சாதாரண காய்ச்சல் இருந்தாலும் மருத்துவமனைக்கு வர வேண்டும். நான்கு நாட்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் உயிரை காப்பாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பிராட்வேயில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தகுதியானவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தது காரணமாக மட்டுமே கொரோனா பரவல் கட்டிக்குள் வந்தது.
தற்போது, மீண்டும் அதனை மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். தினசரி சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண காய்ச்சல் இருந்தாலும் மருத்துவமனைக்கு வர வேண்டும். சாதாரண காய்ச்சல் தான் என்று நினைத்து சாதாரண மருந்துகளைசாப்பிட்டு, மூன்று மற்றும் நான்கு நாட்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் உயிரை காப்பாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்படும்.
பெரும்பாலும் எங்களை பார்த்தவுடன் பலரும் முகக்கவசம் அணிந்துகொள்கிறார்கள். நாங்கள் இல்லையென்றால் முகக்கவசம் அணிவதில்லை. இந்நிலை மாற வேண்டும். மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். 10 நாட்கள் மக்கள் சுகாதாரத்துறைக்கு கடுமையாக ஒத்துழைத்தால் தற்போது அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். " என்று தெரிவித்தார்.