மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகள் நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இதேபோல மருத்துவ மேற்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் மத்திய அரசு நுழைவுத் தேர்வை கொண்டு வர திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டில் இளங்கலை படிப்புகளுக்கு மட்டுமே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், முதுகலை, முனைவர் படிப்புகளில் சேர தனித்தனியாகவே நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்றும் அவர் கூறினார். உயர்தர திறனறித் தேர்வாக 3 மணி நேரங்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும், தேர்வை தேசிய தேர்வு முகமையே நடத்தும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.