கரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் அங்கன்வாடிகளைத் தவிர்த்து நாட்டில் உள்ள பிற அங்கன்வாடிகளைத் திறப்பது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் மாநில அரசுகளும், மத்திய அரசும் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தீபிகா ஜகாத்ராம் சாங்கேனி எனும் சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ கரோனா வைரஸ் பரவல் தொடங்கியவுடன் திடீரென நாடுமுழுவதும் அனைத்து அங்கன்வாடிகளையும் மத்திய அரசு மூடிவிட்டது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக அங்கன்வாடிகள் மூடிக்கிடக்கின்றன. அங்கன்வாடிகளை மூடிவிட்டதால், ஏழை பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.அவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக ரேஷன் பொருட்கள் மட்டுமே கிடைக்கிறது.
ஆதலால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிதேசங்களில் உள்ள அங்கன்வாடிகளை திறக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். உணவுப்பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படியும், ஊட்டச்சத்து விதிகளின்படியும் சத்தான உணவுகளை ஏழை தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷான் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிஅசோக் பூஷன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “ உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்படி கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் ஏழை தாய்மார்கள், குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சத்துணவுசட்ட விதியின்படி வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.
ஆதலால், கரோனா பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்படும் அங்கன்வாடிகளைத் தவிர்த்து நாடுமுழுவதும் அங்கன்வாடிகளை திறப்பது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், மத்திய அரசும் முடிவு எடுக்க வேண்டும் இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநிலங்களில் இருக்கும் தேசியபேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முழுமையானஅறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.