கொரோனா ஊடரங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் காவி நிற உடையணிந்து இருந்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவர் புகைப்படம் வெள்ளை நிற உடையணிந்து மதக் குறியிடுகள் இன்றி இருக்கும். பா.ஜ.கவினர் திருவள்ளுவர் காவி நிற உடையணிந்ததைப் போன்ற புகைப்படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றனர். ஏற்கெனவே, திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில், தமிழக அரசின் தொலைக்காட்சியிலேயே காவி உடை திருவள்ளுவர் புகைப்படம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவி நிறத்தில் திருவள்ளுவர் உருவம் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு தி.க தலைவர் கி.வீரமணி, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பும், கண்டனும் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் உருவம் ஒளிபரப்பப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறுதலாக அவ்வாறு ஒளிபரப்பட்டுவிட்டது. அரசின் கவனத்திற்கு வந்த பிறகு உடனடியாக காவி நிறம் உடை மாற்றப்பட்டுவிட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போடப்பட்ட நிகழ்வுகளும், பள்ளி பாடப் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் உடை தரித்திருப்பது போன்று வெளியான உருவத்திற்கும் கடும் எதிர்ப்புகள் தமிழகத்தில் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.