தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை (PPE) - ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்...


 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பி.பி.இ., உடை (முழு கவச உடை), வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

சட்டசபை தேர்தல் நடத்துவதால், 'கொரோனா' தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர் அனைவருக்கும் சானிடைசர் வழங்கவும், வலது கையுறை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ராஜாமணி நேற்று கூறியதாவது: நம் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 4,427 ஓட்டுச்சாவடிகளில், 22,150 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். இவர்கள், 'கொரோனா' தடுப்புக்கான பி.பி.இ., உடை அணிந்து, பணியில் ஈடுபடுவர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இருப்பர். இவர்கள், தற்போது வீடு வீடாக, தபால் ஓட்டுச்சீட்டுக்கான படிவங்களை வினியோகிக்கின்றனர்.

தேர்தல் நாளன்று, அதே ஓட்டுச்சாவடியில் பணியில் இருப்பர். மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச் செல்ல, தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர்.ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், 'தெர்மல் ஸ்கேனிங்' செய்யவும், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும், கையுறை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கையுறை அணிந்த பிறகே, ஓட்டு இயந்திர பொத்தானை அழுத்த, வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.

ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முக கவசம், பி.பி.இ., உடை, கையுறை ஆகியவற்றை ஓட்டுச்சாவடி வாரியாக வாகனங்களில் சென்று சேகரித்து, உரிய முறையில் அழிக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், கொரோனா பாதிக்கப்பட்டோர், தபால் ஓட்டளிக்க வசதியாக, வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கப்படுகின்றன. அதை பெற்றுக்கொள்வோர், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டும் ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

சிக்கியது ரூ.5.56 லட்சம்: கோவை வடக்கு தொகுதியில், ஜி.சி.டி., கல்லுாரி அருகே, தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியில், இரு சக்கர வாகனத்தில் வந்த கார்த்திகேயன், 5.56 லட்சம் ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தொகைக்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட தொகை, வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊடகங்களும் கண்காணிப்பு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஊடக கண்காணிப்பு மற்றும் அனுமதி வழங்கும் குழு செயல்பட துவக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்னணு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன.

அதேபோல், அச்சு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், விளம்பரங்களும் கண்காணிக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும், விளம்பரங்கள் வெளியிட இக்குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.போலீசாருக்கு விடுமுறை 'கட்' தேர்தல் பணியில், மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அமைதியான முறையில், தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் தலைமைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'சட்டசபை தேர்தல் வருவதால் போலீசாருக்கு விடுமுறை இல்லை. இதுதொடர்பாக, அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும். மிகவும் அத்யாவசிய தேவைக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையெழுத்து விழிப்புணர்வு: தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 6ல் நடக்கிறது. வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ரங்கோலி கோலமிடுதல், கையெழுத்திடுதல், வாகன ஊர்வலம் போன்றவை நடத்தப்படுகின்றன. கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பு அருகே, பிளக்ஸ் பேனரில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தொகுதி தேர்தல் அலுவலர் சாந்தாமணி, மதுக்கரை தாலுகா தாசில்தார் நாகராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது.

வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் சசிகுமார், குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பாலதுரைசாமி, உதவியாளர் மணி மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, கையெழுத்திட்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...