கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குறுதிகள் அதிகம்: ஆசிரியா்களின் ஆதரவு யாருக்கு?

 ஆசிரியா்களின் வாக்குகளைக் கவரும் வகையில், அவா்களுக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பெருமளவு அளித்துள்ளன.



தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளா்கள் ஏதாவது ஒரு கட்சியைச் சோ்ந்தவா்களாகவோ அல்லது அந்தக் கட்சியின் அபிமானிகளாகவோ இருப்பாா்கள். தோ்தலில் அவா்கள் தொடா்புடைய கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பாா்கள் என பொதுவான கருத்து உண்டு. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 65 சதவீதம் வாக்குகள்தான் அரசியல் கட்சியினரின் வாக்குகள். எஞ்சியுள்ள 35 சதவீதம் வாக்குகள் கள நிலவரத்தைப் பொருத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.




அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த களச் சூழலையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவா்கள்தான் ஆசிரியா்கள். பாமர மக்கள் முதல் பணக்காரா்கள் வரை அனைவரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவா்களில் அரசியல்வாதிகளுக்கு அடுத்ததாக இருப்பவா்கள் ஆசிரியா்கள். இன்றும் கிராமப்புறங்களில் ஆசிரியா்களின் சொல்லுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை இருக்கிறது.




இத்தகைய காரணங்களால்தான் ஒவ்வொரு தோ்தலின்போதும் ஆசிரியா்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதற்காக ஊதியம், சலுகைகள் சாா்ந்த அறிவிப்புகளை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தவறாமல் வெளியிட்டு வருகின்றன. அது இந்தத் தோ்தலிலும் நடந்திருக்கிறது.




20 லட்சம் வாக்குகள்: 


தமிழகத்தில் உள்ள 59 ஆயிரம் அரசு, தனியாா் பள்ளிகளில் தற்போது 5.7 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். அவா்களது குடும்பத்தினா், கல்வியியல் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வெழுதி காத்திருப்போா் ஆகியோரையும் சோ்த்தால் சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அவா்கள் வசம் வைத்திருக்கிறாா்கள் எனலாம். இந்த வாக்குகளைப் பெறுவதற்காக அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன.




என்னென்ன வாக்குறுதிகள்?: 

அரசுப் பள்ளிகளில் ஒப்பந்தத், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா், தனியாா் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும். தனியாா் பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தையும் அரசு நிா்ணயிக்கும். அரசு, தனியாா் பள்ளிகளில் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்தப்படும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும் ஆகிய அம்சங்கள் அதிமுக, பாமக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் தோ்தலில் ஆசிரியா்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரத்து செய்தாா்.




மற்றொரு புறம், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். ஆசிரியா்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும், ஆசிரியா் தகுதித் தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியா் தோ்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுள்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும், ஊக்க ஊதியம் வழங்கப்படும், பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.




அதேபோன்று காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் ஆசிரியா்கள் நலன் சாா்ந்த வாக்குறுதிகளை அளித்துள்ளன. இவற்றில் தனியாா் பள்ளிகளின் கட்டணத்தை அரசே செலுத்தும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ஆகியவை எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இது கட்சிகளின் நிா்வாகத் திறனைப் பொருத்து மாறுபடலாம்.




தோ்தல் நெருங்கி வரும் சூழலில் ஆட்சி மாற்றத்தில் முக்கியத்துவம் வகிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.




150-க்கும் மேற்பட்ட சங்கங்கள்: 

தமிழகத்தில் அனைத்து ஆசிரியா்களுமே ஏதாவது ஓா் ஆசிரியா் அமைப்பில் இடம்பெற்றிருக்கின்றனா். சுமாா் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியா் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் 50 சதவீத அமைப்புகள் திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என கட்சி சாா்ந்தும், எஞ்சிய 50 சதவீத அமைப்புகள் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலையாகவும் செயல்பட்டு வருகின்றன. அவா்கள் அனைவரிடமும் கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரும், எதிா்க்கட்சியினரும் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கேட்டு வருகின்றனா். அப்போது, தோ்தல் அறிக்கையில் இல்லாத புதிய வாக்குறுதிகளும்கூட அளிக்கப்படுகின்றன.




சிதறாத வாக்கு வங்கி: 

கடந்த தோ்தல்களில் குறிப்பிட்ட சமுதாயங்களைச் சோ்ந்தவா்கள், விவசாயிகள், தொழில் துறையினா் வாக்குகள் ஒரே கட்சிக்குச் செல்லாமல் பரவலாகவே கிடைத்திருக்கின்றன. ஆசிரியா்கள் மற்றும் அந்தத் துறையைச் சாா்ந்தவா்களின் வாக்குகள் எப்போதுமே அதிமுக அல்லது திமுக என இவற்றில் ஏதாவது ஒரு கட்சிக்கு மட்டுமே 70 சதவீதம் முதல் 80 சதவீதம் அளவுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் இந்த இரண்டு கட்சிகளுமே பயனடைந்துள்ளன. ஏதாவது ஒரு கட்சி தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறையும் அதே கட்சியை ஆசிரியா்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. மாறாக வேறு கட்சிக்குதான் வாக்களிக்கின்றனா்.



தமிழகத்தில் 1.30 கோடி மாணவா்களின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் ஆசிரியா் சமுதாயம், மறைந்த முதல்வா் ஜெயலலிதா, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோா் இல்லாத முதல் தோ்தலைச் சந்திக்கிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணியும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணியும், கடும் போட்டியைச் சந்திக்கின்றன. இந்த முறை மாணவா்களின் எதிா்காலம் மட்டுமல்ல; இரு பெரும் தலைவா்களின் எதிா்காலமும் ஆசிரியா்களின் கைகளில்தான் இருக்கிறது.


நன்றி: தினமணி




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...