கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 குணபாடம்... -சு.வெங்கடேசன் எம்.பி (கோவிட் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை பதிவு)

கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் கண்டேன். 22ஆம் தேதி கோவிட் சோதனையில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 23ஆம் தேதி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டேன். 10 நாள்களுக்குப்பின் குணமடைந்து இன்று வீடுதிரும்பி உள்ளேன். அடுத்துவரும் வாரங்களில் வீட்டில் தனித்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

கோவிட் பெருந்தொற்றுத் தொடங்கிய மார்ச் கடைசி வாரத்திலிருந்து இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கட்டுரைகளையும் அறிக்கைகளையும் எழுதியுள்ளேன். ஆனாலும் கோவிட் நோயாளியாக இப்பதிவினை எழுதுவது அவசியம் என்று நினைக்கிறேன்.

 

தனிப்பட்ட முறையில் மிகமோசமான மனநிலையில் நான் துவண்டுகிடந்த போது தொற்று ஏற்பட்டது. உடல்பற்றிக் கவனங்கொள்ளும் திறனற்று இருந்தது மனம். ஆனால் வீட்டில் ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக விழிப்புக்கொண்டு இயங்க வேண்டிய தேவைக்கு உந்தித்தள்ளப்பட்டேன்.

 

11 வயது சிறுவன் முதல் 66 வயது பெரியவர் வரை வீட்டிலுள்ள பெரும்பாலானவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதால் அனைவருக்கும் நுரையீரல் பரிசோதனையையும் இரத்தபரிசோதனையையும் முடித்து நோய்த்தொற்றின் தாக்கத்தை மதிப்பிட்ட பின்னரே, யார்யாரை எங்கெங்கு சேர்ப்பது என முடிவெடுக்க வேண்டியிருந்தது. மருத்துவ நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப்பெற்றேன். யாராவது ஒருவரை நம்பிப்போவது எவ்வளவு வசதியானது என்பதை இதுபோன்ற நேரங்களில் கூடுதலாக உணரமுடியும்.

 

நிறைய நண்பர்களிடம் அவரவர்களுக்கு அவரவர்களின் கருத்துகளில் உள்ள தெளிவையும் துறைசார் அறிஞர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் கருத்துகளையும் கேட்டுவிட்டால் நாம் முடிவெடுப்பது எளிதன்று.

 

இறுதியில், தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்வது என்று முடிவெடுத்தோம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, மற்றும் மரு.செந்தில் ஆகியோரின் ஆலோசனைகள் மிகப்பயனுடையனவாக இருந்தன.

 

தோப்பூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏறி குடும்பத்தோடு புறப்பட்டோம். பயணத்தின்பொழுது என் மகள் உற்சாகமாக ஒரு செல்பி எடுத்தாள். தந்தையாக, அடிமனதின் நடுக்கத்தை மறைக்க முயன்றுகொண்டிருந்தேன். வாழ்க்கை, இப்படித்தான் நம்மைப் பணயம்வைத்து நம்மையே விளையாடச் சொல்லும்.

 

தோப்பூர் மருத்துவமனைப் பொறுப்பாளர் மரு. காந்திமதிநாதன் அங்கிருந்தார். கடந்த ஜனவரிமாதம் ஆனந்தவிகடன் ”டாப்10” மனிதர்களில் ஒருவராக அவரைத் தேர்வுசெய்து, விழா மேடையில் நான்தான் அவ்விருதினை அவருக்கு வழங்கினேன். அந்தத் தேர்வு எவ்வளவு சரியானது என்பதைத் தோப்பூர் மருத்துவமனைக்கு வந்து பார்ப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

 

உலகில் சவாலான விசயங்களில் ஒன்று, “நல்லது செய்வது”. ஒரு நல்ல செயலைச் செய்வது என முடிவெடுத்து இறங்கிப்பாருங்கள், அப்பொழுதுதான் உங்களின் போதாமைகளை நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். நல்லது செய்வதற்கான திறனை நல்லவர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் மற்றவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவார்கள். அதற்காக எவ்வளவு சட்டதிட்டங்கள், நீதி நூல்கள், அறிவுரைகள் குவிந்துகிடக்கின்றன இந்த நாட்டில்.

 

“காட்டாஸ்பித்திரி” என்று அழைக்கப்படும் தோப்பூர் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அன்பிற்குரிய சீத்தாராம் யெச்சூரி, என்.சங்கரய்யா, மு.க.ஸ்டாலின், வைகோ, தொல்.திருமா, இரா.முத்தரசன். கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் செல்லூர் கே.ராஜ் ஆகியோரை உள்ளிட்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எண்ணிலடங்காத தோழர்கள், வாசகர்கள் என அன்பிற்குரிய பலரும் நாங்கள் நலம்பெற விரும்பி தங்களின் நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அனைவருக்கும் இந்நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கடந்த 10 நாள்களாக நுரையீரல் மருத்துவர்கள் இளம்பரிதி, ஜெய்கணேஷ் ஆகிய இருவரும் செவிலியர் குழுவும் என்னையும் குடும்பத்தாரையும் சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர்.  ஐந்து நாள்கள் ரெடம்சவிர் வைரஸ் மருந்து, இரத்தம் உறையாமல் இருக்கவும் நுரையீரலினுள் அழற்சி ஏற்படாது இருக்கவும் ஐந்து ஆறு நாள்கள் சிரைவழி ஊசிகள், கூடவே மயில்களுடன் காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி, 'எப்படி இருக்கிறாய்?' என ஒவ்வொரு இரவிலும் அடிக்கடி எட்டிப்பார்த்து கேட்காமல் கேட்டுச் செல்லும் நிலவோடு மனப்பயிற்சி, இளநீரும் சூப்பும் பழங்களும் விடாதுகொடுத்து அனுப்பிய தோழர்கள், 'மூச்சை இழுத்து மெதுவா' என ஆயுஷ் மருத்துவர்களின் யோகப்பயிற்சி, "இஞ்சி, மஞ்சள், மிளகு எல்லாம் சேர்க்கிறீங்கதானே?" எனும் மருத்துவ  நட்பு வட்டாரங்களின் உணவுப்பயிற்சி ஆகிய எல்லாம் சேர்ந்து இன்று காலை, "சார்! வைரஸ் சுவடே இல்லை. . .  நீங்க கிளம்பலாம்" என்னும் செய்தியைச் சொல்ல வைத்துவிட்டன.

 

பத்து நாள்களில் உயிருக்கு அச்சுறுத்தலான வைரைசை விரட்டி அடித்தன மிகநேர்த்தியான மருத்துவ அணுகுமுறையும் சரியான மருந்துகளும் மருத்துவமனையின் சூழலும் மருத்துவர்களின் திறனும் செவிலியர்களின் மாசற்ற அன்பும் மருத்துவமனைப் பணியாளர்களின் கண்துஞ்சா கடின உழைப்பும்தான்.  காங்கிரீட் கட்டடத்திற்குள் அடுத்தடுத்து இருக்கும் பச்சைப்போர்வை போர்த்திய வலிநிறைந்த மனிதர்களுடன் வசதிக்குறைவாய்ப் படுக்கவேண்டி இருக்குமோ?, கழிப்பிடம் சுகாதாரமாய் இருக்குமோ? இராதோ? என்கிற மனத்தடைதான் பலரையும் அரசு மருத்துவமனைப் பக்கம் வராமல் வைக்கின்றது. கண்டிப்பாய் இத்தேசத்தில் இப்படியான பேரிடர்க்கால மருத்துவ மேலாண்மைக்குத் தோப்பூர் மருத்துவமனை போன்ற இயற்கையோடு இயைந்த ஒருங்கிணைந்த மருத்துவமனைகள் மிக மிக அவசியம்.

 

பெருந்தொற்றுக்கென தனித்த இடங்களில் மருத்துவமனைகளை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையோடு காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை அறுபதாண்டுகளுக்குப் பின்பும் அத்தியாவசியத் தேவையாக மாறிநிற்கிறது. அரசுகள் தொலைநோக்குப் பார்வையோடு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான உதாரணமே இது.

 

கிட்டத்தட்ட 11,000 மக்களை தமிழகத்திலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை இந்தியாவிலும் இழந்திருக்கிறோம். மரணவிகிதம் பெருமளவு குறைந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. மருத்துவர்கள் பலர் தேர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்நோயை அணுகும் உத்திகளைக் காணமுடிகிறது. ஆனாலும் இன்னும் போராட்டம் ஓய்வில்லை. நாடாளுமன்ற உறுப்பினராய் அரசு மருத்துவமனையில் எனக்கு மிகச்சிறப்பான சிகிச்சை கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை. ‘அனைவருக்கும் இத்தகைய சிறப்பான மருத்துவத்தை உத்தரவாதப்படுத்த முடியாதா? அதற்கான கட்டமைப்புகள் எல்லா மருத்துவமனைகளிலும் உள்ளனவா?’ என்கிற வலுவான வினாகள் எழத்தான் செய்கின்றன. 

