பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் நேற்று பிறப்பித்த அரசாணை:தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு பணிகளை, உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, கூட்டமாக சேராத வகையில், தனித்தனியாக வரவழைத்து, விபரங்களை சேகரிக்க வேண்டும்; தேர்வுக்கான கட்டணத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஜன., 19ல் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்வு தொடர்பாக, மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம், உறுதிமொழி படிவம் பெற வேண்டியுள்ளது.
இதற்கும், தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. இது போன்ற நடைமுறைகளையும், நிர்வாக ரீதியான பணிகளையும், ஆசிரியர்களும், பணியாளர்களும் உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள, அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.