ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ அறிவித்துள்ள உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அண்மையில் அறிவித்தது. பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் திறமையான மாணவர்களை ஊக்கமளிக்கும் விதமாகவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகளை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள். எனினும் அப்பள்ளிகளில் மாதந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகையை சிபிஎஸ்இ வழங்கும்.
இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 10 தேதி கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிசம்பர் 28 ஆகவும் இருந்தது.
கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிபிஎஸ்இ இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாமல் போனதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று, உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: cbse.nic.in