கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல எனவும், தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து 5.56 லட்சம் டோஸ்கள் கொண்ட சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு வரவுள்ளது. வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்கட்டமாக சீரம் நிறுவனத்தின் 5,56,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும், பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் தமிழகம் வரவுள்ளது. ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.
கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்கு எந்த தடுப்பூசிகளை போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி வருகிறது. புனேயில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளது. அங்கிருந்து 10 மையங்களுக்கு அனுப்பப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.