கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்கு மாணவர்களே ஏற்றும் அறிவுச்சுடர்...

அரசுப் பள்ளியில் படித்த ஹரிகிருஷ்ணா நீட் தேர்வில் 420 மதிப்பெண் பெற்று திருச்சி மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேர்வாகியிருக்கிறார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இவரால் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும். யார் ஏற்றினாலும் அறிவுச்சுடர் மேல்நோக்கியே எரியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! ஹரிகிருஷ்ணாவைப் போலவே, அரசுப் பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

இவர்களில் இருவருக்கு திருச்சி என்.ஐ.டி.யில் படிப்பதற்கு இடம் கிடைத்திருக்கிறது. இவர்களைப் போன்று திருச்சி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. போன்ற அகில இந்தியத் தகுதித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை 2017 முதல் வழங்கிவருகிறது திருச்சி என்.ஐ.டி. மாணவர்களால் நடத்தப்படும் ‘இக்னைட் டீச்சிங் கிளப்’. ஏழை மாணவர்களுக்குக் கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட சஞ்சீவின் முன்முயற்சியால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

மாணவர்களின் முயற்சி

“பெரம்பலூர் ஆட்சியர் நந்தகுமார், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் ஒரு செயல்திட்டத்தை நீட் அறிமுகம் செய்யப்பட்ட 2016இல் அறிமுகப்படுத்தினார். பொறியியல் படிக்கும் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வாரயிறுதி நாள்களில் பயிற்சி அளிப்பதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம். அப்படிப் போயிருந்தபோது நீட் பற்றித் தெரிந்த அளவுக்குக்கூட, ஜே.இ.இ.-மெயின்ஸ் தேர்வு குறித்துப் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தெரியவில்லை என்பது புரிந்தது. அதனால் அதைப் பற்றிப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினேன்.

சிறு குழுக்களைத் தொடங்கி அதன் வழியாகச் சமூகப் பணிகளைச் செய்வதற்கு எங்கள் கல்லூரி நிர்வாகமே உதவியது. அப்படி உருவாக்கப்பட்ட குழுதான் ‘இக்னைட் டீச்சிங் கிளப்’. தொடக்கத்தில் திருச்சியைச் சுற்றியிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவந்தோம். அதன்பின் மாவட்ட ஆட்சியர் மூலமாக மாவட்டக் கல்வித் துறை, திருச்சி என்.ஐ.டி. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் திருச்சி என்.ஐ.டி. வளாகத்துக்கு அழைத்துவரப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்தோம்.

திருச்சியைச் சுற்றியிருக்கும் அரசுப் பள்ளிகளில் திறனறித் தேர்வை நடத்தி, பிளஸ் டூ படிக்கும் 20 மாணவர்களையும் பிளஸ் 1 படிக்கும் 40 மாணவர்களையும் தேர்வுசெய்து பயிற்சியளிக்க முடிவெடுத்தோம். தற்போது மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் 45 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்கிறார் சஞ்சீவ்.

கைபேசிவழிப் பயிற்சி

அண்மையில் நடைபெற்ற ஜே.இ.இ.-மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி.யில் படிப்பதற்கு இடம் கிடைத்திருக்கும் மாணவர்கள் சேதுபதி, புகழரசி இருவரும் இக்னைட் டீச்சிங் கிளப் குறித்துப் பகிர்ந்துகொண்டார்கள். “லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தேன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருச்சியைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருச்சி என்.ஐ.டி.யில் இயங்கும் ‘இக்னைட் டீச்சிங் கிளப்’ திறனறித் தேர்வை நடத்தியது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பொறியியல் படிப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ.-மெயின்ஸுக்கான பயிற்சியை நடத்தினார்கள். அந்த வளாகத்திலேயே இரண்டு நாள் தங்கிப் படிப்போம்.

கரோனா ஊரடங்கு அறிவிக்கப் பட்டவுடன், முழுக்க முழுக்க கைபேசி வழியாகவே பாடங்களை நடத்தினார்கள். இயற்பியல், வேதியியல், கணிதம் மூன்று பாடங்களுக்கு மூன்று வழிகாட்டிகளை (Mentor) நியமித்திருந்தனர். கரோனா ஊரடங்கால் தேர்வு ஐந்து மாதம் தள்ளிப்போனதால் கூடுதலாகப் படிக்க முடிந்தது. என்னுடைய வழிகாட்டிகள் என்னைவிட ஒரு வயது மட்டுமே பெரியவர்கள். பேராசிரியர்களிடமும் இயல்பாகச் சந்தேகங்களைக் கேட்க முடியாது. அண்மையில் நடைபெற்ற ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற்று என்.ஐ.டி.யில் படிப்பதற்கு எனக்கும் புகழரசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது” என்கிறார் திருச்சி என்.ஐ.டி.யில் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படிக்கவிருக்கும் மாணவர் சேதுபதி.

நானும் பயிற்சியளிப்பேன்

மண்ணச்சநல்லூர் அரசுப் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த புகழரசி, திருச்சி என்.ஐ.டியில் பி.டெக். மெட்டலர்ஜிகல் படிக்கவிருக்கிறார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய இரண்டு அண்ணன்களும் படித்துக் கொண்டிருக்கின்றனர். “என்.ஐ.டியில் படிக்கும் அண்ணன், அக்கா காலை 9 மணியிலிருந்து இரவு 12 மணி வரை எப்போது கேட்டாலும் என்னுடைய பாடங்களில் சந்தேகங்களை தீர்த்துவைத்தனர். அதனால் தேர்வில் வெற்றிபெற முடிந்தது. என்னைப் போல் இன்னும் பல அரசுப் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ.-மெயின்ஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்கு நானும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பேன்” என்கிறார் புகழரசி.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு

  Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு Group 4 Exam Results - List of Candidates...