தமிழகத்தில் அங்கீகாரமற்ற மனைபிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்.28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாதமனைப்பிரிவுகளை பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016-ல் பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைவாங்கியவர்களின் நலனைக் காக்கவும், அந்த மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிக்கவும், கடந்த 2017-ம் ஆண்டு மனைகள் வரன்முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மே 4-ம் தேதி இதற்கான விதிகளை வீட்டுவசதித் துறை வெளியிட்டது.
இந்த விதிகள்படி, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க, 2017, நவ.3 வரை 6 மாதம்காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு நவ.3-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வரன்முறை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய மனைப்பிரிவு உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மீண்டும் வரன்முறைக்கான வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதிலும் கால நீட்டிப்பு கோரப்பட்டது.
இதையடுத்து தமிழக வீட்டுவசதித் துறை செயலர் தற்போது வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
வரன்முறை திட்டத்துக்கான கால அவகாசம் முடிவுறுவது பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், கால அவகாசம் நீட்டிக்கப்படும் என தவறாக கருதியதாலும் பலர் விண்ணப்பிக்க தவறிவிட்டனர். இவ்வாறு விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் வரன்முறைப்படுத்த முடியாமல் விடுபட்ட மனைகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பளிக்கும் விதமாக, விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கலாம் என நகர் ஊரமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர், ஆன்லைன் மூலம் மனை மற்றும் மனைப்பிரிவுக்கு வரன்முறைப்படுத்த மேலும் ஒருமுறை வாய்ப்பு வழங்கலாம் என தெரிவித்தார்.
இதை பரிசீலித்த தமிழக அரசு,மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறை செய்யத் தவறியவர்களுக்காக மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதி மற்றும் அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டிருப்பின், அந்த மனைபிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எந்தவித மாற்றமும் இல்லாமல் வரும் பிப்.28-ம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.