிக்கல் உடனடியாக சரி செய்யப்பட்டது என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிளின் ஷாட்வெல் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முன்னதாக விண்கலம் ஏவும் நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், தனது மனைவி காரெனுடன் பங்கேற்றார்.
இந்நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவுப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வாழ்த்துகள் தெரிவித்தார்.
நாசாவுக்காக அடுத்த ஆண்டு மேலும் 2 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.