தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 273 பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சட்டப்பேரவை கூட்ட உரையின் போது தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இனி தடையை மீறி ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் சிறைத்தணடனை விதிக்கப்படும். பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார்.
அப்போது மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பேசுகையில், 2011ம் ஆண்டு முதல் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 273 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 644 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும், 127 தொடக்கப் பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நூலகம் விரைவில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் உரையின் போது கூறியுள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், சென்னையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.