தமிழகத்திலுள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகளைப் போன்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களும் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என 2019-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) ஆணை பிறப்பித்தது.
அதன்படி, அரசுக் கல்லூரிகளில் 2-வது சுழற்சி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் தற்போது பணியிலுள்ள உதவிப் பேராசிரியர்களுக் கான கல்வித் தகுதி குறித்த ஆய்வை அந்தந்தப் பல்கலைக் கழக நிர்வாகம், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகங்கள் மேற்கொண்டன. பிஎச்டி அல்லது மத்திய, மாநில (நெட், ஸ்லெட்) அரசு நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி மற்றும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 50 சதவீதம் பேரும், காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் மட்டும் 113-க்கும் மேற்பட்டோரும் உரிய தகுதி பெற்றிருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், 18 ஆயிரம் என சம்பளம் நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், 2020-2021 கல்வியாண்டில் இந்த சம்பள விகிதம் கிடைக்கும் என உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், கரோனா ஊரடங்கால் கல்லூரிகள் மூடல் போன்ற காரணங்களால் அது நிறைவேறவில்லை. குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்படுவதாக தகுதியான உதவிப்பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கவுரவ விரிவுரையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஏற்கெனவே தனியார், அரசு கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள் ரூ. 15 ஆயிரம் மற்றும் அதற்கும் குறைவான சம்பளமே பெறுகின்றனர். யூஜிசி நிர்ணயித்த தகுதி இருந்தும் ஓராண்டாகியும் உரிய சம்பளத்தைப் பெற முடியவில்லை. அதேநேரத்தில் கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் ரூ.25 ஆயிரம் சம்பள விகிதம்கூட இன்னும் வழங்கப்படாதநிலை உள்ளது. உரிய ஊதியம் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.