 

இருபதாயிரம் கோடிக்கு ராஜவீதியும் எட்டாயிரம் கோடிக்கு தனிவிமானமும் இந்த நாட்டுக்கு இப்போதைய தேவையா? கல்விக்கும் மருத்துவத்துக்குமான கட்டமைப்புகளுக்கு எண்ணிலடங்காத் தொகையைக் கொண்டுபோய்க் கொட்டுவதுதான் இன்றைய அவசரத்தேவையும் வருங்காலத்துக்கான அவசியத்தேவையும் ஆகும்.

 

உலக சுகாதார நிறுவனம், "இந்த ரெட்சிவீரினால் ஒரு பயனும் இல்லை" எனச் சொல்கிறது. நமது நாட்டின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர், ‘நுரையீரல் தாக்கம் பெறும் முன்னர் இந்த ரெடம்சவீர் செலுத்தப்படும் போது முழுமையான முன்னேற்றம் கிடைக்கிறது’ என அறிவிக்கிறார். எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களும்   இக்கருத்தாக்கத்தை உறுதியாகச் சொல்கின்றனர். “நாங்கள் தொடக்கத்திலேயே ரெடம்சிவீர் கொடுத்த நோயரில் 100% வெற்றி காண முடிகிறது” என்கிறார்கள் அவர்கள். இதைப்பார்க்கும் போது, மருத்துவப் பயிற்சியில் "நோயும் மருந்தும் உனது நிலத்தில் உன் மக்களில் எப்படி பணியாற்றுகிறது?” என்பது, ‘ட்ரம்ப் என்ன சொல்கிறார்? WHO என்ன சொல்கிறது’ என்பதைவிட பேரிடர் காலத்தில் மிக மிக முக்கியம் என்பதை முழுமையாக உணரமுடிகிறது. அப்படியான இயலிடஞ்சார்ந்த (Indigenous) ஆய்வுகளையும் தரவுகளையும் இந்த ஒன்பதுமாத காலத்தில் நாம் இந்தியாவில் இன்னும் பெறவில்லையோ என ஐயமுறச் செய்கிறது.

 

ஐசிஎம்ஆர் அமைப்பு மருந்து ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடட்டும். நமக்கென நமது நாட்டுக்கென ஒரு முழுமையான மத்திய நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு (CDC) மிக மிக அவசியம் அல்லவா? அட்லாண்டாவில் சொல்வதையும் ஜெனீவாவின் கட்டளையையும் மட்டுமே கேட்டு நடக்க வேண்டுமா என்ன? முழுமையாக பொதுசுகாதார வசதிக்கென, பேரிட மேலாண்மைக்கென ஓர் அமைப்பை அரசு ஏன் உருவாக்கத் தயங்குகிறது? இப்படியான தேவைகள் குறைந்த அளவிலாவது உணரப்படுகிறதா? இப்படியான வினாகள் எழும்போது மாட்டுக்கோவியமும் கோவிட் அப்பளமும் நினைவுக்கு வராமல் இல்லை. நமக்கான ஆய்வு என பேசத்தொடங்கினாலே அடிவயிற்றில் இருந்து ஓர் அச்சம் மேலேறி வரத்தான் செய்கிறது. ஏனென்றால் கடந்த எட்டு மாதகாலத்தில் கொரோனாவுக்கு எதிராக இவர்களின் பேச்சுக்களும் செயல்களும் அப்படி.

 

 'பேரிடர்கள் இனி தொடர்செய்திகளாய்த்தான் இருக்கப்போகின்றன,' என சூழலியலாளர்கள் உலகெங்கும் எச்சரித்துக்கொண்டேதான் உள்ளனர். முதலில் கோவிட்டை வெல்வதிலும் சரி, பின்னர் வர இருக்கும் பேரிடரை மேலாண்மை செய்வதிலும் சரி, பின்வருவன மிக மிக முக்கியமானவை:

⁃ நமது ஊரில் இப்பேரிடர்கள் எப்படிப் பரிணமிக்கின்றன?

⁃ நம் மக்களிடையே எந்த மருந்துகள் சிறப்பாக பயனளிக்கின்றன?

⁃ உணவு ஆயுஷ் மருந்துகளின் கூட்டணி எப்படியெல்லாம் பயனளிக்கின்றன?

⁃ மரணம் நிகழ்கையில், ஒவ்விரு மரணமும் கற்றுத்தரும் பாடம் என்ன?

⁃ விரைவாய் மருத்துவம் செய்ய முனைகையில் அவசியப்படும் மருந்துகள் கட்டமைப்பு வசதிகள் என்ன?

 

இவை எல்லாம் உன்னிப்பாக கற்று ஆய்ந்தறியப்பட வேண்டும். இதில் கிடைக்கும் தரவுகளால் மட்டுமே எம் மக்களின் நலவாழ்விற்கு அடித்தளம் அமைக்க முடியும்.

*#maduraiMPwrites* *#COVID19*

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...