கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடைப்பயிற்சியின் பொழுது முகக்கவசம் (Mask) அணிவது நல்லதா?

 பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்வது ஒவ்வொருவருடைய உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால், கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அடர்த்தியான முகக்கவசங்கள் அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான செயலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



உடல் நலனைக் கவனத்தில்கொண்டு நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஒருபகுதியினர்தான் என்றாலும் அவர்களை இந்தக் கரோனா காலத்திலும் யாராலும் தடுக்கமுடியவில்லை. பூங்காக்கள் பூட்டப்பட்டிருந்தாலும் கடற்கரையில் அனுமதி மறுக்கப்பட்டாலும் காலை அல்லது மாலை வேளைகளில் சாலைகளில் நடைப்பயிற்சி, ஜாகிங் மேற்கொள்பவர்களை இப்போதும் பார்க்கமுடிகிறது.


‘N95’ முகக்கவசம் நல்லதா?

இவர்களில் சாதாரண நடைப்பயிற்சியை மேற்கொள்பவர்கள் ஒருசிலர் என்றால் தினமும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அதிகரித்துக்கொண்டே ஜாகிங்கில் ஈடுபடுபவர்கள் மற்றொரு பிரிவினர். பொதுவாக உடல்நலனைக் கவனத்தில் கொள்பவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றாலும் பாதுகாப்புக்காக அணியும் முகக்கவசமே பலருக்குப் பிரச்சினையாக உள்ளது. நடைப்பயிற்சி, ஜாகிங் செய்வதன் பிரதான நோக்கமே உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அதிகரிப்பதற்கும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கவும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும்தான்.


ஆனால், நடைப்பயிற்சின்போது அடர்த்தி அதிகமுள்ள N95 போன்ற முகக்கவசங்களை அணிவதால் மூச்சு இரைப்பு அதிகரிப்பதுடன் நுரையீரல் பாதிக்கப்படும் என்கிறார் ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையின் முன்னாள் இயக்குநர், மருத்துவர் ஜி.மனோகரன்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “வீட்டில் உள்ள நடைப்பயிற்சி மிஷினில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் அல்லது மொட்டை மாடி, கனரக வாகனங்களை நிறுத்துமிடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும். ஆனால் வீட்டிற்கு வெளியே சென்று மேற்கொள்ளப்படும் எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் அடர்த்தி குறைவாக உள்ள முகக்கவசம் அணிந்துகொண்டு, 10 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.


பொதுவாக நாம் நடக்கும்போது ஒரு நிமிடத்திற்கு பதினைந்து முதல் பதினாறு முறை சாதாரணமாக மூச்சுவிடுவோம். இதுவே நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களுக்கும் அதிகளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். இதனால் அதிக அளவு மூச்சுவிடத் தொடங்குவோம். அதேபோல் சாதாரணமாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு எழுபத்து இரண்டு முறை இதயத் துடிப்பின் அளவு இருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடும் அளவைப் பொறுத்து இதயத் துடிப்பின் அளவும் ஒரு நிமிடத்திற்கு தொண்ணூறு முதல் நூறு முறை துடிக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடும்போது ஹீமோகுளோபின் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும். பொதுவாக குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாடு நூறு சதவீதம் இருக்கும். பெரியவர்களுக்கு சற்று குறைவாக 96, 97 என்ற அளவில் இருக்கும். இது சாதாரணமாக ஒருவருக்கு இருக்கக்கூடிய அளவுதான்.


நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள் அணியும் நான்கு, ஐந்து லேயர்களைக் கொண்ட N95 முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை. அடர்த்தி அதிகமுள்ள இந்த வகை முகக்கவசங்களை அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, ஜாகிங் செய்வதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு உடல் திசுக்களுக்கு அதிகளவு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும். இந்தச் செயல் காரணமாக நுரையீரல் தேவையில்லாத சிரமத்திற்கு உள்ளாகும். நாம் எந்த நோக்கத்திற்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோமே அந்த நோக்கத்தையே இந்த முகக்கவசம் கெடுத்துவிடுகிறது.


தண்ணீரின் அடியில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூச்சை அடக்க முடியாமல் திணறி வெளியே வருவதுபோல் அடர்த்தி அதிகமுள்ள முகக்கவசங்களை அணிந்துகொண்டு நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஒருகட்டத்திற்கு மேல் மூச்சு இரைப்பு அதிகமாகி மூச்சுவிட முடியாமல் சிரமத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும். மேலும் N95 முகக்கவசம் அணிந்துகொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உண்டாகும் வியார்வைத் துளிகள் எல்லாம் அந்த முகக்கவசத்தில் ஊறி முகக்கவசத்தை மற்றொரு முறை பயன்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். வியர்வையுடன் உள்ள முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிந்துகொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மூச்சுக்குழாயில் வேறு சில பிரச்சினைகள் உண்டாகும். சாதாரண முகக்கவசங்களை அணிந்துகொண்டு மக்கள் கூட்டம் அதிகமில்லாத காலை வேளைகளில் ஒருவர் நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இந்தக் கரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்” என வலியுறுத்துகிறார் மருத்துவர் ஜி.மனோகரன்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-11-2024

      பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ...