தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படாமல் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிகமாக பரவும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளில் நேரடி முறையில் தேர்வுகள் நடத்தப்பட முடியாது என்பதால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற முடியாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் அவர்களுக்கு மே மாதம் 3 முதல் பொதுத்தேர்வுகள் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வு மே 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
ஆனால் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைபடி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். எனவே தொற்று குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.